Ad Space Available here

எது இனவாதம்? எது பாசிசவாதம்? iகடந்த கால வடுக்களும் வேதனைகளும் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. கறை படிந்த குருதியின் வாசனையிலிருந்து மக்கள் மீளவில்லை. தூக்கம் தொலைத்த இரவுகளும் நின்மதி இழந்து பித்து புடித்து அலைந்த நாட்களும் இன்னும் மறக்கவில்லை. யுத்த கால நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. துப்பாக்கி சத்தங்களும் தொட்டாக்களின் வீரியமும் இன்னும் மனதை பதற வைக்கிறது.

காத்தான் குடி படுகொலை, ஏறாவூர் படுகொலை, யாழ்ப்பாண இனச்சுத்திகரிப்பு, கெப்பிட்டிகொல்லாவ படுகொலை, அரந்தலாவை படுகொலை, நாட்டின் எல்லா பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள், மதஸ்தல தாக்குதல்கள், சிறந்த தலைவர்களின் படுகொலைகள், இறுதியாக முள்ளிவாய்க்கால் மனித பேரவலம். மனதை நொறுக்கிய கணங்கள். துடிக்க துடிக்க உயிர்கள் பலியெடுக்கப்பட்ட வலி நிறைந்த சம்பவங்கள்.

பல தசாப்த இருண்ட பயணம். மனித உயிர்கள் விலைமதிப்பற்று போன காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித பாகங்கள் கண்டு புடிக்கப்பட்ட காலம். யாராலும் இதை மறக்க முடியுமா?

இவைகள் தான் இனவாதமும் பாசிசவாதமும் நம்மிடம் விட்டு சென்றவை. இதை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்த சோக வரலாறு மனதைவிட்டு அகலுமுன்னே தளிர்விட்டது காவி பயங்கரவாதம். அதன் விளைவு அழுத்தகம பற்றி எரிந்தது. பலகோடி சொத்துக்கள் இழக்கப்பட்டது மனித உயிர்களும் பலியெடுக்கப்பட்டது.

மீண்டும் இந்த நிலை நமக்கு வேண்டுமா?

பயங்கரவாதம் இல்லாத நாடாக இலங்கை பிரகடனப்படுத்திய காலப்பகுதியில் உருவானது தான் பேரினவாதிகளின் முஸ்லிங்களுக்கு எதிரான போராட்டம். அது முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் அதிகமாக காணப்பட்டாலும், நல்லாட்சியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தில் காணப்படும் காவிப்பயங்கரவாதிகள் போல சிறு பான்மை சமூகத்திலும் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை சமூகம் என்றாலும் சிறுபான்மை சமூகம் என்றாலும் குறிப்பிடட சிலரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை காண முற்படுவது பிழையான கோட்பாடு ஆகும்.

பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு தொங்கு பாலத்தில் நடப்பது போல பயணித்து கொண்டு இருக்கும் நல்லாட்சியில் இனவாதத்தையும் பாசிசவாதத்தையும் தூண்டிவிட்டு நல்லாட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி நாட்டையும் படுகுழியில் தள்ள நினைக்கிறார்கள் சில வழிகேட்ட மூடர்களும் விஷமிகளும்.

இந்த அடிப்படையில் பார்க்கப்பட வேண்டிய விடயமே, யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரச்சினை. இரு குழுக்களுக்கிடையே சாதாரணமாக உருவான பிரச்சினையை பூதாகாரமாக்கி அதற்கு இனவாத பாசிசவாத சாயம் பூசும் கேடுகெட்ட வேலையை செய்ய துடிக்கிறார்கள் சில இனவாதிகள்.

இவர்கள் தங்களது சொந்த அரசியல் விளம்பரத்திற்காகவும் பிரபல்யத்திற்காகவும் புகழுக்காகவும் மக்களை பகடைக்காய்களாக்கி பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு, வடக்கில் ஒரு விதமாகவும் தெற்கில் ஒரு விதமாகவும் பேசி இப்பிரச்சினைக்கு செயல் உருவம் கொடுத்து இனவாதமாகவும் பாசிசவாதமாகவும் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதன் மூலம் அரசியலில் தங்களின் இருப்பையும் மக்களிடையே நல்லவர்களைப்போல தங்களை காட்சிப்படுத்தவும் எத்தனிக்கிறார்கள். பிணம் திண்ணி அரசியல்வாதிகள்.

நாடு எக்கேடு கேட்டு போனாலும், ஆடம்பர வாழ்க்கையும் பதவிகளின் அலங்கரிப்புமே அவர்களின் எதிர்பார்ப்பு.

நீதியான பார்வையுள்ள பண்புள்ள சமூக சிந்தனையுள்ள அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரித்ததன் விளைவு, இப்படியான தூரநோக்கற்ற குறுகிய சிந்தனையுள்ள மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் உருவாக்கம் ஆகும். இதில் யாரை குற்றம் சொல்லுவது?

நடுநிலையுடன் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட வேண்டிய ஊடகங்கள் இனவாதம் பாசிசவாதம் என்று தலைப்புகளை இட்டு அப்பாவி மக்களின் உள்ளங்களில் சலனங்களை ஏற்படுத்தும் வேலையை கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தாளம் போடும் இணையத்தளங்களும் இல்லாமலில்லை. சில நேர்மையான ஊடகங்களும் அரசியவாதிகளின் கைகளுக்குள் சிக்குண்டு கிடப்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகிறது.

நல்லாட்சியில் ஊடக சுதந்திரம் இருக்கிறது. சமூகத்திற்காக குரல் கொடுக்க கூடியவாறு, யாருக்கும் அடிமைப்படாமல் பக்கச்சார்பு இல்லாமல் இயங்குகின்ற நேர்மையாக ஊடங்களாக, ஊடகங்கள் மாற வேண்டும்.

சிறு பிரச்சினைகளை இனவாதமாகவும் பாசிசவாதமாகவும் பேசி மக்களை திசை திருப்பி தங்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசியல்வாதிகளையும் சமூக துரோகிகளையும் மக்களுக்கு இனம் காட்ட வேண்டும். இது ஊடகங்களின் மீதான சமூக கடமை ஆகும்.

மனாப் அஹமத் றிசாத் 
அக்கரைப்பற்று.
எது இனவாதம்? எது பாசிசவாதம்? i எது இனவாதம்? எது பாசிசவாதம்? i Reviewed by Madawala News on 7/20/2016 11:22:00 AM Rating: 5