Tuesday, July 19, 2016

இலங்கையின் நிலைபேரான இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.. கென்யா அங்ராட்14 வது அமர்வில் றிசாத் உரை..

Published by Madawala News on Tuesday, July 19, 2016  | 


சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நைரோபி கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது கூட்டத்தொடரில் இலங்கைக்குத் தலைமைத்தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரின் உரை மாநாட்டு மண்டபத்திலிருந்து ஐ.நா வெப்தள வானொலி ஒன்றின் மூலம் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

'தீர்மானங்களில் இருந்து நடவடிக்கைககளுக்கு' என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது.

இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் அமைச்சு மட்டத்திலான விவாதங்கள் உயர்மட்ட வட்டமேசை மாநாடுகள் உலக முதலீட்டு அமையம் உலகளாவிய பண்டங்கள் தொடர்பிலான அமையம் இளைஞர் அமைப்பு சிவில்சமூக அமைப்பு ஆகியவற்றின் நிகழ்ச்சிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. 

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்
நான்கு ஆண்டுகளுக்கு முன் 2012 ஏப்ரலில் டோஹா கட்டார் மாநாட்டில் உலகளாவிய பொருளாதாரம் வர்த்தகம் நிதி மற்றும் சூழலியல் கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது அக்கறையை வெளிப்படுத்தி இருந்தோம். 

அதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னே இந்த முன்னெடுப்புக்களை நாங்கள் தொடர சித்தமாக இருக்கின்றோம்.

உலகப் பொருளாதார நிலை மிகவும் மந்தகதியான அபிவிருத்தியில் செல்கின்றது. நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களுடைய அடைவுகள் குறைவாகவே காணப்படுகின்றது. தலா வருமான இடைவெளி விரிவடைந்துள்ளது. 

சமூகப்பொருளாதார அபிவிருத்திக் குறைவால் ஏற்பட்ட வறுமை பட்டினி உணவுப் பாதுகாப்பு தொழிலின்மை சமத்துவமின்மை தொழில்நுட்ப யுகத்தை நோக்கிச்செல்ல முடியாத நிலை காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் கைத்தொழில் மயமாக்கல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் புதிய மாற்றங்களுக்கான சந்தர்ப்பங்கள் ஆகியவை உலக பொருளியல் பெருமானத் தொடருக்கு ஏற்றவாறான பங்களிப்பை நல்க அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

நாடுகளின் விஸ்தீரணம் சனத்தொகை வளங்கள் மாறும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் நாடுகளுக்கு நாடு வேறுபடுவதன் காரணமாக அந்த நாடுகள் பெறுகின்ற அடைமானமும் வேறுபடுகின்றது.

உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் உலக வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள் உலகப் பொருளாதார அமையம் ஆகியவைகள் பிரசுரிக்கும் அபிவிருத்தி அறிக்கைகள் இவற்றைப் பிரதிபலிக்கின்றன. அத்துடன் உலகளாவிய பிரதிமைகளும் இவ்வாறான அக்கறையை முடிக்கிவிட்டுள்ளன.

2030 ஐ.நா நிகழ்ச்சி நிரல் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான அடிக் அபாபா நடவடிக்கை நிகழ்ச்சி நிரல் 2015-2030 காலப்பகுதிக்குரிய அனர்த்த இடருக்கான சென்டாய் செயல்திட்டம் சூழலியல் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறிய பொருளாதார அமைப்புக்குரிய நாடுகளின் பலதரப்பட்ட வர்த்தக சூழல் உலகளாவிய வர்த்தக நிலைமைகளில் தங்கியுள்ளது. சர்வதேச முகவரகங்கள் தத்தமது வேலைப்பாட்டைச் சரியாக வரையறுத்து ஒத்துழைப்பு நல்கி சகல உறுப்புரிமை நாடுகளும் நன்மை கிடைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். 

இந்த செயற்பாட்டிலே உறுப்பு நாடுகள் தமக்கு வேண்டிய கொள்கைகளை அடைவதற்கும் வேறுபட்ட கொள்கை உடையோரை நெகிழ்வுத்தன்மையுடன் ஒருமுகப்படுத்துவதற்கும் இரு தரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு பேணப்பட வேண்டும்.

நிலைபேரான அபிவிருத்தி இலக்கை அடைவதில் இலங்கை இவ்வாறான பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளது. 

நீண்டகாலமாகப் புரையோடி இருந்த உள்நாட்டு நெருக்கடிக்கு 2௦09 இல் எம்மால் தீர்வுகாண முடிந்தது. எமது நாடு தன்னை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் போட்டியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் புனரமைப்பு பாதிப்புற்ற மக்களின் நிலைபேரான அபிவிருத்தி ஆகியவை தொடர்பில் மாறுபட்ட உலகளாவிய பொருளாதார நிலைமைக்கு முகம்கொடுத்து வருகின்றது.

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசாரம் பொருளாதாரா அபிவிருத்தி இலக்கை அடைய உதவியாக இருப்பதால்இ நாம் அபிவிருத்தியின் பால் படிப்படியாக நகர்ந்து வருகின்றோம். அத்துடன் பல்வேறு அம்சங்களில் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை நோக்கி நாம் குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறிச் செல்கின்றோம். அத்துடன் சர்வதேச முகவரகங்களில் இருந்து வளங்களைப் பெற்று 2030இல் நிலைபேரான அபிவிருத்தி இலக்கை அடையமுடியும் என்று நாம் நம்புகின்றோம்.

சீனா மற்றும் 77 குழுக்கள் பிரகடனத்துக்கு எமது பாரிய ஒத்துழைப்பையும் நல்குகின்றோம்.எல்லா நாடுகளும் நிலைபேரான அபிவிருத்தியை அடைவதற்காக அவ்வவ் நாடுகளுக்கு தொழில்நுட்ப வசதிகளையும் இன்னோரன்ன வசதிகளையும் வழங்குவதில் அங்ராட் அமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கும் என நான் திடமாக நம்புகின்றேன்.இலங்கை தனது அபிவிருத்தி நடவடிக்கையில் அங்ராட் நிபுணத்துவ சேவையாளர்களினால் பல்வேறு நன்மைகளைப்பெற்று வருகின்றது. 

எதிர்காலத்தில் அங்ராட் அமைப்பின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் இலங்கை தொடர்ச்சியான ஒத்துழைப்பை நல்கும் என நான் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த 14வது கூட்டத்தொடரை கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா கடந்த 17ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

                                 
 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top