Ad Space Available here

ஆயுட்கால தலைமையும் - அஷ்-ஷைக் இனாமுல்லாஹ்வின் ஆக்கமும் ...


2016-07-24 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகத் தெரிவின் மத்திய சபை கூட்டத்தில் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் இவ்வாக்கத்தை எழுதுகின்றேன்.
அஷ்-ஷைக் இனாமுல்லாஹ்வின் ஆக்கம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்ததோடு எல்லோருக்கும் சிறந்ததொரு ஆலோசனையாகவும் அமைந்துள்ளது. 

பள்ளிவாசல்கள் நிர்வாக தெரிவின் போதும், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தலைமைக்கு ஒருவரைத் தெரிவு செய்கின்றபோதும் அஷ்-ஷைக் இனாமுல்லாஹ் குறிப்பிட்ட தவறு நடைபெறுவதைப் பார்க்கின்றோம்.
அவ்வாறே ஆயுட்கால தலைவர்கள் என தெரிவு செய்கின்றபோது இது நிகழ்கிறது. 

அதனால்தான் மஷுராவின் அடிப்படையில் பல இயக்கங்கள் தமது உத்தியோகத்தர்கள் தெரிவை நடாத்திக் கொள்கின்றன. சில வேளை ஒருவர் குறிப்பிட்ட பதவி ஒன்றுக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவு செய்யப்படுவதும் உண்டு. அப்படியானால் மஷுரா, இரகசிய வாக்கெடுப்பு என்பவை மூலமே இதனை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

நேற்று (2016.07.24) நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்த மாநாட்டில் 400 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அதில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள 144 கிளைகளினது தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிதாங்குனர்களும் செயற்பாட்டிலுள்ள நிறைவேற்றுக் குழுவும் சேர்ந்து யாப்பின் மத்திய சபையாக கணிக்கப்படுகிறது. 

இம்மத்திய சபையே ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாக சபையை தெரிவு செய்யும். இது உலமா சபையின் யாப்பின் அடிப்படையில் உள்ள நடைமுறையாகும்.
அத் தெரிவுக்கு தற்காலிக தலைவர் ஒருவரை மத்திய சபை தேர்ந்து எடுக்கிறது. அந்த தலைவர் மற்றும் பலரோடு சேர்ந்து தெரிவுக்கான வாக்கெடுப்பை செய்து முடித்து அவரே முடிவையும் அறிவித்து நிர்வாக குழுவின் உறுப்பினர்களையும் அறிவிப்பார்.

வாக்குகளுக்கு அமைய தெரிவாகும் 25 பேர்கள் தமக்குள் பதவி தாங்குனர்களையும் தெரிவு செய்வர். இந்த தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே நிறைவு பெற்றது.
சகோதரர் அஷ்-ஷைக் இனாமுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டது போன்று ஒருவர் தொடர்ந்து இரண்டுக்கும் மேற்பட்ட விடுத்தம் தெரிவாகாமல் இருப்பது ஆரோக்கியமானாதாகும்.

இருப்பினும் சபையோர் விரும்பி ஒருவரே திரும்பத் திரும்ப தெரிவு செய்வதானது நிர்வாகத்தினர்கள் மற்றும் மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை, அபிமானம் என்பதை பிரதிபலிப்பதாகும்.

அரசியல் கட்சிகளைப் போன்று பணம், ஆடை, உணவு, பொருள் வழங்கி தேர்தலில் நின்று உழைக்கும் ஒரு வழியாக இஸ்லாமிய அமைப்புகள் இருக்கலாகாது என்று கூறிய சகோதரர் அஷ்-ஷைக் இனாமுல்லாஹ்வின் கருத்தை பாராட்டுகின்றேன்.

அத்தோடு ஜம்இய்யாவில் நிறைவேற்றுக் குழு ஸ்ரீஉறுப்பினர்களாக இருப்பவர்கள் யாருக்கும் கொடுப்பனவுகளோ, மாத சம்பளங்களோ வழங்கப்படுவதில்லை. 

அவர்கள் அனைவரும் தனது கால நேரங்களை இலவசமாக ஜம்இய்யாவிற்கு வழங்கி எம் சமூகத்திற்கு பெரும் சேவைகளைச் செய்துவருகின்றமையை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாம் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இச்சபை எம் அனைவரது நடவடிக்கைகளையும் சுவனப் பாதையின் பக்கம் இட்டுச்செல்லும் பாரிய பொறுப்பை சுமந்துள்ளது. ஆதலால் இச் சபையை நாம் சிறு பிள்ளைத்தனமான சிந்தனைகள் மூலம் தகைமையில்லாத அனுபவமில்லாத தூர நோக்கற்ற பதவிமோகம் கொண்டவர்களின் கையில் கொடுத்து விட்டு கைதேசதப்படக் கூடாது.

இவ்விடயத்தில் எமது சமூகத்தை விழிப்படன் இருந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 
 
ஆயுட்கால தலைமையும் - அஷ்-ஷைக் இனாமுல்லாஹ்வின் ஆக்கமும் ... ஆயுட்கால தலைமையும் - அஷ்-ஷைக் இனாமுல்லாஹ்வின் ஆக்கமும் ... Reviewed by Madawala News on 7/25/2016 07:57:00 PM Rating: 5