Saturday, July 23, 2016

வலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்!

Published by Madawala News on Saturday, July 23, 2016  | 


-Kalaiyarasan Tha -
22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த கொலை வெறி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய இளைஞன் Ali Sonbolyஈரானிய வம்சாவளியை சேர்ந்த ஜேர்மனிய இளைஞன் என்ற தகவல் வந்ததும், இதுவும் வழமையான "ஐ.எஸ். சுடன் தொடர்புடைய முஸ்லிம் பயங்கரவாத" தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி விட்டார்கள்.

சில புலம்பெயர்ந்த தமிழர்களும் "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பாவில் இஸ்லாமியர் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் துடைத்தழித்து விடுவார்கள்" என்று சாமியாடினார்கள். உள்மனதில் இருந்த தமது அவாவை செய்தி போன்று சொன்னவர்கள், ஒரு காலத்தில் தமிழர்களும் அப்படியான நிலைமையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றார்கள்.

மியூனிச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. நிருபர், இது தீவிர வலதுசாரிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று ஊகித்திருந்தார். வேறு பலரும் அவ்வாறான ஊகத்தை தெரிவித்தனர். அதற்குக் காரணம் என்ன? தாக்குதல் நடந்த திகதியை பாருங்கள்:22-07-2016. அன்று என்ன விசேஷம்? மிகச் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் நோர்வேயில் ஒஸ்லோ நகரில் 77 இளைஞர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

நோர்வே ஒஸ்லோ நக‌ருக்கு அருகில் ஒரு வ‌ல‌துசாரி - பாஸிச‌ பய‌ங்க‌ர‌வாதிக‌ளால் ப‌டுகொலை செய்ய‌ப் பட்ட‌ 77 இளைஞ‌ர்க‌ளும், தொழிற்கட்சியின் இளைஞ‌ர் அணியை சேர்ந்த‌வர்கள். அன்டெர்ஸ் பிறேவிக் என்ற தீவிர வலதுசாரி, அவர்கள் "இட‌துசாரிக‌ள்" என்ற‌ வெறுப்புண‌ர்வின் கார‌ண‌மாக‌ சுட்டுக் கொன்றான். அந்தப் பாஸிச பயங்கரவாதியினால் கொல்லப் பட்ட "இட‌துசாரி" இளைஞர்க‌ளில் ஒர் ஈழ‌த் த‌மிழ்ப் பெண்ணும் அட‌ங்குவார். 

ஒஸ்லோவில் நடந்த கொலைவெறித் தாக்குதலின் ஐந்தாண்டு நினைவுநாளில் மியூனிச் தாக்குதலும் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மியூனிச் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் நோர்வீஜிய வலதுசாரி பயங்கரவாதி அன்டெர்ஸ் பிறேவிக்கின் படத்தை தனது வாட்ஸ் அப் புரபைலாக வைத்திருந்தான். இந்தத் தகவலை, கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய பொலிசார், பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாட்ஸ் அப் புரபைலில் பிறேவிக் படம் இருந்ததை நண்பர்களும் உறுதிப் படுத்தி உள்ளனர். ( http://www.bbc.com/news/world-europe-36874497)

கொலையாளி ஒரு பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து, மியூனிச் நகரில் ஒரு குறிப்பிட்ட மக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு பலரை வரவழைத்து இருக்கிறான். இன்று அங்கு இலவசமாக உணவு கிடைக்கும் என்று அழைப்பு விடுத்திருக்கிறான். ஒலிம்பியா வணிக வளாகத்தில் இருந்த மக்டொனால்ட்ஸ் உணவத்திலும் சில பருவ வயதினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி அங்கிருந்து தப்பியோட எத்தனித்து இருக்கலாம். அவனது வீட்டில் "தற்கொலைப் பிரகடனம்" எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர். 

அண்மைக் காலமாக ஐரோப்பாவில் நடந்து வரும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உடனுக்குடன் "இஸ்லாமிய பயங்கரவாத" சாயம் பூசுவது வழமையான விடயம். சிலநேரம், பொலிஸ் அல்லது அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக் கொண்டு வதந்திகளை கிளப்பி விடுகின்றன. ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து விட்டு, எங்கோ இருக்கும் ஐ.எஸ். அதற்கு உரிமை கோருவது உச்ச பட்ச காமெடி. 

இந்த தடவை அது போன்ற காமெடிக் காட்சிகள் எதுவும் அரங்கேறவில்லை. சம்பவம் நடந்தவுடனே, "இதோ பார்த்தீர்களா? (இஸ்லாமிய) அகதிகளை உள்ளே விட்டதன் விளைவைப் பார்த்தீர்களா?"என்று வலதுசாரிகள் பிரச்சாரம் செய்யக் கிளம்பி விட்டார்கள். இது போன்ற அரசியல் அழுத்தம் எதற்கும் அடி பணியாமல், ஜெர்மன் பொலிஸ் பொறுப்புடன் நடந்து கொண்டது. 

இந்த இடத்தில், சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நீஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவமும், எவ்வாறு ஊடகங்களினால் திரித்துக் கூறப் பட்டது என்பதை இரை மீட்டுப் பார்ப்பது நல்லது:

பிரான்ஸ், நீஸ் நகரில் 80 பேரைக் கொன்ற தாக்குதலில், லாரி ஓட்டிச் சென்ற "பயங்கரவாதி", பொருளாதாரக் கஷ்டம், பண நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட நபர். 

சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை. பெயரில் முஸ்லிமான அந்த நபர் மத நம்பிக்கையற்றவர். ஒரு நாளும் மசூதிக்கு சென்றதே கிடையாது. வீட்டில் கூட தொழுதிராதவர். 

அவரை நன்கு அறிந்த அயலாரும், நண்பர்களும் இந்தத் தகவலை தெரிவித்தனர். சமீப காலமாக பண நெருக்கடிக்கு ஆளானது மட்டுமல்லாது, மண முறிவு காரணமாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். (பார்க்க: http://www.leparisien.fr/faits-divers/attentat-a-nice-les-papiers-d-identite-d-un-franco-tunisien-retrouve-dans-le-camion-15-07-2016-5969385.php )

வழமை போல ஊடகங்கள் இதற்கு கண்,காது,மூக்கு வைத்து, உலகத் தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கு தீவிரவாதத் தாக்குதலாக்கி விட்டன. மர்ம நபர் ஓட்டி வந்த லாரியில் "பயங்கர ஆயுதங்கள்" கண்டுபிடிக்கப் பட்டதாக ஊடகங்களில் சொல்லப் பட்டது. ஆனால், லாரிக்குள் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி மட்டும் இருந்ததாக, நெதர்லாந்து தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டது. 

மேலும் 80 பேர் கொல்லப் பட்டதற்கு லாரி மோதியது மட்டுமே காரணம் என்று சொல்லப் படுவதும் சந்தேகத்திற்குரியது. அந்த நேரத்தில் பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப் பட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வான வேடிக்கையை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை, அந்த இடத்தில் இருந்த டச்சு சுற்றுலாப்பயணி ஒருவர், டச்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார். 

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top