Wednesday, July 27, 2016

Madawala News

முஸ்லிம் சமூகத்துக்கு மற்றுமோர் அரசியற்கட்சி?

தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் நிலவும் முரண்பாட்டின் விளைவாக கட்சி மற்றுமொரு முறை பிளவுபட்டுவிடுமோ என்ற பலத்த சந்தேகத்தைக் கட்சி உறுப்பினர்களிடையேயும் ஏனைய பொது மக்களிடையேயும் உருவாக்கியிருக்கின்றது என கடந்த மார்ச் மாதம் நாம் தமிழ் மிரருக்கு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போது அந்தப் பிளவு மேலும் அண்மித்து விட்டது என்றுதான் தெரிகிறது. மு.காவின் சிலர் கடந்த வாரம் 'கிழக்கின் எழுச்சி' என்ற பெயரில் நடத்திய கூட்டம் மு.கா மற்றுமொரு முறை பிளவு பட்டுவிட்டது என்ற செய்தியையே தருகிறது. தாம் புதிய கட்சியொன்றை உருவாக்கப் போவதாகவும் அதனை விரைவில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்போவதாகவும் 'கிழக்கின் எழுச்சியின்' முக்கியஸ்தர்களில் ஒருவரும் மு.காவின் ஆரம்ப காலத் தவிசாளர்களில் ஒருவருமான எம். எச். சேகு இஸ்ஸதீன் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. 

அண்மையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி ஆகியோருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே கிழக்கின் எழுச்சி என்ற கருத்துருவம் உருவாகியது. ஆனால் கிழக்கின் எழுச்சி ஓர் அமைப்பாக உருவெடுத்த போது அதன் முக்கியஸ்தர்களாக அதாவது தலைவராகவோ அல்லது செயலாளராகவோ சேகு தாவூத்தோ அல்லது ஹசன் அலியோ காணப்படவில்லை. 

கிழக்கின் எழுச்சியானது மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிரானதோர் போராட்டமேயல்லாது மு.காவுக்குள் ஏற்பட்ட கொள்கைப் பிரச்சினையொன்றின் விளைவல்ல. மு.காவின் கொள்கைகள் பிழையானவை என கிழக்கின் எழுச்சியின் முக்கியஸ்தர்கள் ஒரு போதும் கூறுவதில்லை. உண்மையில் மு.காவின் 30 ஆண்டு கால வரலாற்றில் அக்கட்சி சுமார் ஐந்து முறை பாரியளவில் பிளவுபட்டுள்ள போதிலும் அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொள்கை முரண்பாடு காரணமாக பிளவு ஏற்படவேயில்லை. பிரிந்து சென்றோர் என்ன தான் தத்துவம் பேசினாலும் பிளவுக்குப் பின்னால் பதவிச் சண்டையே முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. 1939 ஆம் ஆண்டு இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சமசமாஜக் கட்சி பிரிந்து செல்ல அக்காலத்தில் ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் மற்றும் லியோன் ட்ரொஸ்கி ஆகியோருக்கிடையிலான தத்துவார்த்த மோதலே காரணமாகியது. 1963 ஆம் ஆண்டு என். சண்முகதாசன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து செல்ல ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சித்தாந்த முரண்பாடே காரணமாகியது. 

1965 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி சண்முகதாசனின் கட்சியிலிருந்து பிரிந்ததற்குக் காரணமும் சித்தாந்த முரண்பாடே. அண்மையில் இதே போன்று சித்தாந்த முரண்பாடுகள் காரணமாக மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து முன்னணி சோஷலிஸக் கட்சி பிரிந்து சென்றது. இவை தவிர நாட்டில் ஏனைய சகல கட்சிகளிலும் ஏற்பட்ட ஏறத்தாழ சகல பிளவுகளும் பதவிச் சண்டைகளின் விளைவுகளே. மு.காவும் அந்த விடயத்தில் விதிவிலக்கல்ல‚ பதவிகளுக்காக மு.காவுக்குள் ஏற்பட்ட சண்டைகளை நாம் கடந்த மார்ச் மாதமும் ஞாபகப்படுத்தினோம்.

அதனை இந்தச் சந்தர்ப்பத்திலும் சுருக்கமாகவேனும் மீண்டும் நினைவுபடுத்துவது பொருத்தமாகும். ஆரம்ப காலத்தில், அதாவது 1980 களின் இறுதிப் பகுதியில் மு.காவைக் கட்டியெழுப்ப அயராது உழைத்த ஒருவர் தான் சேகு இஸ்ஸதீன். அக் காலத்தில் போதிய தளபாட வசதிகள் இல்லாத நிலையில் மு.காவின் கொழும்பு, டாம் வீதி அலுவலகத்தில் அவர் போன்ற சிலர் மிகக் கஷ்டத்துடன் கட்சிக்காக உழைத்தனர். காட்போட் விரித்து அலுவலகத்திலேயே படுத்துறங்கியவர்களும் இருந்தனர். 

அக்காலத்தில் அவ்வலுவலகத்துக்கு எந்தச் சாமத்தில் சென்றாலும் இஸ்ஸதீனை அங்கு காணக்கூடியதாக இருந்தது. அவர் அப்போது மு.கா ஸ்தாபகத் தலைவர் எம். எச்.எம். அஷ்ரப்பின் வலது கையாக இருந்தார். ஆனால் 1990 களின் ஆரம்பத்தில் அவர் திடீரென மு.காவிலிருந்து விலகினார்.

அதற்கான காரணத்தைப் பொதுவாக நாட்டு மக்களுக்கோ அல்லது அஷ்ரப்புடனும் இஸ்ஸதீனுடனும் நெருக்கமாக இருந்த எம்மைப் போன்ற ஊடகவியலாளர்களுக்கோ அவர்கள் இருவரும் கூறவில்லை. உரிய தருணத்தில் காரணத்தை விளக்குவதாகவே இருவரும் கூறினர். அது கட்சியின் பிளவு எனக் கூற முடியாத போதிலும் கட்சிக்குள் இஸ்ஸதீன் ஆற்றி வந்த பங்கை கருத்தில் கொள்ளும்போது அது சிறியளவிலேனும் ஒரு பிளவாகவும் மாறியிருக்கலாம்.

அவர் வெளியேறியதற்கான காரணம் இன்று வரை மர்மமாக இருப்பதனால் அது பதவிச் சண்டையா இல்லையா என்பது தெளிவாகவில்லை. 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிடைத்த ஓர் ஆசனத்துக்காக கட்சிக்குள் ஒரு சண்டை உருவாகியது. அதன் பின்னர் பேரியல் அஷ்ரப், அதாவுல்லா, நஸீர் அஹ்மத், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பிரிந்து சென்றனர். அந்தச் சந்தர்ப்பங்களின் போது யார் சரி யார் பிழை என்பது ஒரு புறமிருக்க, இவை அனைத்தும் பதவிச்சண்டைகள் அல்லது பணப் பிரச்சினைகள் என்பது சகலரும் அறிந்த உண்மை. முஸ்லிம்களின் குறிப்பிட்டதோர் பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களின் போது முன்வைக்கப்பட வேண்டிய யோசனைகளைப் பற்றியோ தமிழ்க் கட்சிகளுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியோ புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் போது என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியோ வேறு இவற்றைப் போன்ற சமூகத்தின் நலன்கள் விடயத்திலோ ஏற்பட்ட முரண்பாடுகளினால் இப் பிளவுகள் ஏற்படவில்லை. 

சில சந்தர்ப்பங்களின் போது பிரச்சினை வளர்ந்ததன் பின்னர் இது போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் பிளவுக்கான அடிப்படைக் காரணம் பதவிகளாகவே இருந்தன. ஹக்கீம் கிழக்கைப் புறக்கணிக்கிறார் என்பது கிழக்கின் எழுச்சியின் முக்கியஸ்தர்களின் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

இது உண்மையா என்பதை கிழக்கு மக்களில் எத்தனை வீதமானோர் அவர்களுடன் இருக்கின்றார்கள்? எத்தனை பேர் மு.காவுடன் இருக்கப் போகின்றார்கள் என்பதைப் பார்த்துத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.ஹக்கீம் கிழக்கைப் புறக்கணிக்கிறார் என்பதனால் மு.காவின் தலைமையை கிழக்கு மாகாணத்தின் ஒருவரே ஏற்க வேண்டும் என்பது கிழக்கின் எழுச்சியைப் பற்றி பேசுபவர்களில் சிலரது கருத்தாகும். இந்த வாதமானது முஸ்லிம்களிடையே பிரதேசவாதத்தைத் தூண்டி அம்மக்களை மேலும் துண்டாடும் முயற்சி எனச் சிலர் வாதிடுகிறார்கள். இதற்குக் கடந்த வார இறுதியில் தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின் போது பதிலளித்துள்ள பஷீர் சேகுதாவூத், 'நியாயத்தை எடுத்துக் காட்டுவது பிரதேசவாதமல்ல' எனக் கூறியிருக்கிறார். ஹக்கீமுக்கு எதிரான அவர்களது வாதங்களில் உண்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிழக்கின் ஒருவரேதான் மு.காவின் தலைவராக வேண்டும் எனக் கூறுவது எவ்வாறு பிரதேசவாதமாகாது என்பது விளங்கவில்லை. 

ஹக்கீம் கிழக்கில் பிறந்திருந்தால் வித்தியாசமாக நடந்து கொள்வார் என அவர்கள் வாதிடுகிறார்களா? பிரதேச ரீதியாகப் பிரித்துப் பேசுவது முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்த பழக்கம். ஆரம்ப காலத்தில் சில கொழும்பு முஸ்லிம் தலைவர்கள் அஷ்ரப்பின் தலைமையை மறுப்பதற்காக பிரதேசவாதத்தின் உதவியைத்தான் நாடினார்கள்.

இப்போதும் தேசிய பட்டியல் எம்.பி. பதவி என்று வரும் போது அது அட்டாளைச்சேனைக்கு வேண்டும், வாழைச்சேனைக்கு வேண்டும், சம்மாந்துறைக்கு வேண்டும் என்று தான் பெரும்பாலானவர்கள் வாதிடுகிறார்கள். ஓரு முஸ்லிம் கட்சியின் குறிப்பாக குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டதாக் கூறப்படும் ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பிரதேசவாத கண்ணோட்டத்துக்கு அப்பால் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்க, இவ்வாறு பிரதேச அடிப்படையைக் காட்டி எம்.பி. பதவி கேட்பதை இது வரை எந்தவொரு மு.கா தலைவரும் தடுக்க முற்படவில்லை. இம்முறை பிரச்சினையும் மு.காவுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களினாலேயே உருவாகியது. 

பின்னர் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் அதிகாரங்களை குறைத்தல் பிரச்சினையை திசை திருப்பியது. ஆனால் இப்போதும் அவர்கள் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி தருவதாகக் கூறி ஹக்கீம் தம்மைத் தேர்தலில் போட்டியிடாதவாறு தடுத்துவிட்டுத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியையும் வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள். பஷீர் சேகுதாவூத்தைப் பற்றி ஹக்கீமுக்கு நீண்ட காலமாகவே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. 

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று சில காலத்தில் மு.கா அந்த அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டது. ஆனால் மஹிந்த முஸ்லிம் காங்கிரஸையும்  ஹக்கீமையும் அவ்வளவாக மதிக்கவில்லை. அவருக்கு 'நல்ல' அமைச்சொன்றும் கிடைக்கவில்லை. எனவே மு.கா அந்த அரசாங்கத்திலிருந்து விலகியது. ஆனால் மஹிந்த, பஷீரை உள்ளே இழுக்க முற்படுவதாகவும் பஷீரும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த நிலையில் கட்சி பிளவுபட்டுவிடும் என்ற காரணத்தால் ஹக்கீம் மீண்டும் மஹிந்தவின் அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார். ஆனால் அப்போதும் மஹிந்த, ஹக்கீமையோ அல்லது மு.காவையோ மதிக்கவில்லை. 

இந்த நிலையில் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் பஷீர் தொடர்ந்தும் அரசாங்கத்திலேயே தங்கிவிடுவார் எனச் செய்திகள் பரவின. எனவே மு.கா அவமானப்பட்டுக் கொண்டு அரசாங்கத்தில் இருந்தது. பொது பல சேனாவின் அடாவடித்தனங்களுக்கு மஹிந்தவின் அரசாங்கம் உதவி வழங்குகிறது என்பது தெளிவாக இருந்த நிலையில் மு.கா அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என முஸ்லிம் சமூகத்திலிருந்து பெரும் நெருக்குவாரம் ஏற்பட்ட போதிலும் மு.கா அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டு இருந்தது. ஆனால், ஹசன் அலியின் நிலைமை வேறு‚; அவர் கடந்த காலத்தில் மு.காவும் ஹக்கீமும் சந்தித்த அத்தனை சோதனைகளின் போதும் ஹக்கீமுடன் இருந்தவர். 

நாம் அறிந்தவரை அவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. ஆனால் ஏதோ ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்கும் இடையே நடந்திருக்க வேண்டும். அதனால் தான் ஹசன் அலியின் பொதுச் செயலாளர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. 

முக்கிய அதிகாரங்கள் அத்தனையும் நிர்வாகச் செயலாளர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது அண்மைக் காலத்தில் எந்தவொரு கட்சியிலும் இடம்பெறாத ஒரு நிலைமையாகும். பாலா தம்புவின் இலங்கை வர்த்தகச் சங்கத்தில் மட்டுமே நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படாத நிர்வாகச் செயலாளர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொழிற்சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் அந்த நிர்வாகச் செயலாளரே கடமையாற்றுகின்றார். ஒரு கட்சியின் பொதுச் செயலாளருக்கு தேர்தல் ஆணையாளருடன் தொடர்பு கொள்ளும் அதிகாரம் இல்லாவிட்டால் அவர் வெறும் பொம்மையாகவே இருப்பார். எனவே ஹசன் அலியின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் பிரச்சினை வளர்ந்து ஹசன் அலி, ஹக்கீம் விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலையில் அவருக்கு மீண்டும் அந்த அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இப்போது பயப்படுவதாக இருந்தால் அதிலும் நியாயம் இருக்கிறது. 

இது இருவரும் மனம்விட்டுத் தத்தம் புறத்திலிருந்து நடந்த தவறுகளை ஏற்றுச் சந்தேகங்களை நீக்கிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை. ஒரு ஜனாஸா நலன்புரி சங்கத்திலாவது பட்டம் என்றால் உயிரை மாய்த்துக் கொள்ளும் பலர் இருக்கும் ஒரு சமூகத்தில் புதிய கட்சிகளை இலகுவில் உருவாக்கலாம். ஆனால், அதனால் குறிப்பிட்ட சமூகம் மேலும் பலவீனமடையுமேயல்லாது பலம் பெறப் போவதில்லை. 

புதிய கட்சிகள் உருவாகினால் ஒரு சிலருக்கு அக்கட்சியில் பதவிகள் கிடைக்கும். அவர்கள் தமது கட்சியைக் காட்டி அரசாங்கங்களிலும் பதவிகளை பெற்றுக் கொள்வர். சமூகப் பிரச்சினை என்று வரும் போது போட்டிக் கட்சிகளை வீழ்த்துவது தான் குறிக்கோளாக இருக்குமேயல்லாது கூட்டாக சமூக நலனை அடைய முடியாமல் போய்விடும். இது எவருக்கும் தெரியாத விடயமுமல்ல‚ அத்தனைப் பேரும் இதனைத் தெரிந்துதான் இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். எனவே எவரும் நாம் கூறும் இக்கருத்தைக் கேட்டுத் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கவும் முடியாது.

எம் எஸ் எம் ஐயூம் - தமிழ் மிரர் ...

Madawala News

About Madawala News -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :