Ad Space Available here

காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?-முஹம்மது நியாஸ்-

காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள், விபரங்கள் அனைத்தும் ஒரு அரச சார்பற்ற மேலைத்தேய தனியார் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றிற்கு விற்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் பல கிடைத்துள்ளன.

காத்தான்குடியைச் சேர்ந்த, அடிக்கடி மேலைத்தேய நாடுகள் பலவற்றிற்கு தனிப்பட்ட பயணங்களை "தனியாக" மேற்கொள்கின்ற "ஆங்கில மொழிப்புலமை" வாய்ந்த பெண் ஆசிரியை ஒருவர் குறித்த அந்த NGOவிடம் இதுவரைக்கும் சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய்களுக்கும் மேற்பட்ட பணத்தொகையை பெற்றுக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்கள் பற்றிய விபரங்களை பிரதேச செயலகம் மற்றும் காழி நீதிமன்றம் ஆகியவற்றினூடாக பெற்று குறித்த அந்த NGOவிற்கு இவ்வாசிரியை அறிக்கைகளாக சமர்ப்பித்து விற்பனை செய்து வருகிறார் என முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக அறியக்கிடைத்துள்ளது.

இஸ்லாமிய சமூகத்திற்கென்று இந்நாட்டில் பிரத்தியேகமான விவாக நடைமுறைச் சட்டங்கள் இருந்துவருகின்ற போதிலும் அண்மைகாலமாக இளவயது திருமணங்களை தடைசெய்யும் கோஷங்கள் இலங்கை நாட்டின் இனவாத குழுக்களால் பரவலாக எழுப்பப்பட்டு வருவது யாவரும் அறிந்த ஒருவிடயமாகும்.

இதனையடுத்து இந்த இளவயது திருமணங்களை இஸ்லாமிய சமூகத்திலும் தடைசெய்யும் நோக்கில் காத்தான்குடியில் மட்டுமல்லாது இலங்கையின் இஸ்லாமியர்கள் செறிவாக வாழ்கின்ற அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான "இரகசிய தகவல் சேகரிப்புகள்" நடைபெறுகிறதா என்றொரு வலுவான சந்தேகம் இப்போது மேற்கொண்டு வலுப்பெற்றுள்ளது.

இதுபோன்ற தகவல்களை அறிக்கைகளாக தொகுத்தெடுத்து அவற்றில் விவாகரத்துக்களை மாத்திரம் அடிக்கோடிட்டுக்காண்பித்து அவ்விவாகரத்துக்களுக்கு இளவயது திருமணங்கள்தான் காரணமென்ற மாயையை ஏற்படுத்தி, அதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தில் நடைபெற்று வருகின்ற இளவயது திருமணங்களிலும் எதிர்காலத்தில் கைவைக்கின்ற கைங்கர்யமாக இது இருக்குமோ என்றொரு நியாயமான சந்தேகமும் இங்கே முன்வைக்கப்படுகிறது.

குறித்த ஆசிரியைக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கி இந்த தகவல்களை பெற்றெடுக்கின்ற NGO அந்த தகவல்களின் மூலம் பெறப்போகின்ற இலாபவீதம் எவ்வளவு என்பதும் இங்கே தவிர்க்கமுடியாத ஒரு கேள்வியாக முன்னே வந்து நிற்கிறது.

மாத்திரமன்றி ஒருவாதத்திற்கு இந்த வேலைத்திட்டம் சமூகம் நலன்கருதிய ஒன்றாகவே இருந்தாலும் அதற்காக குறித்த NGO பல இலட்சக்கணக்கான ரூபாய்களை அந்த ஆசிரியைக்கு வாரியிறைக்கவேண்டிய அவசியப்பாடுதான் என்ன?

அவ்வாறான ஒரு சமூகத்தின் நலன்கருதிய செயற்திட்டத்தை குறித்த அந்த ஆசிரியை சமூகத்தின் தலைமை நிறுவனங்களிடமோ அல்லது ஏதேனும் பொறுப்புவாய்ந்த அமைப்புக்களிடமோ முன்னறிவித்தல்கள் எதையும் விடுக்காது, ஆலோசனைகள், வழிகாட்டல்கள் எவற்றையும் பெற்றுக்கொள்ளாது, அவ்வமைப்புகளையோ, நிறுவனங்களையோ கூட்டிணைக்காது இதில் தனியாக இறங்கி மறைந்துநின்று செயற்படவேண்டியதன் தேவைப்பாடு என்ன?

அல்லது "இந்த செயற்திட்டத்தின் விபரங்கள் அனைத்தும் பிரதேசத்தின் தாய் நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களுடைய ஒத்தாசைகளுடன்தான் நடைபெறுகிறதா?

இந்த "ஆங்கில மொழிப்புலமை" வாய்ந்த ஆசிரியைக்கு குறித்த NGOவினால் வழங்கப்படுகின்ற கையூட்டில் இந்த பொறுப்பு வாய்ந்த தலைமை நிறுவனங்களும் பங்கு பெறுகின்றனவா?" என்ற வெளிப்படையான கேள்விகளும் எம்மிடத்தில் எழாமல் இல்லை.

எனவே எது எவ்வாறாகினும்,
இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்கள் தொடர்பான தகவல்கள், விபரங்கள் என்பன சமூகத்தில் ஒரு தனிப்பட்ட நபருக்கு மாத்திரம் சொந்தமானவைகளல்ல. மாற்றமாக அவையனைத்துமே ஒட்டுமொத்தமாக இந்த இஸ்லாமிய சமூகத்தினுடைய ஒரு உள்ளகட்டமைப்புடன் கூடிய பிரத்தியேக தகவல்களாகும்.

அவ்விபரங்களை சமூகத்திலுள்ள தனிநபர் ஒருவர் வெளிநாட்டு, மேலைத்தேய NGO ஒன்றிற்கு பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்காக இரகசியமாக விற்பனை செய்வதென்பது அதன் பின்புலத்தில் ஏதோவொரு "சதித்திட்டம்" மறைந்துள்ளது என்பதை மிகச் சாதாரணமாகவே எமக்கு உணர்த்திவிடுகின்றது.

எனவே இந்த "இரகசிய" செயற்திட்டத்தின் மூலமாக சமூகத்திற்கு கிடைக்கப்பெறுவது நன்மையோ தீமையோ எதுவாக இருப்பினும் அது வெளிப்படையானதாக, மக்கள் மயப்படுத்தப்பட்டவையாக அமையப்பெறவேண்டும்.

அதேநேரம் சமூகத்தின் தலைமை நிறுவனங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைப்புக்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என்பன முறையாக பெறப்பட்டு அந்நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் மேற்பார்வையின் கீழேயும் செயற்படுத்துவதே ஆரோக்கியமானது, முறையானது என்பதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களுக்கும் இத்தால் ஆலோசனையாக முன்வைக்கிறேன்.

-முஹம்மது நியாஸ்- காத்தான்குடி 
காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா? காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா? Reviewed by Madawala News on 7/20/2016 04:47:00 PM Rating: 5