Yahya

நேசம் ஒருவனிடம் இல்லையென்றால் அவனிடம் எதுவுமே இருக்க முடியாது

 
(பி.எம்.எம்.ஏ.காதர்)
 
நேசம் ஒருவனிடம் இல்லையென்றால் அவனிடம் எதுவுமே இருக்க முடியாது. இஸ்லாமிய தத்துவவியலில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பதாக இருந்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுங்கள் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆகவே நேசம் இல்லை என்றால் எதுவுமே இல்லை  என கட்டார் பல்கலைக்கழக பேராசிரியர் தீன் முஹம்மத் குறிப்பிட்டார். 
 
எச்.ஏ. அசீஸ் எழுதிய 'ஐந்து கண்டங்களின் மண்' எனும் கவிதை தொகுதியின் அறிமுக விழா நேற்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கலாபூசனம் ஏ. பீர்முஹம்மத் தலைமையில் (10-07-2016) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு கருத்துரை வழங்கிய போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது  'கவிஞர்கள் வேறொரு உலகில் வாழ்பவர்கள். அவர்களை அவர்களது வழியிலேயே விட்டுவிட வேண்டும். அவ்வாறு நாம் அனுமதிப்பதுதான் கவிதைகளை கவிதைகளாக தருவதற்கு வழியாகும்.'
 
'கவிதைகளை விமர்சகர்கள் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிப்பதற்கோ சட்டம்பி போன்று பிரம்பை கையில் எடுத்துக்கொண்டு இப்படித்தான் எழுதவேண்டும் என்று பணிப்பதோ கவிஞர்களை நம்மிலிருந்து இல்லாமல் செய்துவிடும். அது மாத்திரமன்றி நல்ல கவிதைகளையும் நாம் இழக்கவேண்டி ஆகிவிடும். அதனால்தான் அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். 
 
புகழ் பெற்ற பல கவிதைகள் உறக்கத்தின் போதுதான் உருவாகியிருக்கின்றது. தூங்கி எழுந்த பின் எழுதிய கவிதைகள்தான் புகழ் பெற்ற கவிதைகளாகவும் கவித்துவமாகவும் பேசப்பட்டிருக்கின்றது. கிரீஸ் நாட்டின் தேசிய கவிதையாக இன்றும் மதிக்கப்படுவது உறக்கத்திலிருந்து வெளிப்பட்ட கவிதையாகும். 
 
 
கவிஞன் ஒரு தனித்துவமானவன். அவன் இயற்கைகளுடன் மிக நெருக்கமாக உறவாடுகின்றான். இவ்வாறு அவன் உரையாட தொடங்குகிறான் என்றால் அந்த இயற்கையை அவன் நேசித்தால்தான் முடியும். அவனை கட்டுப்படுத்த விமர்சகர்கள் முனைவது மிகவும் தவறானது.
 
மேற்கத்திய கலாசார சூழல்கள் நமது அடிப்படை தத்துவங்களை மறுக்கின்றது. அதன் வழியில் நமது சிந்தனைகளை திறந்து விட்டதினால் ஒழுக்கங்களை பற்றி பேசுகின்ற போது அது ஒரு தனிமனிதனின் செயற்பாடு என்று கூறி அதனை பேசுவதிலிருந்தும் விலகிநிற்கின்றோம். 
 
இதன் ஆக்கிரமிப்பு எந்தளவுக்கென்றால் திரைமறைவில் பேசவேண்டிய விடயங்களை திரையின்றி பேசுமளவிற்கு மாறியிருக்கின்றனர். இதனால் பலரும் பார்க்ககூடிய தொலைக்காட்சிகளில் கூட பகிரங்கமாக வந்து தனது அந்தரங்க செயற்பாடுகளைக் கூட மிக சாகவாசமாக கூச்சமின்றி பேசும் சூழலுக்கு தள்ளி விட்டிருக்கின்றது. 
 
இராஜதந்திரி அஸீஸ் அவர்கள் நம்மிடமிருந்து மறந்து போன விடயத்தை மீண்டுமான நமது நினைவுக்கு கொண்டுவருவதில் பாரிய பங்கினை இந்த நூலில் ஊடாக செய்திருக்கின்றார். அதுதான் மானுடம்இ மனிதத்துவம் ஆகும். நல்ல செயற்பாடுகள் எல்லாம் மனிதத்துவத்தை நேசிக்கின்றபோதுதான் நமது சுவாசமாக அமைகின்றது. 
 
ஒரு கவிஞனை எப்பொழுதுமே விட்டுவிடவேண்டும். அப்போதுதான் அவனிடமிருந்து வெளிப்படுகின்ற வெளிப்பாடுகள் மிகக்கனதியானதாக அமையும். அவற்றில் நமக்கு எதுதேவையோ அதனை எடுத்துக்கொள்ளலாம். மற்றவைகள் கவிதைகளாக இருந்துவிடட்டும்.' என தெரிவித்தார்.

 
நேசம் ஒருவனிடம் இல்லையென்றால் அவனிடம் எதுவுமே இருக்க முடியாது நேசம் ஒருவனிடம் இல்லையென்றால் அவனிடம் எதுவுமே இருக்க முடியாது Reviewed by Madawala News on 7/13/2016 12:35:00 AM Rating: 5