Ad Space Available here

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களே... உங்களிடம் ஒரு பகிரங்கக் கேள்வி i-புவி. றஹ்மதுழ்ழாஹ் -

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களுக்கு,

இன்று (29.07.2016) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணிக்கு, எனது பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியர் ஏ.எல். மொஹமட் நியாஸ் என்பவருக்கு எதிராக காத்தான்குடியிலுள்ள ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) எனும் அமைப்பின் பணிப்பாளரும், NFGG எனப்படும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி. அனீஸா பிர்தௌஸ் என்பவர் செய்திருந்த முறைப்பாடு ஒன்று தொடர்பாக காத்தான்குடி பொலீசாரின் அழைப்பிற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு நானும், மொஹமட் நியாஸும் சென்றிருந்தோம்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு. தியகல என்பவரிடம் பொலீசார் கையளித்திருந்த அழைப்புத் துண்டினை மொஹமட் நியாஸ் கொடுத்ததும், அவர் வெகுண்டெழுந்து 'இதனை ஏன் நீ முகப்புத்தகத்தில் பதிவேற்றினாய்?' என்று கேட்டார்.

அதற்கு எனது பிரதம உதவி ஆசிரியர் மொஹமட் நியாஸ், தான் எழுதிய விழிப்புணர்வுக் கட்டுரை தொடர்பாக அனீஸா ஆசிரியை என்பவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அம்முறைப்பாடு தொடர்பாக காத்தான்குடி பொலீசார் என்னை வருமாறு அழைத்துள்ளதாகவும் தனது முகப்புத்தக நண்பர்களுக்கு ஆதாரபூர்வமாகத் தகவல் தெரிவிக்கும் வகையில் அந்த அழைப்புத் துண்டைப் பதிவிட்டதாக பதிலளித்தார்.

அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத குறித்த சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு. தியகல, 'நீங்கள் மீடியா என்று கூறிக்கொண்டு பொலிசாரிடம் கேம் காட்டக் கூடாது சரியா..?' என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டு அவரது மேலதிகாரியிடம் எங்களை அழைத்துச் சென்றார்.

அந்த மேலதிகாரியின் அறையில் குறித்த முறைப்பாட்டாளரான அனீஸா ஆசிரியையும், அவரது பஞ்ச சாட்சிகளும் அமர்ந்திருந்தனர். எங்களை அழைத்துச் சென்ற குறித்த சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு. தியலகல அந்த மேலதிகாரியிடம் குறித்த அழைப்புத் துண்டைக் காட்டியதும், அவரும் மிகவும் ஆத்திரப்பட்டவராக 'இதை ஏன் உமது முகப்புத்தகத்தில் பதிவேற்றினாய்?' என்றே கேள்வியெழுப்பி அவதிப்பட்டாரேயன்றி, எனது பிரதம உதவி ஆசிரியர் மீது செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி கேள்விகள் எதுவும் கேட்கவில்லை.

இதனால், காத்தான்குடிப் பொலீசாருடன் கதைப்பதில் அர்த்தமில்லை என்றுணர்ந்த நாம், அனீஸா ஆசிரியையின் முறைப்பாட்டுக்கு பதில் வாக்குமூலம் அளிப்பதாகவும், அடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் தொடருமாறும் வலியுறுத்தினோம். இதற்கமைய மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 02ம் திகதி குறித்த முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலீசார் தொடரவுள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்ரீலங்கா ஜனநாயகக் குடியரசின் பொலிஸ் மா அதிபரான உங்களிடம் நான் பகிரங்கமாகக் கேட்டுத் தெளிவு பெற விரும்புவதாவது:

(1) பொலிஸ் நிலையமொன்றில் செய்யப்படும் முறைப்பாடு ஒன்றில் எதிர்த்தரப்பாகக் குறிப்படப்படும் நபர்களுக்கு அவர்களின் பதில் வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்புக் கொடுப்பதற்கு இவ்வாறான உத்தியோகப்பற்றற்ற கொப்பித்தாள் துண்டுகளை பொலிசார் பயன்படுத்தலாமா?

(2) அவ்வாறு பயன்படுத்த முடியும் என்றால், அதில் குறைந்த பட்சம் இவ்வாறான அழைப்புக்களைக் கைளிக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் இலக்கம், பொலிஸ் நிலையத்தின் உத்தியோகபூர்வ முத்திரை என்பனவும் இடம்பெற்றிருக்க வேண்டாமா?

(3) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக மத்தியஸ்த சபைக்குப் பாரப்படுத்தும் உத்தியோகபூர்வமான படிவங்களை கடந்த காலங்களில் நான் எனது செலவில் அச்சிட்டுக் கொடுத்து வந்துள்ளேன். இவ்வாறே இங்கு பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளில் எதிர்த்தரப்பாகக் குறிப்பிடப்படுகின்ற நபர்களுக்கு பதில் வாக்குமூலம் வழங்குவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கால நேரம் குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களால் வழங்கக்கூடியவாறு சிறிய படிவங்களையும் என்னால் இலவசமாக அச்சிட்டு வழங்க முடியுமா?

நமது நாடு இப்போது கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவ வழிகாட்டலில் நல்லாட்சியை நிறுவியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் காத்தான்குடிப் பொலீசாரே எனது வீட்டில் கஞ்சா பொதிகளை இரவோடிரவாக வைத்து விட்டு மறுநாள் என்னைக் கைது செய்து மரியாதை குறைத்த செயற்பாடு போன்றும், அவ்வாறான செயற்பாட்டிற்கு நீங்களும் சட்டத்தை கூறி ஊடகங்களில் அறிக்கையிட்டதைப் போன்றும் இப்போதும் செயற்பட முடியாது.

பொலீசாரிடம் கேம் கேட்டு விளையாடும் அளவுக்கு நானோ, எனது பிரதம உதவி ஆசிரியரோ நேரம் இல்லாதவர்கள் என்பதை உங்களின் கவனத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

உங்களின் பொறுப்பிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்பவர்களும், அம்முறைப்பாட்டிற்காக அழைக்கப்படுகின்றவர்களும் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் மிகவும் மரியாதையுடன் நடாத்தப்பட வேண்டும். எனது இப்பகிரங்கக் கடிதத்தை கவனத்திற்கெடுத்து பொலிஸ் நிலையங்களில் நல்ல மாற்றங்களை நடைமுறைப்படுத்துவீர்கள் என பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.

இப்படிக்கு  -புவி. றஹ்மதுழ்ழாஹ் - வார உரைகல் 

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களே... உங்களிடம் ஒரு பகிரங்கக் கேள்வி i பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களே... உங்களிடம் ஒரு பகிரங்கக் கேள்வி i Reviewed by Madawala News on 7/29/2016 09:24:00 PM Rating: 5