Ad Space avaiable

கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தலைமைத்துவத்தை ஏற்காதவர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற முடியுமா?

(ஏ.எல.எம்.அஸ்லம்)
 தற்போதைய கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் பின்வாங்கும் தலைமைத்துவத்தை உடையவர். அவ்வாறான ஒருவரின் கீழ் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவது வெட்கக்கேடான விடயம் எனத் தெரிவித்து இவரின் கீழ் ஒரு வலயக்கல்விப் பணிப்பாளராக இருப்பதை விட ஒரு சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக இருப்பது மேலானது எனத் தெரிவித்த மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் எவ்வாறு அதே கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் கீழ் ஒரு வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற முடியும் என்ற கேள்வியை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் ஜனாப். ஏ.எல்.எம்.முக்தார் எழுப்பியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
 
தற்போதைய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.கே.எம்.மன்சூர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சமயம் அங்கு ஏற்பட்ட ஆசிரிய இடமாற்றம் தொடர்பான அமைதியின்மையின் போது சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது அவ்வூர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஆத்திரம் கொண்ட ஆசிரியர்களாலும் பொதுமக்களாலும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
 
இதனை அடுத்து சம்மாந்துறை நெற் என்ற இணையத்தளத்திற்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அந்நேர்காணலில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரைப்பற்றி மேற்கூறிய வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்ததுடன் அவரின் கீழ் கடமையாற்றுவதென்பது வெட்கக்கேடானதொரு விடயமாகுமென பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
 
இதன்பின்னர் அங்கு ஏற்பட்ட தளபாடத் திருத்த மோசடி தொடர்பாக மூவரடங்கிய விசாரணைக்குழுவினரால் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைக்கப்பட்டு தனது சேவையை விட குறைந்த தர சேவைப் பதவியான உதவிச் செயலாளர் அந்தஸ்தில் இணைக்கப்பட்டிருந்தார். அவ்வாறு இணைக்கப்பட்ட சமயம் அவர் கூறிய கருத்து கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தலைமைத்துவத்தை ஏற்று தான் ஒரு மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகவோ அல்லது ஒரு வலயக்கல்விப் பணிப்பாளராகவோ இருப்பதை விட கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சுச் செயலாளரின் கீழ் உதவிச் செயலாளராக இருப்பது பொருத்தமானது என்பதாகும்.
 
இவ்வாறு கூறிய வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர் எவ்வாறு கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தலைமைத்துவத்தை ஏற்று அம்மாகாணக்கல்விப் பணிப்பாளரின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் வலயத்திற்கு என்ன காரணத்திற்காக அமைச்சிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றார். இதற்காக ஏன் நீதிமன்ற உதவியை நாடினார் என்பதை அவர் கிழக்கு மாகாணக்கல்விச் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
 
குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் அண்மையில் ஆசிரியை ஒருவருடனான பிரச்சினையில் சிக்கி பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகி அவரை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதுடன் பல துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தலைமைத்துவத்தை ஏற்காதவர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற முடியுமா? கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தலைமைத்துவத்தை ஏற்காதவர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற முடியுமா? Reviewed by Madawala News on 7/30/2016 10:14:00 PM Rating: 5