Wednesday, July 6, 2016

என்னை நெகிழ வைத்த நேற்றைய பெருநாள் நிகழ்வுகள் இரண்டு. eid

Published by Madawala News on Wednesday, July 6, 2016  | By: Ashroff Shihabdeen

நேற்றைய இரண்டு நிகழ்வுகள் என்னை அளவில்லா ஆனந்தத்துக்கும் நெகிழ்ச்சிக்கும் ஆளாக்கி விட்டன.

01. காத்தான்குடி முகநூல் நண்பர் குழுவொன்று பெண்களைத் தலைமையாகக் கொண்டு வாழும் 47 குடும்பங்களுக்குப் பகலுணவு (பெருநாள் உணவு) வழங்கியதாக சகோதரர் Firthous Naleemi ஒரு பதிவை இட்டிருந்தார்.

 அது பற்றி இடப்பட்ட 14 படங்களில் ஒன்றாவது உணவு வழங்ப்படும்போது, பெற்றுக் கொண்டவர்களைக் காட்டி நிற்கவில்லை.

“சாப்பாட்டுச் சஹன் ஒன்றினை வழங்கிவிட்டு ஆட்டோவில் ஏறும்போது வந்த அழைப்பின் மறுமுனையில் நான்கு குழந்தைகளின் தாய்
"ஜஸாகல்லாஹு கைரா இப்படி உணவுகளை போட்டோக்களில்தான் பார்த்துள்ளோம் அதனை ருசிபார்க்க சந்தர்ப்பமளித்த உங்களுக்கு " என்று கூறினார்.

எனது கண்கள் பனித்தன உள்ளம் அல்ஹம்துலில்லாஹ் என்றது ஏழை வீட்டிலும் இன்று பெருநாள் என்ற சந்தோசம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்ற அவரது வார்த்தைகளில் எனக்கும் கண்ணீர் சுரந்தது!

02. இதே போன்று பெருநாள் தொழுகை முடிந்த கையோடு ஏறாவூர் ஸலாமா சமூக நல கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையம், புனித லங்காராம விகாரை, ஏறாவூர் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு, காளி கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று பெருநாள் பண்டங்களை விநியோகித்தனர்.

விஜயம் செய்த ஒவ்வொரு இடங்களிலும் நிலவிய சந்தோசம் தொடர்ந்தும் இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என்கிற ஊக்கத்தை தந்திருக்கிறது. சகோதரர் Al-fiyas Mohamed Ar பதிவிட்டிருந்தார்.
மகிழ்ச்சியில் மிதந்தது மனது!

நேற்று பதிவிடப்பட்ட ஆயிரக் கணக்கான நண்பர்களில் வாழ்த்துப் படங்களை விட, வாழ்த்துக்களை விட, தொழுகைப் படங்களையும் செய்திகளையும் மகிழ்ச்சி ஆரவாரங்களையும் விட என்னைக் கவர்ந்த இரண்டு பதிவுகள் இவை.

செய்ய வேண்டியவை இவ்வாறான பரஸ்பர சந்தோஷப் பகிர்வுதான்.
குழுக்குழுவாகப் பிரிந்து பெருநாள் குத்பாத் தொழுததைப் பிரகடனப்படுத்துவதை விட, என்றுமே தீர்த்துக் கொள்ள முயலாத பிரிவினையும் இயக்கப் பெருமையும் பேசுவரை விட, அவித்த முட்டையின் மஞ்சட் கருவில் மயிர் பிடுங்கும் மார்க்க விவாதங்களை விட மேலே சுட்டிக் காட்டப்பட்ட பணிகள் உன்னதமானவை!

சகோதரர்களே, உங்கள் பணி மெச்சத்தக்கது. அதைத் தொடருங்கள். சகல முஸ்லிம் கிராமங்களிலும் வாழும் இளைஞர்களே.. அரசியல், மார்க்க, இயக்க, குடும்பப் பிரிவினைகளை ஒதுக்கி விட்டு நல்ல நாட்களிலாவது மேற் சொல்லப்பட்டது போன்று நல்லவற்றில் ஈடுபடுங்கள்.

ஏழைக் குடும்பத்தின் வயிற்றுப் பசியை நீக்கும் ஒவ்வொரு பருக்கைச் சோறும் அல்லாஹ்விடம் உங்களுக்குச் சாட்சியாகும். சமூகங்களுக்கிடையிலான சகோதர அன்பைப் பேணும் ஒவ்வொரு முயற்சியும் ஒரு நல்ல சுமுகமான வாழ்வியல் சூழலை உருவாக்கும்!

என் இதயம் உங்களுடன் பயணிக்கிறது!

-அஷ்ரப்  சிகாப்தீன் -
 ( படத்தில் 47 குடும்பங்களுக்குப் பெருநாள் உணவு வழங்கப்படும் சந்தர்ப்பம் )


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top