Thursday, July 28, 2016

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் விஷேட கவனம் செலுத்தப்படவேண்டும் :

Published by Madawala News on Thursday, July 28, 2016  | 


வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; விஷேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார் அ.அஸ்மின்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ.ஸ்டீபன் டயன் அவர்களுடனான விஷேட சந்திப்பின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய அ.அஸ்மின் அவர்கள் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;  

1990ம் ஆண்டு நாம் எமது மண்ணிலிருந்து பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டோம்; அன்று முதல் 2009 வரையான 20 வருட காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் உரிய முறையில் முக்கியத்துவத்தோடு அணுகப்படவில்லை, இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வின் பிரதான நிகழ்ச்சிநிரலில் எமது மக்களின் விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது; அதன் பின்னரும்கூட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் போதிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சர்வதேச அரங்கில் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்பதைக் கூட தற்போதுதான் எம்மால் கேட்கமுடிகின்றது, பல நாடுகளுக்கு வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என்ற விடயமே தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான சந்தர்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஒரு அரசியல் ரீதியான விடயமாக நோக்கவேண்டிய அவசியம் கிடையாது; அதனை மனிதாபிமான ரீதியில் நோக்கவேண்டும், இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்திருப்பது எப்படி சட்டவிரோதமோ அதே போன்று வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது சட்டவிரோதம், இப்போது அவர்களை மீள்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதும் சட்டவிரோதமானதே; இதற்கு அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் பொறுப்புக்கூறுதல் அவசியமாகும். இதனை இங்கு உங்களின் முன்னிலையில் வலியுறுத்த நான் விரும்புகின்றேன். 

கனேடிய அரசாங்கத்திடம் எம்முடைய இரண்டு முக்கிய வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகின்றேன். இலங்கையின் விவகாரங்கள் குறித்து நீங்கள் கருத்து வெளியிடுகின்றபோது “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அதுசார்ந்த விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுதல் வேண்டும்” என்ற விடயத்தை உங்களது கருத்துகளோடு இணைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு எமது சிவில் சமூகத்தினருக்கு ஒத்துழைப்புத்தாருங்கள். இவ்விரண்டு கோரிக்கைகளையும் உங்களதும் உங்களது அரசினதும் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். என்று தெரிவித்தார்

மேற்படி சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெலி விடிங் அவர்களும் உடனிருந்தார்.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top