Thursday, July 28, 2016

காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் - செய்தி தொகுப்பு ...

Published by Madawala News on Thursday, July 28, 2016  | 


மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் ரயில் நிலையத்தில் இரண்டு முஸ்லீம் பெண்களும், கர்நாடக மாநிலம் சிக்கமங்கலூரு மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தினரும் பார்ப்பன இந்துமதவெறி பஜ்ரங்தள் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான முஸ்லீம் பெண்கள் சல்மா இஸ்மாயில்(30) மற்றும் சமீம் அக்தர் ஹூசைன் (35) இருவரும் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சாவூர் நகரத்தின் காண்புரா பகுதியை சேர்ந்தவர்கள். போலீசார் சூழ்ந்திருக்க பஜ்ரங்தள் கும்பலின் ஆண்கள் துணையுடன் அவ்வமைப்பின் பெண்கள் இத்தாக்குதலில் ஈடுபடும் வீடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

“நாங்கள் மந்த்சாவூர் பகுதிக்கு வரும் வழியில் பஜ்ரங்தள் உறுப்பினர்கள் எங்களை தடுத்து நாங்கள் கையில் என்ன எடுத்து செல்கிறோம் என விசாரித்தார்கள். எருமைக்கறி என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதாகவும் கூறினோம். ஆனால் அதை கேட்காமல் அவர்களுடன் வந்திருந்த பெண்களிடம் எங்களை தாக்குமாறு கூறினார்கள். தடுக்க முயன்ற போலீசாரையும் மிரட்டினார்கள்” என்கிறார் தாக்குதலுக்குள்ளான சல்மா.

பெண்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தாக்குதலுக்குள்ளான பெண்கள் மீதே, மத்திய பிரதேச அரசு கால்நடை பாதுகாப்பு சட்டம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது இச்சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து அப்பகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சிசோடியா “இப்பெண்கள் பசு மாமிசம் கடத்துவதாக பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அப்பெண்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள். குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மன்சூர் பகுதிக்கு மாட்டுக்கறியை கடத்தி வருகிறார்கள். சோதனையில் சிக்காமல் இருக்க பெண்களை பயன்படுத்துகிறார்கள். தாக்குதலுக்குள்ளான பெண்கள் வழக்கமான குற்றவாளிகள்தான்” என திமிராக பேட்டியளித்துள்ளான்.

இதே போன்று மாட்டை திருடி பின் அதை கொன்று சாப்பிட்டதாக கூறி கர்நாடக மாநிலம் சிக்கமங்லூரு மாவட்டத்தின் குண்டூர் பகுதியில் தலித் குடும்பத்தினர் பஜ்ரங்தள் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 30 – 40 பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இக்குடும்பத்தினரை கட்டி வைத்து இரும்பு மற்றும் கட்டைகளால் அடித்துள்ளனர். இதில் மாற்றுதிறனாளியான பால்ராஜ்(56) கடுமையான தாக்குதலுக்குள்ளாகி அவரது கைமுறிந்துள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்கிய பஜ்ரங்தளத்தினர் கொடுத்த வழக்கின் பேரின் பால்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தனு, முட்டப்பா, சந்தீப், ரமேஷ் ஆகியோர் மீது விலங்குகளை வதை செய்ததாக ஜெயபுரா நகர காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளனர். அதேபோல தலித் குடும்பத்தினர் கொடுத்த பதில் வழக்கில் பஜ்ரங்தள் உறுப்பினர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆம் மாட்டுக்கறி எங்கள் உணவு கலாச்சாரத்தின் பகுதி. அதை உண்பது சட்டப்படி தவறு என்றால் போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். இவர்கள் எப்படி அடிக்கலாம்“ என்கிறார்கள் அக்கிராம இளைஞர்கள். ஆட்டுக்கறி வாங்கும் அளவிற்கு எங்களிடம் வசதியில்லை. அது ரூ.400 -க்கு மேல் ஆகிறது” என்றும் மாட்டுக்கறியை காலம் காலமாக தாங்கள் உண்டு வருவதாகவும் தங்கள் யதார்த்த நிலையை விளக்குகிறார் தாக்குதலுக்குள்ளான பால்ராஜின் மனைவி சரசு. “ நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வமைப்பில் இருந்தோம். ஆனால் எங்கள் உணவு பழக்கத்தை எதிர்த்ததால் அவ்வமைப்பிலிருந்து விலகிவிட்டோம்” என்கிறார் அக்கிராம இளைஞர் குருமூர்த்தி.

மேலும் இம்மாட்டை இவர்கள் திருடவில்லை என்றும் தலித் மக்கள் வேலை செய்யும் எஸ்டேட்டின் முதலாளி இவர்களுக்கு கொடுத்த மாடு என்பதும் தெரியவந்துள்ளது. வழக்கமாக எஸ்டேட்டில் நுழையும் மேயும் மாடுகளை கட்டிப்போட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை யாரும் உரிமைகோரி வரவில்லை என்றால் அம்முதலாளி இம்மாடுகளை அங்கு வேலை செய்பவர்களிடம் ஒப்படைப்பது வாடிக்கை என்பதும் தெரியவந்துள்ளது. “சர்ச்சுகளையும் பள்ளிவாசல்களையும் தாக்கிக்கொண்டிருந்த பஜ்ரங்தளத்தினர் இப்போது தலித்துகளை குறிவைத்துள்ளனர். பெண்களும் இளைஞர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விதிகளை வகுத்து செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். வரலாற்று ரீதியாக மாட்டுக்கறி என்பது தலித்துகளின் உணவு. தலித்துகளின் உணவு கலாச்சாரத்தை கேள்வி கேட்க இவர்கள் யார்?” என்கிறார் இத்தாக்குதலுக்கு எதிராக போராடிவரும் சமூக அமைதிக்கான குழு என்ற அமைப்பின் அசோக்.

நாடெங்கிலும் மாட்டுக்கறியை முன்னிறுத்தி தலித் மற்றும் முஸ்லீம்களின் மீதான பார்ப்பன இந்து மதவெறி கும்பலின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. குஜராத்தில் தலித் மக்கள் இவ்வடக்குமுறைகளுக்கு எதிராக தீரத்துடன் போராடி வருகிறார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாயக அம்மாநில எழுத்தாளர் அம்ருத்லால் மக்வானா தனக்களிக்கப்பட்ட மாநில அரசின் விருதை திருப்பி தந்துள்ளார்.

இதனிடையே இந்து மத வெறியர்களின் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற முன்னுதாரணமிக்க போராட்டம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் காஷ்மீரிகளை வேட்டையாடி வரும் நிலையில், காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி பஞ்சாம் மாநிலம் பக்வாரா பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது சிவசேனா அமைப்பு. கடந்த வெள்ளியன்று தொழுகை நேரத்தில் பள்ளிவாசல் முன் அணிதிரண்ட இந்துமத வெறியர்கள் பள்ளிவாசல் மீது கல்லெறிந்துள்ளனர். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகவும், பாரத மாதாவுக்கு ஜெ சொல்லியும் பள்ளிவாசல் முன் கோஷமிட்டுள்ளனர்.

நிலைமை மோசமாவதை கண்டு ஆத்திரமுற்ற சீக்கியர்கள் கையில் கத்திகளுடன் இந்து மதவெறியர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் களம் இறங்கியுள்ளனர். இதே போல் ஆதி தர்மி மற்றும் வால்மீகி சாதி தலித்துகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இணைந்து கல்லெறிந்தவர்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்துள்ளனர். சீக்கியர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இந்து மத வெறியர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். விடாது துரத்தி சென்று தாக்கியதில் கோவிலுக்குள் நுழைந்து தங்களை காப்பாற்றிக்கொண்டுள்ளனர் இந்து மத வெறியர்கள்.

தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல்களில் இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்பகுதி சீக்கியர்கள்-முஸ்லீம்கள்- தலித்துக்கள் கலந்தாலோசித்து வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.

-வினவு-


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top