Yahya

கிழக்கின் எழுச்சி மக்களின் புரட்சி அல்ல பதவிற்கான முயற்சி.... mcஇன்று கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியில் பெரும்பாலான ஊடகங்கலில் பேசு பொருளாக மாறியுள்ள அரசியல்வாதிகள், படித்தவர்கள், பாமார மக்கள் என அரசியல் சார்ந்த அனைவரின் கவனத்தையும் ஒரே கனம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் விடயம் தான் கிழக்கின் எழுச்சியாகும்.

கிழக்கின் எழுச்சி என்றால் என்ன….? என்ற கேள்விக்குப்பதில் தேடுவதற்கு முன்னர், இந்த கிழக்கின் எழுச்சியைத் தூண்டி விட்டு, மௌனம் காப்பவர்களின் நிலையானது, பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற நிலையாகத்தான் இருக்கின்றது


இவர்கள் வேறு யாருமில்லை. அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெயரினால் பதவிகளால் மாத்திரமே  அலங்கரிக்கப்பட்டு இருந்த கைப்பொம்மைகள் இன்று அந்தப்பதவிகள் கை நழுவியிருக்கின்ற சூழ்நிலையில், அதனை சகித்துக் கொள்ள முடியாததால் மக்களாலும் தாம் அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, அரசியலிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வரும் போது, தலைமைத்துவத்தின் மீது தனிப்பட்ட ரீதியிலிருந்த காழ்ப்புணர்வைத் திட்டமிட்டு திணிக்க முற்படுவதே இந்த கிழக்கின் எழுச்சியாகும் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


அவர்களின் நப்பாசைக்கு பகடைக் காயக்கப்பட்டவர் தான்  கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாரூக். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் மரணத்துக்குப் பிற்பாடு இவரை அநேகருக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன். அந்தளவுக்கு அரசியலில் எந்தவித ஈடுபாடுமில்லாமலிருந்த ஒருவர் திடீரென்று கிழக்கின் எழுச்சி என்று கூக்கிரலிட்டுக் கொண்டு கட்சியின் தலைமைத்துவம் கிழக்குக்கே மாற்றப்பட வேண்டுமென்ற வெற்று கோஷமிட்டால் யாருக்குத்தான் வேடிக்கையாக இருக்காது…..? ஆனால், இந்த வபா பாரூக் கிழக்கின் எழுச்சி என்ற  கோஷத்தை ஊடகங்களுக்குக் கொண்டு வருவதற்கு, சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியைச் சந்திதுள்ள உண்மையும் தற்போது கசிந்த வண்ணமுள்ளது.


உண்மையில், ஓர் அரசியல் கட்சியின் தலைவரைத் தோற்கடித்து, அப்பதவியை பெறுவதென்பது சாதரண விடயமல்ல. அதனை கட்சியின் செயலாளரோ, தவிசாளரோ, உயர் பதவியிலிருக்கக் கூடியவர்களோ தீர்மானிக்கவும் முடியாதென கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தேசியப்பட்டியலை நம்பி ஏமாற்றப்பட்ட வை.எல்.எஸ்.ஹமீட்டிலிருந்து நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு அரசியல்வாதியைத் தோற்கடிப்பதோ, அவரை அரசியலிலிருந்தது ஓய்வு பெறச் செய்வதோ அரசியல் கட்சியல்ல.

மாறாக, அதனை பொது மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும். அதற்கு உதாரணம் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவாகும். அவர் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டும் ஏதோ ஒரு வகையில், இன்று வரை நிலை குலையாமல் தனது அரசியல் வாழ்க்கையைத் தாக்குப்பிடித்துக் கொண்டு போவதற்கு முக்கிய காரணேம் அவருடைய மக்கள் செல்வாக்கு இன்றும் ஏதோ ஒரு மூலையில் தங்கிக் கிடப்பதே.

இலங்கை வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகளில் யாருக்குமில்லாத ஓர் தனிச்சிறப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் இருக்கின்றது. அது அகில இலங்கை ரீதியில்  எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிட்டாலும் அல்லாஹ்வின் உதவியுடன்  அவரால் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள முடியும். இது கட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள பற்றோ அல்லது தலைவரின் சாணக்கியத்துக்கு கிடைக்கும் வெற்றியோ என்பதை என்னால் கணித்துக் கூற முடியாது.


எது எதுவாக இருந்தாலும், கிழக்கின் எழுச்சியில் தற்போது நாளுக்கு நாள் இக்கட்சியிலிருந்து விலகிச்சென்ற பலர் இணைந்த வண்ணமேயுள்ளனர். இவர்களால் தலைமைத்துவத்தை கிழக்கிற்கு கேட்பதற்கு முன்னர் அந்த தலைமைத்துவத்துக்கு யார் தகுதியானவர் இருக்கின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ரவூப் ஹக்கீமை கட்சியில் இணைந்து கொண்டமைக்கான காரணம் அவரின் மக்கள் செல்வாக்கோ, பொருளாதார வசதியோ அல்ல. மாறாக, அவரின் ஆளுமையும் மொழித்திறனுமே. ஏனெனில், மும்மொழிகளும் சரளாமாகப் பேசுவதற்கான ஆற்றல் அவரிடமிருக்கின்றது. அதற்கா நான் மும் மொழிகளிலும் ஆற்றலுள்ளவர்கள் கிழக்கில் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போதய அரசியல்வாதிகளில் அதனை வைத்துச் சாதிப்பதற்கான அனுபவமும் சாணக்கியமும் அவர்களிடம் இல்லை என்பதே அவர்களுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து நாம் அடைந்திருக்கின்ற நிதர்சனமான உண்மையாகும்.

கட்சி என்பது மக்களின் உரிமைக்காகப் போராடும் ஓர் குரலே தவிர, மக்களை நல் வழியில் அழைக்கின்ற களமல்ல. கட்சியிடமோ கட்சியின் தலைமையிடமோ நாம் மார்க்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதனை கொள்கையை மையப்படுத்தி மாத்திரமே இயக்க வேண்டுமென்றாலும், அதற்கு நாம் இஸ்லாமிய ஆட்சி முறையான நாட்டில் தான் பிறந்திருக்கு வேண்டும். அதற்காக சில  மார்க்கம் சம்பந்தப்பட்ட  பொடுபோக்கான விடயங்களைக் கண்டிக்காமல் விட்டு விடவும் முடியாது.


கிழக்கின் எழுச்சியை மக்கள் மயப்படுத்தி, அதனை தேர்தல் மூலமாக மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமாக இருந்தால், அதனை ஜனநாயக முறையில் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். மாறாக, அதனை விட்டு ஊடகங்களை மையப்படுத்தியோ கலகங்களையும்,

அட்டூளியங்களையும் கட்டவிழ்த்து, அதனை அடைய நினைத்தால் நிச்சயம் அது சதித்திட்டக்காரர்களுக்கு பகல் கனவாகவே அமையும். மாறாக, கிழக்கின் எழுச்சியை மக்களின் புரட்சி என்பதை விட பதவிக்கான முயற்சியே என்று கூற முடியும்.

எவ்வாறாயினும் ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் இனவாதிகளுக்கு இது சாதகமாகவே அமையும். ஆகவே, அனைத்தின முஸ்லிம்களும்  ஒன்றிணைந்து, இதனை முறியடிக்க வேண்டும். அதுவே எம் மார்க்கத்துக்கும் இனத்துக்கும் ஆரோக்கியமாக அமையக் கூடும் .

வை.எம்.பைரூஸ் 
வாழைச்சேனை
கிழக்கின் எழுச்சி மக்களின் புரட்சி அல்ல பதவிற்கான முயற்சி.... mc கிழக்கின் எழுச்சி மக்களின் புரட்சி அல்ல பதவிற்கான முயற்சி.... mc Reviewed by Madawala News on 7/07/2016 02:02:00 PM Rating: 5