Ad Space Available here

ஒலுவிலை காப்பாற்றுங்கள் - மாகாண சபையில் தவம் உரை...

(எம்.ஐ.எம்.றியாஸ்)

ஒலுவிலை காப்பாற்றுங்கள் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் தவத்தின் உருக்கமான வேண்டுகோள் நான் இந்த சபையில் இன்று ஒலுவில் கிராமத்தை அலங்கரிக்க அதிகாரம் தாருங்கள் என்று கேட்க வரவில்லை. ஒலுவில் கிராமத்தை அபிவிருத்தி செய்ய கோடிக்கணக்கில் நிதி தாருங்கள் என்று கேட்பதற்காக எழுந்து நிற்கவில்லை. ஒலுவில் மக்களுக்கு தொழில் தாருங்கள் என்று பேச முனையவில்லை. இவை எதுவுமே இப்போதைக்கு எங்களுக்கு வேண்டாம் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினூடாக எனக்குக் கல்வி தந்த ஒலுவிலைக் காப்பாற்றுங்கள் எனது ஆளுமையை உலகுக்கு வெளிக்காட்டிய ஒலுவில் மண்ணைக் காப்பாற்றுங்கள் எனக்கு வாக்களித்து இந்தச் சபைக்கு அனுப்பிய ஒலுவில் மண்ணைக் காப்பாற்றுங்கள் முஸ்லிம் தேசியக் கோட்பாடான ஒலுவில் பிரகடனத்தை தன்னில் சுமந்து நிற்கும் எங்கள் மண்ணைக் காப்பாற்றுங்கள் கடலினால் காவு கொள்ளப்படும் அப்பாவி ஏழை மக்களின் கிராமத்தைக் காப்பாற்றக் கைகோருங்கள் என்று கேட்கவே எழுந்து நிற்கிறேன் என்று உருக்கமாக உரையாற்றினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்கள் தெரிவித்தார்.

இன்று (21) கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாசே கலபதி தலைமையில் இடம்பெற்ற போது, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேகமான கடலரிப்புத் தொடர்பில் அவசரப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தே தவம் அவர்கள் மேற்கண்டவாறு உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை சபையில் சமர்ப்பித்து அவராற்றிய உரையைக் கேட்டுக் கொண்டிருந்த, அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் எல்லோருடைய முகங்களிலும் ஒருவித சோகம் கலந்த அனுதாபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

யாரோ? எங்கோ? விட்ட தவறுக்காக ஒலுவில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. சுமார் இரண்டு சதுரக் கிலோமீட்டர் நிலமும், அதில் இருந்த தென்னை மரங்களும்,கட்டிடங்களும், நீர்த்தாங்கியும் ஏற்கனவே கடலினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

இப்போது சுற்றுலா விடுதியும் வெளிச்ச வீட்டுக் கோபுரமும் மட்டுமே எஞ்சியிருக்கிறது.இப்போது அரிக்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் ஓரிரு தினங்களில் அவையும்காவு கொள்ளப்படலாம்.இத்துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்திய வள அறிக்கை பெறப்பட்டதில் தவறு நடந்திருக்கிறதா? அல்லது நிர்மாணப் பணியினைச் செய்யும் போது கொந்தராத்துக்காரர்களால் தவறு விடப்பட்டுள்ளதா என்று விவாதம் நடாத்த இப்போ நமக்கு நேரமில்லை. இன்றுள்ள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பொருத்தமான தொழில்நுட்ப ஆலோசனையைப் பெற்று கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

கடலில் எழுந்து கரையை நோக்கி வருகின்ற அலையின் வேகத்தை பூச்சியத்திற்குக் கொண்டு வருகின்ற போது மாத்திரம்தான் இவ்வாறான கடலரிப்பைக் கட்டுப்படுத்தலாம். அதற்குரிய வடிவமைப்பிலான தடுப்புச் சுவரை ஏற்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏலவே, தென்கிழக்குப் பலகலைக்கழக உருவாக்கம், துறைமுக ஸ்தாபிப்பு, வன்பரிபான திணைக்களத்தின் நிலக் கையடக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் நுழைவுத் தடை, இராணுவ முகாம் அமைப்பு போன்ற காரணிகளால் ஒலுவில் மக்கள் தமது பெரும் நிலப்பரப்பை பறிகொடுத்து வாழ்வாதார மூலங்களை இழந்து தவிக்கின்ற போது, கைகொடுத்து உதவிய கடல்சார் மீன்பிடித் தொழிலையும் இக்கடலரிப்பு காவு கொள்வது பெரும் அவலத்தைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு பெரும் நெருக்கடிக்குள் ஒலுவில் மண்ணும் மக்களும் சிக்கித் தவிக்கின்ற போதும் உரிய அமைச்சுக்களும், துறைமுக அதிகார சபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் என்பன போதியளவு கவனம் எடுத்து நிலையான தீர்வினை வழங்க முயற்சிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். 2013 ஆம் ஆண்டு அமைச்சர் அதாவுல்லாவில் தொடங்கி, துறைமுக அபிவிருத்தி அமைச்சர், அமைச்சர் அமீர் அலி மற்றும் எமது கட்சியின்முக்கியஸ்த்தர்கள் என்று எல்லோருமே இதனை பார்த்துச் சென்ற போதும் இன்னும் தீர்வுகள்கிட்டவில்லை.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் இக்கடலரிப்பு சம்மந்தமாக பாராளுமன்றத்தில் தான் ஒரு தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பதாகக் கூறியும் இதுவரை பிரேரணை சமர்ப்பிக்கவுமில்லை தீர்வும் இல்லை.

எனவே, கிழக்கு மாகாணத்திற்குட்ட ஒரு கிராமம் கடலினால் காவு கொள்ளப்படுவதை கண்ணிருந்தும் குருடர்களாக தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதை இச்சபையும் முதலமைச்சரும் உணர்ந்து கொண்டு, இவ்விடயத்தை பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டுமெனவும் மேலும் அவர் கூறினார்.

தவத்தின் பிரேரணைக்கு,

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் பதிலளித்துப் பேசிய போது, இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும், ஒழுவிலுக்கு நேரடியாகத் தான் சென்று பார்வையிடுவதாகவும் உறுதியளித்தார்.

ஒலுவிலை காப்பாற்றுங்கள் - மாகாண சபையில் தவம் உரை... ஒலுவிலை காப்பாற்றுங்கள் - மாகாண சபையில் தவம் உரை... Reviewed by Madawala News on 7/22/2016 07:55:00 PM Rating: 5