Monday, July 18, 2016

நல்லாட்சிக்கு உதவியவரை நல்லாட்சியே பதவி நீக்கம் செய்ததா? i

Published by Madawala News on Monday, July 18, 2016  | 



-அபு அம்மார்-

வடக்கிலிருந்து பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான 2வது மாகாண சபைத் தேர்தல் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய காங்கிரஸின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 19ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவானார்
அவருக்குக் கிடைத்த இந்த வாக்குகளில் அக்கரைப்பற்று வாக்களார்களின் வாக்குகள் அதிகமாக இருந்தபோதிலும் அம்பாறை மாட்டத்தின் ஏனைய பிரதேச மக்களும் அவருக்கு வாக்களித்திருந்தனர் என்பது பழைய கதை.
தற்போது ஏறக்குறைய 4 வருடங்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த அவர் கடந்த 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நல்லாட்சியின் பிரதான இரு கட்சிகளில் ஒன்றான சுதந்திரக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியானது வைரசாக சமூக வலைத்தளங்களை அப்பிக் கிடப்பது ஆரிப் சம்சுடீனின் அபிமானிகளை வெகுவாகச் சிந்திக்கச் செய்துள்ளது.


ஏனெனில,  ஊழலும் மோசடியும் நிறைந்த, இனவாதத்திற்கு உரமூட்டிய அரசை வெற்றி கொள்ளச் செய்வதற்காக அவரது கட்சியின் தலைமை ஆதரவு வழங்குமாறு உத்தரவிட்டபோது, கட்சியின் கட்டளையை விட சமூக ஒற்றுமையே முக்கியம் என்ற கருத்தை பலமாக அக்கட்சிக்குள்; முன்வைத்ததுடன், இந்நாடு நன்மையடைய வேண்டும்.

இந்நாட்டில் ஊழலும் மோசடிகளும் ஒழிக்கப்பட வேண்டும். இந்நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும். அதற்கு தன்னை அர்ப்பணிப்பதே நியாயம் என்ற தேசிய, சமூக சிந்தனையுடன் தன்னை உறுப்பினராக்கிய கட்சியினதும் அதன் தலைமையினதும் வழியில் செல்லாது ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவை இந்நல்லாட்சியின் ஜனாதிபதியாக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் உழைத்தார். அவ்வாறு உழைத்த  மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனை இந்த ஜனாதிபதியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்திருப்பது அரசியலின் களநிலையை தூரநோக்கோடு சிந்திக்கச் செய்துள்ளதாக அபிமானிகள்; குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில.; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏன் ஆதரிக்கிறேன் என ஆரிப் சம்சுடீன் 2015.01.04ஆம்; திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையை அவரின் அபிமானிகள் இக்கணம் மீட்டுகின்றனர். அந்த அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

'தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா? நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா? என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன்.

இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் நல்லாட்சிக்கான மாற்றம் வேண்டும் என்ற ஒரே கருத்தில்; ஒன்றினைந்து அதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை சமூகமான தமிழர்களும் முஸ்லிம்களும் அதன் தொடரில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பயணம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், முஸ்லிம் சமூகம் அதில் ஒரு அங்கமாக இணைந்துள்ள நிலையில், இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாம் அவர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தார்மீகப் பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பை தேசிய காங்கிரஸும் நிறைவேற்ற வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக கட்சியின் தலைமைத்துவத்துடன் எடுத்துரைத்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவம் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதனால் கட்சித் தலைமைத்துவித்தின் நிலைபாட்டுக்கு மாறாக தீர்மானம் எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு இந்த முடிவுக்கு வர வேண்டி ஏற்பட்டது.

அத்துடன், இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கடும்போக்காளர்களினால்; இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை இந்தத் தேசமும் சர்வதேசமும் அறியும்.

இதன்நிமித்தம் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வெகுவாக உள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதிப்பில் நானும் பங்குகொண்டவன் என்ற வகையில் சமூக உணர்வைப் புறந்தள்ளி, மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் செயற்பட முடியவில்லை.

கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் ஆன்மீக செயற்பாட்டில் இடையூறுகளை விளைவித்தபோது, அவ்வமைப்புகளை தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபையினூடாக வலியுறுத்தினோம். இந்நாட்டில் சிறுபான்மை  சமூகம் நிம்மதியாக வாழ வேண்டுமாயின்; இவ்வமைப்புக்கள் தடை செய்யப்படுவது அவசியம் என அறிக்கைகளினூடாக கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திடம் முன்வைத்தோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அவற்றைத் தடை செய்வதற்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டில் வாழுகின்ற சமூகங்களைப் பாதுகாக்க வேண்டியது அவர்களது பொறுப்பாகும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், இந்நாட்டில் சமதானமும் நல்லாட்சியும் ஏற்படுத்தப்பட வேண்டும்;. அதனை ஏற்படுத்துவதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் நானும் இந்த முஸ்லிம் சமூகத்தை, இப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொது எதிரணி வேட்பாளருடன் இணைந்து அவரின் வெற்றிக்காக எஞ்சியுள்ள நாட்களில் முழு மூச்சுடன் செயற்பட உறுதிபூண்டுள்ளதோடு எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரிபாலவின் வெற்றிக்காக அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்'  என அவர் அன்று வெளியிட்ட ஊடக அறிக்கை மீட்டுக் கொள்ளும் அவரது அபிமானிகள் இந்த நான்கு வருடங்களாக அவரினால்  பல நூறு ஏழைக் குடும்பங்கள் நன்மையடைந்துள்தையும் நினைவூட்டுகின்றனர்.

அத்தோடு, 'வாழ்வின் ஒளி;' வாழ்வாதார உதவித்திட்டத்தினூடாகப் இப்பிரதேச ஏழை மக்களின் கண்ணீரைத்துடைத்து அவர்களின் குடும்ப பொருளாதாரத்திற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் உதவி வந்த அவரது எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் அவருக்குள்ள அரசியல் அதிகாரத்தினால் அக்குடும்பங்கள் நன்மையடையக் கூடாது என்ற இலக்குடன் அவரின் பதவியைப் பறிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க, அடைக்குமுறை ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்படக்; கூடாது,

நல்லாட்சியே மலர வேண்டும் என உழைத்தவரையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை தலைமையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்திருப்பது நல்லாட்சியிலும் நல்லவர்களுக்கு நல்ல காலமில்லையா? நல்லாட்சிக்கு உதவியவரை நல்லாட்சியே பதவி நீக்கம் செய்து வேடிக்கை பார்த்துள்ளதா என சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின்  அபிமானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா என்ற சாதாரண மக்களின் கருத்துக்களையும் கவனத்திற்கொள்ளத்தான் வேண்டும்.



இதனை நண்பர்களுடன் பகிரவும்.



    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top