Ad Space Available here

நாம் ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறோம்? m- முஜீப்  இப்ராஹீம் -

ஸாகிர் நாயக்கிற்கு ஒரு நெருக்கடி வந்த போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதி என்ன செய்தது?
ஒரு கணம் நின்று யோசித்தது!
"அவர் ஸூபியா, சலபியா?"

எர்தொகான் அந்த கொடிய இரவில் நாட்டை மீட்க தனது மக்களோடு சேர்ந்து போராடிக்கொண்டிருந்த போது முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதி என்ன செய்தது?
கடுமையாக யோசித்தது...!
"துருக்கி முஸ்லிம் நாடா, இல்லையா?"

விபத்தொன்றை சந்தித்தவன் வீதியில் கிடந்து உயிருக்காய் போராடுகிற போது உயிர்காக்க உதவாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்குமே ஒரு கும்பல், அதைப்போலதான் முஸ்லிம் உம்மத்தில் ஒரு பகுதியின் சிந்தனைப்போக்கும் மாறிவருகிறது!

இஸ்லாம் என்பது சாந்தி மார்க்கம் என்று பாலர் வகுப்பு புத்தகத்திலேயே நமக்கு சொல்லித்தந்தார்கள்.
ஒரு முஸ்லிமை கண்டால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லுமாறு மார்க்கம் சொல்கிறது.

சக மனிதனுக்கு ஒரு துயரமென்றால் அவன் யாராக இருந்தாலும் உதவச்சொல்கிறது.

நபிகள் நாயகத்தின் கழுத்தின் மீது அழுகிய ஒட்டகத்தின் குடல்களை வீசிய போதும் அதனை புன்னகையோடு கடந்து போனார்கள்!
பள்ளிவாயலில் ஒருவர் உமிழ்ந்துவிட்டு போன போது அதனை தனது கரங்களினால் நபிகள் நாயகம் சுத்தம் செய்தார்கள்!
இவ்வாறான சாந்தி மார்க்கத்தின் சொந்தக்கார்ர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

நமது சகிப்புத்தன்மை எங்கே இருக்கிறது?

முன்னர்தான் மத வெறியில் நம்மவர் பலர் பிஸியாக இருந்ததார்கள்!
மாற்று மத்த்தவரை மதிக்காத போக்கும் அவர்களுடனான முரண்பாடுகளும் மலிந்திருந்தன....

இப்போது அதுவே சொந்த மார்க்கத்துக்குள் இயக்கங்களாக, குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கடித்துக்குதறிக்கொள்கிற வெறியாக மாறியிருக்கிறது!

முகமன் கூறுவதற்கு எதிரே வருகிறவன் எனது இயக்கமா என்று யோசிக்கிற அளவுக்கு நம்மை யாரோ சீரழித்துவிட்டிருக்கிறார்கள்!
நானும் எனது இயக்கமுமே சரியானது மற்றவரெல்லாம் வழிகேடர்கள் என்ற நஞ்சு ஊசியினை நமது மூளையை கழுவும் போது யாரோ ஏற்றிவிட்டிருக்கிறார்கள்!

ஆகையால் எங்கும் வெறுப்பு, எதிலும் வெறுப்பு!
முன்னே வருகிறவன், அருகே அமர்கிறவன் நண்பனா , எதிரியா என்ற பயம்!
புன்னகை செய்ய பஞ்சம்!

அடைக்கப்பட்ட வட்டத்துக்குள் இருந்து வெளிவர முடியாமல் சிறகுகள் உடைக்கப்பட்ட பறவைகளாக, எந்த அறிவுத்தேடலுமின்றி கூட்டங்கூட்டமாக சாணி வழி செல்கிற மந்தைக்கூட்டங்களை போல் சுய சிந்தனையினை தொலைத்து எம்மாத்திரம் பேர் நமது உம்மத்தில் சீரழிந்து திரிகிறார்கள்?
நமது ஒரேயொரு பலமான ஒற்றுமை எனும் ஆயுத்த்தை யாரோ பறித்துக்கொண்டு நம்மை குழுக்களாக பிரித்து விட்டு மடத்தனத்தை நமது கைகளிலே பரிசளித்திருக்கிறார்கள்!

அதனை வைத்துக்கொண்டு நாம் ஒருவரை ஒருவர் வசை பாடுகிறோம்.
ஒருவர் மீது மற்றவர் சேற்றை அள்ளி வீசுகிறோம்.
மடத்தனங்களால் இதனை விட வேறு எதனையும் செய்துவிட முடியாது!
அறிவு சூன்யமானவர்களிடம்....

எந்தவிதமான ethics உம் கிடையாது!
எந்தவிதமான human values உம் கணக்கில் எடுபடுவதுமில்லை!
இதனால்தான்,

ஆப்கானிஸ்தானில் அமைதியை தொலைத்து யுகங்களாச்சு!
ஈராக்கை இழந்து பல காலமாச்சு!
லிபியாவும் போச்சு!
பலஸ்தீனும் அழிகிறது, சிரியாவும் எரிகிறது!
காஷ்மீர் அழுகிறது!
நபியின் காலடிக்கும் பயங்கரவாதம் வந்துவிட்டது!

எல்லா இடங்களிலும் தோல்வியும், துயரமும் கண்ட உலக முஸ்லிம் உம்மத்திற்கு ஒரேயொரு ஆறுதலாக இருந்த துருக்கியின் இதயத்தையும் சதிப்புரட்சி தாக்கிற்று!

நாம் ஏன் தோற்க கூடாது?
ஹாமாசும், PLO வும் இணையாத போதும்
பைத்துல் மக்திசுக்கு கனவு காணும் நமது மடத்தனங்கள் இருக்கும் போது....
வலது கையில் தஸ்பீஹ் மணியும் இடது கையில் மதுக்கோப்பையுமாக நம்மை காட்டிக்கொடுக்கும் அரேபிய சியோனிஸ்டுகள் இருக்கும் போது.....
வாப்பாவின் மையத்தை அடக்குவதற்கும் இரு வேறு இயக்கங்களில் இருக்கிற மகன்மார்கள் இழுபறியில் இருக்கும் போது......
நாம் ஏன் தோற்க கூடாது?

முதலில் நீங்கள் எடுத்திருக்கும் றகீப் அதீத்தின் எழுதுகோல்களை கொஞ்சம் கீழே வையுங்கள்.....

பிறகு வெற்றியை பற்றி யோசிப்போம்.

நாம் ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறோம்? m நாம் ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறோம்? m Reviewed by Madawala News on 7/21/2016 11:06:00 PM Rating: 5