Thursday, July 14, 2016

இலஞ்ச ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மக்களின் மனோ நிலையில் பாரிய மாற்றங்கள் தேவை!'

Published by Madawala News on Thursday, July 14, 2016  | " நமது நாட்டில் லஞ்சம், ஊழலை எவ்வாறு இல்லாதொழிக்க முடியும் என்பது பற்றி இன்று அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். இது அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகளோடு மட்டுமன்றி மக்களோடும் தொடர்பு படுகின்ற ஒரு விடயமாகும். இலஞ்ச ஊழல் ஒழிப்பு என்பது சரியான விழிப்புணர்வு மூலமாக ஏற்படும் மக்களின் மனோநிலை மாற்றத்திலேயே முக்கியமாக தங்கியிருக்கின்றது" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். 'வசந்தம்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'பள்ளிக்கூடம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார் .

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..

" எமது நாட்டைப்பொறுத்த வரையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கோசம் என்பது வெறும் தேர்தல் பிரச்சார உபாயமாக  மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு அப்பால் அதனை இல்லாதொழிப்பதற்கான இதயபூர்வமான எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. துரதிஷ்ட வசமாக தற்போதைய இந்த நல்லாட்சி அரசாங்கமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. இருப்பினும் இலஞ்ச ஊழல் ஒழிப்பிற்கான சில நல்ல ஆரம்பங்கள் இன்று ஏற்பட்டிருக்கின்றன என்பதனையும் மறுக்க முடியாது.   இந்நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு என்பது சரியான விழிப்புணர்வு மூலமாக ஏற்படும் மக்களின் மனோநிலை மாற்றத்திலேயே முக்கியமாக தங்கியிருக்கின்றது. 

இன்று இலஞ்ச ஊழல் பற்றிய பல பிழையான மனப்பதிவுகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. உதாரணமாக அரசியல் பதவி ஒன்றின்மூலம் முறையற்ற விதமாக ஒருவர் குறுகிய காலத்தில் சொத்துக்களை குவிக்கின்ற பொழுது அந்தனை அவர் அரசியல் மூலமாக மேற்கொண்ட 'ஒரு உழைப்பு , சம்பாத்தியம்' என்று ஏற்றுக்கொள்கின்ற மனோநிலை இன்று மக்களிடத்தில் காணப்படுகின்றது. அது 'உழைப்பு' அல்ல. மாறாக அதுவொரு பாரிய திருட்டு அல்லது கொள்ளை' என்பதனை மக்கள் உணர வேண்டும்.

அத்தோடு  'அவர் கொள்ளையடித்தாலும் மக்களுக்கும் ஏதோ செய்கிறார்தானே..' என்ற ரீதியில் அவரது திருட்டுக்கு அங்கீகாரம் வழங்குகின்ற மனோநிலையும் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. மறுபுறத்தில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றவர்களின் குற்றங்களை பகிரங்கமாக சுட்டிக்காட்டுகின்ற செயற்பாட்டாளர்களை பார்த்து 'இவர்கள் எதையும் செய்யவும் மாட்டார்கள்.. செய்யகின்றவர்களை செய்ய விடவும் மாட்டார்கள்' என்று சாடுகின்ற மனோ நிலையும் இன்று பரவலாகக் காணக்கிடைக்கிடைக்கிறது.  இதுவும் கூட இலஞ்ச ஊழலுக்கு மக்களினால் வழங்கப்படும் அப்பாவித்தனமான அங்கீகாரமேயாகும் . எனவே இலஞ்ச ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டுமாயின் முதலில் ஊழல் தொடர்பான மக்களின் மனோ நிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது. இதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பரவலாக  மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்த விடயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான அம்சம்தான் ஊழலின் வடிவங்கள்,தாக்கங்கள், பாரதூரம் என்பவற்றை அவர்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கொந்தராத்து வேலைகளின் போது பெற்றுக்கொள்ளப்கடுகின்ற இலஞ்சப்பணம் அல்லது காரியாலயங்களில் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முறையற்ற பணம் அல்லது பொருட்கள் மட்டும்தான் ஊழல் என அதிகமான மக்கள் புரிந்த வைத்துள்ளனர். உண்மையில் 'தனக்கு உரிமையற்ற உரித்தில்லாத எந்த ஒரு விடயத்தினையும் முறையற்ற விதத்தில் பெற்றுக்கொள்கின்ற அனைத்துமே ஊழலாகும்.' இதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் இன்று நமது, நாட்டின் அரச கூட்டுத்தாபனங்கள் திணைக்களங்கள் என்பவற்றில் வழங்கப்படுகின்ற பதவிகள், வேலைவாய்ப்புகள் என்பவையாகும். இவ்வாறான கூட்டத்தாபனங்கள் திணைக்களங்கள் வினைத்திறன் மிக்கவகையில் இலாபகரமான செயற்பட வேண்டுமென்பதற்காகவே அவைகளுக்கான  பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று ' கட்சிக்கார்கள் அல்லது ஆழுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள்' என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் எவ்வித தகுதியும் தராதரமும் இல்லாத ஏராளமானவர்கள் பலர் இவ்வாறான உயர் பதவிகளுக்கு இந்த அரசாங்கத்திலும் கூட நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதனை ஒரு ஊழலாக யாரம் பார்ப்பதில்லை. 

இது போலவே திட்டமிடப்படாத பல பாரிய அபிவிருத்திகளுக்காக வெளிநாடுகளில் பெறப்பட்ட பாரிய கடன்சுமை இன்று வரி என்ற பெயரால் மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கின்றது. எனினும் இவ்வாறான திடீர் விலையேற்றத்தின் பின்னணியிலிருகின்ற ஊழலினை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இதனையும் கூட இயற்கை அனர்த்தங்களைப் போன்று தமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாகவே கருதுகின்றனர். எனவே இவை குறித்த மிக பரந்து பட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவேண்டியது மிக அத்தியவசியமாகின்றது.

இவ்வாறு மக்களின் மனோ நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களோடு சட்ட ஒழுங்கினையும் உறுதியுடன் நிலைநாட்டுகின்ற பொழுதே இலஞ்ச ஊழலலற்ற ஒரு நாட்டினை கட்டியெழுப்புதல் என்பது சாத்தியமாக முடியும்.'


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top