Yahya

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது : வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்


இலங்கையின் பொறுப்புக்கூரலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 2016ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை வடக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக வரவேற்கின்றோம். மனித உரிமை ஆணையாளர் மேதகு ஹுஸைன் அவர்கள் தன்னுடைய இலங்கை தொடர்பான அவதானங்களை 38 முக்கிய பகுதிகளாக கடந்த 2016 ஜூன் 28 அன்று ஜெனீவாவில் வெளியிட்டிருந்தமை மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் சாதாரண பொதுமக்களாகிய எமக்கு நம்பிக்கையூட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கம் குறிப்பாக 2015 ஜனவரி 8 ற்குப் பின்னர் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் செயற்பட்டிருப்பதாக இருப்பினும், இன்னும் முன்னேற்றகரமாக செயற்படுவதற்கான தேவையினை உணர்த்திநிற்கின்றன. எங்களுடைய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் இலங்கை மக்களாகிய சுதந்திரம், ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். எங்களுடைய மனிதஉரிமைகளை சார்ந்த பொறுப்புக்கூரலை வேறுசக்திகளின் நன்மைக்காக அன்றி எமது மக்களின் நன்மைக்காகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டினை குறித்த அறிக்கை வரவேற்றிருப்பது எமக்கு மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது.

 

இதுவரைக்கும் முழுமையாகத் தீர்க்கப்படாமலிருக்கின்ற அரசியல் கைதிகளின் விவகாரம், காணமல் போனோர் விவகாரம், காணிவிடுவிப்புகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அமுலாக்கம் போன்ற விடயங்களும், அதற்காக அரசு எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலான மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானங்களும் வரவேற்கத்தக்கனவே. குறிப்பாக தென்னிலங்கைப் பிரதேசங்களில் பௌத்த தீவிர செயற்பாட்டாளர்களால முஸ்லிம் மக்களும், சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களுக்கும் ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பது ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணைக்குழுவினர் வெறுமனே வடக்குக் கிழக்கு என்ற நிலையில் இல்லாது இலங்கை என்கின்ற நாடுதழுவிய அவதானத்தை வழங்கியிருக்கின்றமையினை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

 

நல்லிணக்கம் சார் செயற்பாடுகளில்; நிலைமாறுகால நீதி என்னும் பொறிமுறையினூடாக அடைய முடியுமான பல்வேறு விடயங்கள் இருக்கின்றன என்பதை மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமையினை வடக்கு முஸ்லிம்கள் சார்பாக நாம் வெகுவாக வரவேற்கின்றோம்; ஏனெனில் 1990களிலே வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் நீதியினை நிலைநாட்டுவதற்குரிய பொறிமுறையாக “நிலைமாறுகால நீதி” ப்பொறிமுறையினையே நாம் வெகுவாக நம்பியிருக்கின்றோம். 

 

கடந்தகால கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் கதைத்துக் கொண்டிருப்பதைவிடவும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளினூடாக இழப்புகளை ஈடுசெய்யப்படுவதை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் இலங்கை அரசாங்கமும் வடக்கு மாகாணசபையும் திருப்திகரமான முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நிறுவி அதன் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத்தான தீர்வு முன்மொழிவுகளை முன்வைக்க முடியும் என்றும், அத்தகைய தீர்வு முன்மொழிவுகள் கொள்கை ரீதியானதும், நடைமுறைசார்ந்த திட்டமிடல் ரீதியானதுமாக இருத்தல் அவசியம் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டிருந்தோம், அதனையே மீண்டும் இங்கும் வலியுறுத்துகின்றோம்.

 

எனவே மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையின் பொறுப்புக்கூரலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் செயற்பாடுகளில் நம்பிக்கைதரும் விதத்தில் அனைத்துத் தரப்பினரும் தமது பற்றுருதியோடு செயற்படவேண்டும், அதனூடாக எமது நாட்டுக்கும், எமது மக்களுக்கும் நன்மைதருகின்ற ஒரு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்கின்ற வடக்கு முஸ்லிம்கள் சார்பான எமது நிலைப்பாட்டினை இத்தால் வெளிப்படுத்துகின்றோம்.

 

இவ்வண்ணம் 

ஏ.ஆர்.அப்துல் றமீஸ்,

பிரதம ஒருங்கிணைப்பாளர்

வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது : வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது : வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் Reviewed by Madawala News on 7/04/2016 05:44:00 PM Rating: 5