Yahya

பாவனையாளர்களுடனும் ஊழியர்களுடனும் நல்லுறவை பேணவேண்டும்!...

-எம்.வை.அமீர் -

இலங்கையில் மின்சார சேவை வழங்குவது என்பது, ஒரு அத்தியாவசிய சேவையாகும். நாட்டில் பாதுகாப்பு சுகாதாரம் என்ற வரிசையில் நாங்கள் வகிக்கின்ற மின்சாரம் வழங்குகின்ற சேவை நேரடியாக மக்களுடன் சம்மந்தப்பட்டது ஆகையால் நாங்கள் எங்களது பாவனையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அவர்களுடன் நல்லுறவை பேணுவதுடன், இடைவிடாத சேவையை வழங்கும் நமது ஊழியர்களுடனும் நல்லுறவை பேணவேண்டும் என்று மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதி பொது முகாமையாளர் ரீ.தவனேஷ்வரன் தெரிவித்தார்.


கடந்த 32 வருடகாலங்கள் இந்த நாட்டுக்கு சிறந்த சேவையாற்றிய அதிலும் விசேடமாக இலங்கை மின்சாரசபைக்கு தன்னாலான அனைத்தையும் செய்த பிரதி பொது முகாமையாளர் ரீ.தவனேஷ்வரனை கௌரவித்து,  பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் பிரிவின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் 2016-07-15 ஆம் திகதி கல்முனை எஸ்.எல்.ஆர். வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தமட்டில் பாவனையாளர்களின் திருப்தியே மிகப்பிரதானமானது. அவர்கள் திருப்தியடையும் பட்சத்தில்தான் எங்களது சேவையில் நாங்கள் திருப்தியடையலாம். பாவனையாளர்கள் ஒவ்வொரு விதத்தில் எங்களிடம் வருவார்கள் அவர்களை நாங்கள் கையாளும் விதத்தினூடாக அவர்களின் மனங்களில் நாங்கள் இடம்பிடிக்க வேண்டும். அதனூடாக அவர்களே எங்களுக்கு கவசமாகவும் பேச்சாளர்களாகவும் ஆவார்கள் அப்போது நமது கடமையை இலகுவாக எங்களால் ஆற்றமுடியும். அதேபோன்று எங்களுடன் கடமையாற்றும் உயர்மட்ட ஊழியர்கள் முதல் அடிமட்ட ஊழியர்கள்வரை எல்லோரும் நல்லுறவுடன் பணியாற்றினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் இலக்கினை எங்களால் அடைந்துகொள்ள முடியும். இதில் எந்த அணி பின்வாங்கினாலும் நமது இலக்கு கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியின்மையை உண்டாக்க சிலரால் முயச்சிகள் ஏற்படுத்தப்படும் இவ்வேளையில் எல்ல இனங்களையும் ஒன்றிணைத்த கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தி சிறப்பான முறையில் நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கும் கல்முனை பிரதேச மின் பொறியியலாளரையும் ஊழியர்களையும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

தான் கடமையாற்றிய காலப்பகுதிகள் மிகுந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதிகள் என்று தெரிவித்த தவனேஷ்வரன், தற்போது அவ்வாறான சவால்கள் மிகக்குறைவு என்றும் தெரிவித்தார். மின்சாரசபையில் கடமையாற்றும் ஊழியர்களை தனது நெருங்கிய உறவினர்களாகவே எப்போதும் நோக்குவதாக தெரிவித்த அவர், மிகநீண்டகாலம் ஒன்றாக பணிபுரிந்தவர்களை விட்டுப்பிரிந்து செல்வது என்பது மனதுக்கு மிகுந்த சஞ்சலமானது என்றும் தெரிவித்தார்.

காலத்துக்குக்காலம் வெளிவரும் சுற்றுநிருபங்கள் எங்களது செயற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரலாம் என்றும் அதற்கு எற்றல்போல் நாங்களும் எங்களது நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நாம் கடமையாற்றும் துறையை வினைத்திறன் மிக்க நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றிய கல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், எங்களது பிரதி பொது முகாமையாளர் ரீ.தவனேஷ்வரன் ஐயாவுடைய சேவை மிக மகத்தானது என்றும், இவர் கடமையாற்றிய காலப்பகுதி என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது என்றும், இவரது காலப்பகுதியில் கிழக்குமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரத்துறை சார்ந்த பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்குமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் மிகவும் தெரிந்துவைத்துள்ள தவனேஷ்வரன், அதனூடாக தனது கடமைகளை சிறந்த முறையில் ஆற்றிவருவதாகவும் அவர் ஓய்வுபெற்றுச் செல்வதென்பது மின்சாரசபைக்கு பாரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் சகல மதங்களையும் மதிக்கும் விதத்தில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் ரீ.தவனேஷ்வரனுக்கு கௌரவ ஞாபகச்ச்சின்னங்களை கல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் பிரிவின் ஊழியர்கள் சார்பில் பொறியியலாளர் பர்ஹானும் வாணிபப் பிரிவு மின்  அத்தியட்சகர் எஸ்.எம்.அக்பரும் வழங்கிவைத்தனர். அதேவேளை இ.எல்.பௌசுல் தான் பாடலொன்றை வழங்கி அத்துடன் ஞாபகச்ச்சின்னம் ஒன்றையும் பிரதம அதிதிக்கு வழங்கி வைத்தார்.இங்கு கடமைநேரத்தில் தங்களது உயிர்களை தியாகம் செய்த ஊழியர்களுக்கு ஒரு நிமிட நேர மௌனமும் அனுஸ்டிக்கப்பட்டடது.

வரவேற்புரையை கல்முனை மின் அத்தியட்சகர் வீ.ரீ.சம்மந்தன் ஆற்றியதுடன் நிர்வாக இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.முனவ்வர் நன்றியுரையாற்றினார்.

கிழக்குமாகாண பிரதம பொறியியலாளர் வாணிபம் வரோதயன், பிரதம பொறியியலாளர் றிஸ்வி பராமரிப்புப் பிரிவு மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அருண நிஷாந்த ஆகியோரும் பிரதேச மின் அத்தியட்சகர்கள் மற்றும் ஊழியர்களும் தவனேஷ்வரன் மற்றும் பர்ஹான் ஆகியோரின் துணைவியர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

பாவனையாளர்களுடனும் ஊழியர்களுடனும் நல்லுறவை பேணவேண்டும்!... பாவனையாளர்களுடனும் ஊழியர்களுடனும் நல்லுறவை பேணவேண்டும்!... Reviewed by Madawala News on 7/16/2016 03:16:00 PM Rating: 5