Kidny

Kidny

துருக்கி இராணுவ சதிப்புரட்சி ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா ?? தோல்வி அடைந்தது ஏன்? i

- தில்ஷான் முகம்மத்-

துருக்கி இராணுவ புரட்சி ஒரு நாடகம் என்பவர்கள் முதலில் துருக்கிய அரசியல் அமைப்பில் அதன் இராணுவத்திற்கு இருக்கும் வகிபாகம் பற்றி தேடித்தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் இலங்கை மற்றும் இந்திய அரசியலமைப்பு போல துருக்கிய இராணுவம் அந்த நாட்டின் உள்ளக மற்றும் அரசியல் விவகாரங்களில் இருந்து முற்றுமுழுதாக விலக்களிக்கப்பட்ட நிறுவனம் கிடையாது. துருக்கிய அரசியல் அமைப்பின் பாதுகாவலனே துருக்கிய இராணுவம்தான்.

.
அவ்வந்த காலப்பகுதியில் இருந்த அரசாங்கங்கள் அரசியல் யாப்பை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்தே இதற்கு முன்னரான இராணுவ புரட்சிகள் துருக்கியில் நடந்தேறியது.  இந்த நிலையில், அவர்களிடமே ஒரு நாடகத்தை அரங்கேற்ற சொல்வது , தங்களின் உட்பிரச்சினைக்கு கசாப்பு கடைக்காரனிடம் மாடுகள் நீதி கேட்பதற்கு ஒப்பானது.  இவை எல்லாவற்றிக்கும் மேலாக, துருக்கியையும் அதன் அரசியலையும்  நன்கறிந்த துருக்கியின் அரசியல் கட்சிகளாகட்டும் (எதிர்கட்சிகள் உட்பட), சிவில் சமூக நிறுவனங்களாகட்டும்,  சாதாரண பொதுமக்களாகட்டும் எவருமே இதை ஒரு நாடகம் என்று சொல்ல துணியாத நிலையில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் அடிப்படை அற்றவை.
.

இராணுவ புரட்சி வெற்றியடைவதற்கும் தோல்வியடைவதற்கும் இடையிலான நேர வித்தியாசம் மிகவும் குறுகியது. எந்தவொரு இராணுவ புரட்சியிலும் அதிகாரத்தை கையில் எடுக்க துணியும் இராணுவம் ஏற்கனவே அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் அதிகார மையங்களை தன்வசப்படுத்தல் வேண்டும். இந்த அதிகார மையங்கள் ஜனாதிபதி அல்லது பிரமர் போன்றவற்றுடன்  பாராளுமன்றம், அரச ஊடகங்கள் , நீதித்துறை மற்றும் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடங்களாகும். இவற்றை கையிலேடுப்பதுடன் மாத்திரம் இராணுவ புரட்சிகளின் வெற்றி தங்கியிருப்பதில்லை. தாங்கள் ஆட்சி செய்யபோகும் அந்த நாட்டின் குடிமக்களின் ஆகக்குறைந்தது கால்வாசியாவது இராணுவம் செய்ததது சரி என்ற மனநிலையில் இருக்கவேண்டும். இந்த இரு கலவைகளும் சரியாக ஒன்றுகூடும் போதுதான் இராணுவ புரட்சிகள் வெற்றிபெறும்.
.

ஏன் துருக்கிய இராணுவ புரட்சி தோல்வியுற்றது ?

1. இராணுவத்தின் பிரிவுகள்- இராணுவத்தின் முக்கிய தளபதிகள் உட்பட பல பிரிவுகள் இராணுவ புரட்சியை விரும்பியிருக்கவில்லை. ஒரு காலத்தில் அதாதுர்க்கின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த கோட்டையாக இருந்த இராணுவத்தில், தற்போது பல நடுத்தரவர்க்க சமூகத்தின் பலரும் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் அர்துகானின் ஆதரவாளர்கள்.
.

2. மக்கள் ஆதரவு – கடந்த இரு வருடங்களுக்குள் நடந்த  பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில்  தெளிவான அறுதி பெருன்பான்மையுடன் கூடிய மக்கள் ஆணை அர்துகானின் AKP கட்சிக்கு கிடைத்திருந்தமை என்ன விமர்சனங்கள் இருந்தாலும், மக்கள் செல்வாக்கு அர்துகனுக்கு இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 
.

3. சரணடைய மறுத்தமை – அரச தொலைக்காட்சியை இராணுவ சதிகார்கள் சுற்றிவளைத்து , தாம் ஆட்சியை கைப்பற்றிவிட்டதாக அறிக்கைவிட்டாலும் , இரகசிய இடத்தில் இருந்து ஸ்கைப் மூலம் அரசு தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்துகான்  உரையாற்றியதுடன் இதனை உறுதிப்படுத்த மக்கள் ஆதரவையும் வேண்டி நின்றார். இதேநேரத்தில் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில் இராணுவ புரட்சிக்கு எதிரான கருத்துக்கள் விரைவாக பரப்பபட்டமையால் எந்த தரப்பின் கையில் அரசாங்கம் இருக்கிறது என்ற குழப்பகரமான ஒரு சூழ்நிலை தோன்றியபோதும், தாம் பெற்ற ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க கட்சி பேதம் இன்றி மக்கள் வீதிக்கு இறங்கியமை பெரும் திருப்பமாக அமைந்தது.  
.

4. எதிர்கட்சிகளின் ஆதரவு- அர்துகானுடன் அரசியல் ரீதியில் பலமாக மோதிக்கொண்டாலும், கட்சி பேதம் பாராமல் எதிர்கட்சிகள் , முன்னாள் ஜனாதிபதிகள்/பிரதமர்கள் போன்றோர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டமையால் சதிப்புரட்சியில் ஈடுபட்டிருந்த இராணுவப்பிரிவுகள் தம் அணியினரை தவிர வேறு எவரும் இதற்கு ஆதரவு இல்லை என்று உணர்ந்துகொண்டதால், மக்களை நோக்கி வன்முறையை பாவிப்பதற்கு தயங்கியமை.
.

5. துணிச்சல் – நிலைமையை சரியாக கணித்த அர்துகான், தனது அரசாங்கம் வீழ்த்தப்படவில்லை என்பதை தனது குடிமக்களுக்கு உணர்த்துவதற்கும்,  இராணுவ சதிப்புரட்சி தோல்வியில் முடிவடைந்து விட்டது என்ற செய்தியை அதற்கு அனுசரணை வழங்கிய வெளிச்சக்திகளுக்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிப்பதற்காக  தன்னை சுட்டு வீழ்த்துவதற்காக சில விமானங்கள் பறந்து திரிகின்றன என்று தெரிந்திருந்தும், மூடியிருந்த இஸ்தான்பூல் விமான நிலையத்தில் சில விமானப்படை பிரிவுகளின் உதவியுடன் தனிப்பட்ட விமானம் ஒன்றின் மூலம் வந்திறங்கி ஊடகங்களை சந்தித்தமை.
.

இவை அனைத்தும் ஒரே கோர்வையில் ஒன்றன் பின் ஒன்றாக விடியும் முன்னரே நடந்துமுடிந்ததால் , சதிபுரட்சியில் ஈடுபட்ட இராணுவ பிரிவுகளுக்கு விடிந்த பின்னர் சரணடைவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை.

துருக்கி இராணுவ சதிப்புரட்சி ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா ?? தோல்வி அடைந்தது ஏன்? i துருக்கி இராணுவ சதிப்புரட்சி ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா ?? தோல்வி அடைந்தது ஏன்? i Reviewed by Madawala News on 7/18/2016 09:14:00 PM Rating: 5