tg travels

முஸ்லிம் அரசியலும் பணமும் பதவிகளும்...


இலங்கை முஸ்லிங்களின் உரிமைகளும் அடிப்படை பிரச்சினைகளும் தீருமா? முஸ்லிங்களுக்கான தீர்வுகள் முஸ்லிம் மக்களை உரிய முறையில் வந்தடையுமா?

முஸ்லிங்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பேச யாருமில்லாமல் அனாதையாக வாழ்ந்த வரலாறு மறந்தவர்களா தற்போதைய அரசியல்வாதிகள்? அல்லது மறந்து போல நடிக்கிறார்களா?

முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகளையும் பிரச்சினைகளையும் அடைவதற்கான பயணத்தில் சங்கமமான உன்னதமான உறவுகள் எங்கே? தற்போதைய முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே?

எவ்விதமான நிபந்தனையுமற்ற சமூக உணர்வுகளை கொண்ட மாமனிதர்களை உதாரணமாக்க வேண்டாமா? அவர்கள் சமூகத்திற்காக கண்ட கனவினால் அவர்கள் இழந்த நின்மதியையும் தூக்கத்தையும் யாராலும் திருப்பி கொடுக்க முடியுமா? அதற்கு விலை நிர்ணயிக்கத்தான் முடியுமா? அந்த நன்றிக்கடனுக்காகவாவது உள்ளங்களை சமூகத்தின் பக்கம் திருப்ப மாட்டார்களா?

வெள்ளத்தில் அள்ளுண்டு போகும் சருகளைப் போல பெரும்பான்மை சமூக அரசியலிலும் தமிழ் சமூக அரசியலிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாற்றில் காணப்படடவர்களை, முஸ்லிம் தனித்துவ சிந்தனை ஊடாக முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க வேண்டும் என்ற பயணத்தின் போது பட்ட துன்பங்கள் துயரங்கள் இயலாமைகள் வேதனைகள் அவமானங்கள் எல்லாவற்றையும் கண்டு கொள்ளாமல் , எவ்வித வெகுமதிகளை எதிர்பாராமல் சமூகத்திற்காக வியர்வை சிந்திய அழகிய முன்மாதிரி மனிதர்களை போல நாம் மாறக்கூடாதா?

தற்போதைய இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் உரிமையையும் அபிவிருத்தியையும் பிரச்சினையும் பற்றி பேசுவது என்றால், அதில் அவர்களுக்கு ஏதாவது இலாபம் இருக்க வேண்டும் என்கிற படு மோசமான சிந்தனை முறையை கொண்டுள்ளார்கள். அதன் இன்னுமொரு நிலை தான் பண வசதி உள்ளவர்களை தன்னோடு வைத்து கொண்டு, மக்களை மண்டியிட வைப்பதும், பணத்திற்காக எதுவும் செய்ய கூடிய கீழ்த்தரமான சிந்தனை போக்கு கொண்டவர்களாக மாறியுள்ளதும்.

சுயநல சிந்தனையுடன் பதவிக்காகவும் புகழுக்காகவும் முஸ்லிங்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் காலால் ஏறி மிதித்து விடும் கேவலமான வக்கிர சிந்தனையுள்ளவர்களாக மாறியுள்ளார். இதில் இன்னும் சில பேர் கொடிகளை கொடுத்து எப்படியாவது பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசியல் வாதிகளை நன்றியுள்ள மிருகங்கள் போல பின்தொடருகிறார்கள்.

அப்பாவி பாமர மக்களும் ஏழை மக்களும் இவர்களின் தேர்தல் கால பகட்டு வாக்குறுதிகளை நம்பி அடுத்த தேர்தல் வரும் வரையும் காத்து கிடந்தது தான் மிச்சம். பாவம் அந்த மக்கள்.

சமூக சிந்தனையுள்ள சிறந்த ஆளுமையுள்ள எத்தனையோ பேர் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கும் மிரட்டல்களுக்கும் பயந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். இது சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பதை மறவாதீர்கள்.

சமூக எக்கேடு கேட்டு போன என்ன என்று நினைத்து விட்டு, உங்கள் வீடுகளில் உண்டு குடித்து விட்டு, பெருமூச்சு விட்டு கொண்டு பஞ்சு மெத்தைகளில் நின்மதியாக உறங்கலாம். ஆனால், வெளியில் எத்தனையோ உறவுகள் உண்ண உணவின்றி அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் வேதனைப்பட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று, நமக்கும் விடிவு பொறக்காதா என்று தினம் தினம் ஏங்கி தவித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த உறவுகளுக்கான, உங்களின் பதில் தான் என்ன?

சற்று தலை நிமிர்ந்து நின்று நிதானமாக பாருங்கள். மக்கள் படும் அல்லல்களை. நாளை உங்களுடைய சந்ததியும் இந்த நிலைமைக்கு ஆளாகலாம்.

கஷடங்களையும் வேதனைகளையும் சுமந்த கொண்டு நமக்கு விடிவு பொறக்காதா என்ற ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் நின்மதி இழந்து கழித்த அப்பாவி மக்களோடு நாம் பயணிப்பதா?

மக்களை ஏமாற்றி கொண்டு பணத்திற்காக பதவிற்காகவும் புகழுக்காகவும் ஜால்றா அடிக்கும் அரசியல் வாதிகளோடு நாம் பயணிப்பதா?

நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்.

உங்களின் முடிவுகள், நாளை உங்களின் இருப்புகளை கேள்விக்குறியாக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

மனாப் அஹமத் றிசாத் 
அக்கரைப்பற்று.
முஸ்லிம் அரசியலும் பணமும் பதவிகளும்... முஸ்லிம் அரசியலும் பணமும் பதவிகளும்... Reviewed by Madawala News on 7/14/2016 09:08:00 PM Rating: 5