Monday, July 4, 2016

மு.கா. தலைவர் மௌனம் காத்தால், சொற்கள் பாம்புகளாகி இன்னும் துரத்தும். i

Published by Madawala News on Monday, July 4, 2016  | முகம்மது தம்பி மரைக்கார்
---------------------------------------------------
'தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று - எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர் - தங்கள் சொற்களாலேயே தமக்குச் சூனியம் வைத்துக் கொள்கின்றார்கள். எதிராளியைக் குறிவைப்பதாக நினைத்துக் கொண்டு - இவர்கள் வீசுகின்ற கற்கள், கடைசியில் - இவர்களையே காயப்படுத்தி விடுகின்றன. அரசியலில் தலைவர் என்கிற கீரீடங்களைச் சுமப்பவர்கள் கூட, தமது தவளைப் பேச்சுக்களால் சிலவேளைகளில் கோமாளிகளாக மாறிவிடுகின்றனர்.

மு.காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடானது இன்னுமின்னும் சூடு பிடித்துக் கொண்டே போகிறது. அந்த நெருப்பு இப்போதைக்கு அடங்காது. தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசனலிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடானது, இப்போது தலைவருக்கும் தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும் இடையிலான போராக மாறியிருக்கிறது. பசீர் மீது கடும் சொற்களை நேரடியாகவும், குத்துக்குறிப்பாலும் ஹக்கீம் வீசி வருகின்றார். ஆனால், இதுகுறித்து பசீர் நிதானமிழந்ததாகத்  தெரியவில்லை. ஹக்கீம் வீசிய சொற்களையே பொறுக்கியெடுத்து, அவற்றினை தனது மாயாஜாலத்தினால் பாம்புகளாக்கி, ஹக்கீமை நோக்கி பசீர்  வீசியிருக்கின்றார். தனது சொற்களே - பாம்புகளாகி, தன்னைத் துரத்தத் தொடங்கியதால், ஹக்கீம் இப்போது அச்சத்துள் உறைந்து போயுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது - ஒரு காலத்தில் மக்களுக்கான அரசியல் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அதன் திசை மாறிப்போயுள்ளதாக பரந்தளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள பாமர மக்களின் வியர்வையிலும், நம்பிக்கையிலும், பிரார்த்தனைகளிலும் உருவான இந்தக் கட்சியானது, இப்போது பணம் உழைக்கும் ஒரு நிறுவனமாக மாறி, மேட்டுக்குடி மனிதர்களின் கைகளுக்குள் சிக்கி விட்டதோ என்று அச்சப்படும் வகையில், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் மாறியுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில், முஸ்லிம் காங்கிரசுக்கு ஒவ்வொரு முறையும் வாக்களித்து வரும் பாமர மக்களின் நம்பிக்கைகளில் - அந்தக் கட்சியின் தலைமையானது, மண்ணை வாரி இறைத்து வருவதாக, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களே கோபப்பட்டுக் கொள்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசுடன் இணைந்தமை, திவநெகும சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தமை, கசினோ சட்ட மூலத்தை எதிர்க்காமல் வாக்களிப்பிலிருந்து நழுவியமை, மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வதிகாரியாக மாற்றும் 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை என்று - கடந்த நான்கு, ஐந்து வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் - மக்கள் நலனற்றவை, சமூகம் குறித்துச் சிந்திக்காதவை, காசுக்கு விலை போனவை என்று விமர்சிக்கப்படுகின்றன.

ஆனால், இவை எல்லாமே தனக்கு விருப்பமின்றியும், தனது கட்டுப்பாடுகளையெல்லாம் மீறியும் நடந்த விவகாரங்கள் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இற்றை வரை பேசி வருகின்றமைதான் புதினமான விடயமாகும். முஸ்லிம் காங்கிரசில் பிரமுகர்களாக உள்ள சிலர் - கட்சியை பலிகொடுக்க முயற்சித்த போதும், தன்னை பணயக்கைதியாக்கிய சந்தர்ப்பங்களிலும், மேற்படி விவகாரங்கள் நடந்தேறி விட்டன என்று, நடந்த தவறுகளுக்கு - மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நியாயம் கற்பித்து வருகின்றார். இது வெட்கம் கெட்டதொரு கதையாகும்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியானது கிட்டத்தட்ட, ஒரு சர்வதிகாரியின் பதவி நிலைக்கு ஒப்பானதாகும். தலைவர் நினைத்தவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடிகிறது. தலைவர் நினைத்த மாத்திரத்தில் - தலைவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட உயர்பீட அங்கத்தவர்களின் உறுப்புரிமைகள் இடைநிறுத்தப் படுகின்றன. தலைவர் நினைத்தபோது செயலாளரின் அதிகாரங்களைப் பிடிங்கிக் கொள்ள முடிகிறது. தலைவர் விரும்பிய வேளையில் - தலைவருக்குத் தோதான உயர்பீட செயலாளர் என்கிற புதிய பதவியொன்றினை கட்சிக்குள் உருவாக்க முடிகிறது. இப்படி, சக்திமிக்க அதிகாரங்களைக் கொண்ட மு.கா. தலைவரை, கட்சிக்குள் யாரோ பயணக்கைதியாக வைத்து காரியம் சாதித்ததாக, மு.கா. தலைவரே கூறுவதானது ஆச்சரியமானதாகும்.

காத்தான்குடியில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட, இந்தப் பணயக்கைதிக் கதையினை மு.கா. தலைவர் கூறியிருக்கின்றார். 'முஸ்லிம் காங்கிரசின் தலைமையை பணயக்கைதியாக வைத்து, இனிமேலும் அரசியல் செய்ய இடமளிக்கப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அவமானப்படுத்துவதற்கும்,  மானபங்கப்படுத்துவதற்கும், கடந்த காலங்களில் அதை அடிப்படையாக வைத்து - தங்களுடைய பதவிகளுக்காக பேரம் பேசியவர்கள், இனிமேலும் இந்தக் கட்சியின் தலைமையை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாது' என்று, காத்;தான்குடியில் மு.கா. தலைவர் தெரிவித்திருந்தார்.

மு.கா. தலைவரின் மேலேயுள்ள கூற்றுப்படி பார்த்தால்;

•    மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை கடந்த காலங்களில் கட்சிக்குள் இருக்கின்ற யாரோ ஒருவர் அல்லது சிலர் - அச்சுறுத்தி, பணயக்கைதியாக வைத்திருந்துள்ளனர்.
•    முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், மு.கா. தலைவரை அவமானப்படுத்தக் கூடிய ரகசியங்கள் இருந்திருக்கின்றன.
•    மு.கா. தலைவரை பணயக்கைதியாக்கியவர்கள் - அவரை அச்சுறுத்தி, தங்களுக்குத் தேவையான பதவிகளையெல்லாம் மு.கா. தலைவர் மூலம் பெற்றிருக்கின்றார்கள்.
•    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை மானபங்கப்படுத்தும் வகையிலான ரகசியங்களை தம்வசம் வைத்திருந்தவர்கள், அவற்றினைக் காட்டி ஹக்கீமை அச்சுறுத்தி, அதன் மூலம் தமது அரசியலை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நன்மைகளையும் ஹக்கீமிடமிருந்து பெற்றிருக்கின்றனர்.

என, பல விடயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையில், முன்பு தன்னை பணயக்கைதியாக்கிய நபர்கள், மீண்டும் தன்னை அந்த நிலைக்குள்ளாக்கி விடுவார்களோ என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் பயப்படுகிறார் போலவே தெரிகிறது. இருட்டில் தனியாக நடப்பவன் - தனது அச்சத்தை மறைப்பதற்காக, சத்தமாய் பாடிக்கொண்டு போவதைப் போலதான், மு.கா. தலைவரின் காத்தான்குடி உரையை நோக்க முடிகிறது. எது எவ்வாறாயினும், மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தைக் குறித்தே, இந்தப் பணயக்கைதிக் கதையை மு.கா. தலைவர்  கூறியதாக - கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சுக்கள் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீமுடைய காத்தான்குடி உரை குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் - தவிசாளர் பசீர் சேகுதாவூத் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையானது மிகவும் கவனத்துக்குரியது, வாதப் பிரதிவாதங்களைக் கொண்டது, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை மோசமானதொரு பொறிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தவிசாளர் பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அந்த அறிக்கையைப் படித்த பிறகுதான் - காத்தான்குடி உரையின் மூலம், தலைவர் தன் வாயால் கெட்டுப்போயுள்ளார் என்பதை, அநேகர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

யாரோ ஒருவர் அல்லது சிலர் - தன்னைப் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்று மு.காங்கிரஸ் தலைவர் பட்டும்படாமல், பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் 'மு.காங்கிரஸ் தலைவரை எவரெவர் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் மக்கள் புரியும்படியாக - தெளிவாக வெளிக்கொணர்வது தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும்' என்று தவிசாளர் பசீர் சேகுதாவூத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், 'ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலைமைத்துவக் காலத்தினுள் இவ்வாறான பணய நாடகங்கள் எவ்வளவு காலம் நீடித்தன என்பதையும் தலைவர் வெளிப்படுத்த வேண்டும்' என்றும் பசீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.கா. தவிசாளர் பசீருடைய இந்த அறிக்கையானது தலைவர் ஹக்கீமுக்கு மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத இரண்டுங்கெட்டான் நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது. தனது அறிக்கைக்கு மு.கா. தலைவரால் விளக்கமாகப் பதிலளிக்க முடியாது என்பதை, பசீர் மிக நன்கு அறிவார். அதனால், மு.கா. தலைவரை மேலும் சங்கடப்படுத்திப் பார்க்கும் வகையில், இன்னும் பல விடயங்கள் குறித்தும் தன்னுடைய அறிக்கையில் பசீர் பேசுயுள்ளார்.

'ரஊப் ஹக்கீம் அகப்பட்டுக் கொண்ட எவ்விதமான விடயங்களில், எந்தத் தருணங்களில் தலைமையையும், கட்சியையும் யாரெல்லாம் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதை - தலைவர் ஹக்கீம் வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயங்களை அவர் தெரியப்படுத்தும் போது, கடந்த 16 வருடங்களாக அவருடைய தலைமையானது நிமிர்ந்து நின்று நிலைத்ததா? அல்லது, சரணடைந்து சரிந்ததா? என்கிற வரலாறு மக்களுக்குத் தெளிவாகும்' என்றும் பசீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மு.கா. தலைவருடைய ஏகப்பட்ட ரகசியங்கள் தவிசாளர் பசீரிடம் உள்ளன என்றும், அவற்றினை வைத்துக் கொண்டு, ஹக்கீமை பசீர்தான் பணயக்கைதியாக்கிக் காரியங்களைச் சாதித்து வந்தார் என்றும், அரசியல் அரங்கில் மிக நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்தக் கதையை பசீரும் அறிவார். அதனால், இதற்கான பதிலினையும் தனது அறிக்கையில் பசீர் உள்ளடக்கியுள்ளார்.

'எந்தவொரு அரசியல் தலைவரினதும் கண்ணுக்குப் புலப்படாத தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில், எவ்வித ரகசியங்களின் தடயங்களும் என்வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பசீர்ளூ 'அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சபலங்கள், முஸ்லிம் அடையாள அரசியலைப் பலிகொண்டு விடக்கூடாது என்பதில் கடந்த 15 வருடங்களாக மிக்க கரிசனையுடன் இயங்கி வந்துள்ளேன்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

இங்கு, பசீர் பொடிவைத்துப் பேசும் விடயம் என்ன என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு அப்பால் இந்த விடயம் குறித்து பசீர் பேசுவது ஹக்கீமுக்கு ஆபத்தாகும். அந்த ஆபத்தினை ஹக்கீமுக்கு உணர்த்துவதற்காகவே, பசீர் இங்கு பொடிவைத்துப் பேசியிருக்கின்றார் என்பதையும் உணரக் கூடியதாக உள்ளது.

எது எவ்வாறாயினும், தன்னை அச்சுறுத்தி - பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியைத் தாரை வார்த்திருக்கின்றார் என்பதை, அவருடைய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும், ஹக்கீமுடைய தனிப்பட்ட விவகாரம் தொடர்பில்தான், இந்தப் பணய நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதும் புலனாகிறது. கிழக்கு மக்களின் ரத்தம், வியர்வை, நோன்பு மற்றும் பிராத்தனைகளால் கட்டி வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை வைத்து, ஒரு காலகட்டத்தில் மாபெரும் சூதாட்டமொன்று நடந்தேறியிருக்கிறது.

இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, 'என்னைச் சிலர் பணயக்கைதியாக்கி, கட்சிக்குள் பதவிகளையும் அதிகாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டனர்' என்று, மு.கா. தலைவர் இப்போது வந்து, எதுவும் அறியாத பாலகன்போல் பேசுவது மற்றவர்களை முட்டாள்களாக்கும் முயற்சியாகும்.

மு.காங்கிரசின் தலைவர் கூறுகின்றமைபோல், ஒரு காலகட்டத்தில் அவர் பணயக் கைதியாக்கப்பட்டிருந்தார் என்பது உண்மையாயின், அதை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை, தலைவர் ஹக்கீம் வெளிப்படையாகக் கூற வேண்டும். அதைத் தெரிவிப்பதற்கு ஹக்கீம் தயங்குவாராயின், முஸ்லிம் காங்கிரசை பிழையாக வழிநடத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, ஹக்கீம் சொல்லுகின்ற ஒரு புனைகதையாகவே, மேற்படி பணயக்கைதி விவகாரத்தினைப் பார்க்க வேண்டியிருக்கும்.

மு.கா. தலைவர் மௌனம் காத்தால், சொற்கள் பாம்புகளாகி இன்னும் துரத்தும்.

( தமிழ் மிரர் பத்திரிகை :  செவ்வாய்கிழமை
முகம்மது தம்பி மரைக்கார்இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top