Tuesday, July 12, 2016

சுயநல அரசியல் இலாபங்களுக்காக சிலர் முட்டாள் தனமாக பேசுவதால் முஸ்லிம் சமூகத்திற்கே ஆபத்து...

Published by Madawala News on Tuesday, July 12, 2016  | 


முட்டாள் தனமாக பேசுவது ஆபத்து என்கிறார் லாபிர் ஹாஜியார்

பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய உள்ளிட்ட இனவாத அமைப்புகளும் பேரினவாத அரசியல்வாதிகளும் போடும் தாளங்களுக்கு ஏற்ப முஸ்லிம்கள் ஆட எத்தனித்தால் விளைவுகள் மோசமடையும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான ஜெ.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) தெரிவித்தார்.

முட்டாள் தனமாக பேசுவது ஆபத்து என்கிறார் லாபிர் ஹாஜியார்
பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய உள்ளிட்ட இனவாத அமைப்புகளும் பேரினவாத அரசியல்வாதிகளும் போடும் தாளங்களுக்கு ஏற்ப முஸ்லிம்கள் ஆட எத்தனித்தால் விளைவுகள் மோசமடையும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான ஜெ.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) தெரிவித்தார்.

சுயநல அரசியல் இலாபங்களுக்காக சிலர் முட்டாள் தனமாக பேசுவதால் முஸ்லிம் சமூகத்திற்கே ஆபத்து ஏற்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 
இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து 2011 ஆம் ஆண்டு தொடக்கம் பல காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டன. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுராதபுரத்தில் தர்காவொன்று தகர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தம்புள்ளை, குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகள், கிராண்பாஸ், கேகாலை, காலி, மஹர, மஹியங்கனை, கொலன்னாவை, தெஹிவளை, ராஜகிரிய, அக்குறணை உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிவாசல் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் பதுளை, பாணந்துறை, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் வியாபாரத்தின் மீது இலக்குவைத்து பல பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. கூரகல ஜெய்லானி பகுதிகளிலும் பல முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. மூதூரில் புத்தர் சிலை வைக்கப்பட்டது.

கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இவற்றுக்கப்பால் அளுத்கம, பேருவளை, தர்காநகர், வெலிப்பன்ன துந்துவ போன்ற பகுதிகளில் பேரினவாதிகள் கலகம் மேற்கொண்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர்.

இவ்வாறு பல மோசமான பதிவுகளை பேரினவாதிகள் மஹிந்த ஆட்சியில் நிகழ்த்திய தைரியத்தில் நல்லாட்சியிலும் அவர்களது பல வேலைத்திட்டங்களை அரங்கேற்றியிருக்கின்றனர். 

கடந்த அரசாங்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு இன்றுவரை நீதி பெறப்படவில்லை. இவ்வாறிருக்கையில் மீண்டுமொரு வன்முறையை தூண்டும் வண்ண கடும்போக்குவாதிகள் முஸ்லிம்களை மீண்டும் சீண்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் தூண்டுதல்களுக்கு நாம் இயங்கக் கூடாது. 

பொது பல சேனா அமைப்பு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் இழிவாக பேசிக்கொண்டிருக்கின்றது. அவற்றை நாம் சட்ட ரீதியாகவே அணுக வேண்டும். மாறாக அவர்களை போன்று நாமும் இனவாதம் பேசக் கூடாது. 

அண்மையில் ஒரு அரசியல் வாதியால் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது முஸ்லிம்களை சாதாரண பௌத்த சிங்கள மக்களும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைக்கும் அளவுக்கு மோசமானதாக இருந்தது. இவ்வாறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை. அத்துடன் தற்கொலையை வன்மையாக கண்டித்திருக்கிறது.

இவ்வாறிருக்கையில் இனவாத தீயிற்குள் குளிர்காய நினைக்கும் குறித்த அரசியல்வாதியின் கருத்து பேரினவாதிகளுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. இவருக்கும் இனவாதிகளுக்கு வித்தியாசம் இல்லாமல் போயிருக்கிறது.
 
முஸ்லிம் சமூகத்தின் பெயர் தாங்கிக் கொண்டு சமூகத்தை சிக்கலுக்குள் கொண்டு செல்லும் விதமாக வெறுப்புப் பேச்சு பேசியவர்களும் கைதுசெய்யப்பட வேண்டும். 

அத்துடன் இவ்வாறான சுயநல அரசியல்வாதிகளின் கருத்துக்கள் குறித்து முஸ்லிம்கள் அவதானமாக செயற்படவேண்டும்.முட்டாள் தனமான கருத்துக்களை இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இனவாத கருத்துக்களுக்கு நாம் துணைபோகக் கூடாது என்றார். 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top