Ad Space Available here

பாகிஸ்தான் தேசத்தையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு மரணம். pkஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 


பாகிஸ்தான் வரலாற்றில் இறுதிச் சடங்கொன்றில் துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்பட்டது இதுவரையில் மூவருக்கு மாத்திரமே. அதில் இறுதியில் இணைந்திருப்பவர் 'அப்துல் சத்தார் எதி' எனும் 88 வயதில் மரணித்திருக்கும் இந்த முதியவர்.

இவரொரு அரசியல் தலைவரா? ஒரு ஆன்மீக தலைவரா? பல வெற்றிகளை குவித்த விளையாட்டு வீரரா? என்கிற கேள்விக்கு ஒரு முறை இவரை பேட்டி எடுத்த நிருபர் பீட்டர் ஒபேர்னே இன் வரிகள், இவரை விவரிக்க மிக்க பொருத்தமானவை. "ஒரு பத்திரிகை நிருபராக நாடுகளது தலைவர்கள், பிரதமர்கள் என பலரையும் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் பாகிஸ்தானின் இந்த மனிதரை சந்திக்கிற வரையில் அத்தனை புனிதமான மனிதர் ஒருவரை நான் சந்தித்தது இல்லை. இவரோடு கைகுலுக்கிக் கொண்டிருந்த அந்த சில நொடிகள் ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் மிகவுயர்ந்த ஒருவருக்கு முன்னாடி நிற்பதை உணர்ந்தேன்."

உலகின் மிகச்சிறந்த அம்பியுலன்ஸ் சேவை இவரால் தொடங்கப்பட்ட 'எதி டிரெஸ்ட்' இனுடையதே. 1800 அம்பியுலன்ஸ்கள், 28 படகுகள், 250 வானூர்தி அம்பியுலன்ஸ்கள், 9000 தொண்டர்கள், 335 தொண்டு நிலையங்கள், 30 மருந்தகங்கள் மற்றும் 20 நகரங்களில் உணவகங்கள் என இவரது நிறுவனம் வாழ்வளித்த, வாழ்வளித்துக் கொண்டிருக்கிற மக்களது எண்ணிக்கை பல மில்லியன்கள். தனியொரு மனிதனால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. தனியொரு மனிதனால் ஒரு தேசத்தையே நிர்மாணிக்க முடியும் என காட்டியவர் இவர்.

தனியொருவராக எதி நிறுவனத்தை ஆரம்பித்து அடுத்த அறுபது வருடங்களுக்கு வெற்றிகரமான நிறுவனமாக முன்னெடுத்த சரித்திரத்தில் எத்தனையெத்தனை சவால்கள், இழப்புகள், சாதனைகள் என இவர் கண்ட அனுபவங்களை தெரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்குகிற பாடங்கள்.

'அப்துல் சத்தார் எதி' பதினொரு வயதானவராக இருக்கும்போது பக்கவாதத்திற்கு தனது தாயை இழந்தவர். தாயார் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த அனுபவங்கள், தாயார் மீதான பாசம் என்பனவே தனது தாயாரைப்போல வயதான, மனநிலை சரியில்லாத மற்றும் வாழ்வை சவாலாக கொண்டுசெல்கிற பலரும் அரவணைக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது. தனது சேவையை தனது பிரதேசம், தனது மதம், தனது மக்கள் என்கிற எதற்குள்ளும் குறுக்கிக்கொள்ளவில்லை அவர்.

பாகிஸ்தானில் முறையான திருமணத்திற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளை தாய்மாரே கொன்று வந்த நேரமது. ஒரு முறை ஒரு குழந்தை சில குருட்டு மதவாதிகளின் பத்வாவினால் கல்லெறிந்து கொல்லப்பட்ட நேரம், "நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்றிருக்க, எதுவுமறியா குழந்தையை கொல்ல உங்களுக்கு அதிகாரமளித்தது யார்....?"

என்று கேட்ட அவர், தனது தொண்டு நிறுவன கட்டடங்களின் முன்னாடி ஒரு தொட்டிலை வைத்து, "இன்னுமொரு பாவத்தை செய்யாதீர்கள். உங்களது குழந்தையைஎங்களிடம் தாருங்கள் நாங்கள் கவனிப்போம்." என்றார். அவர் காப்பாற்றிய குழந்தைகளது எண்ணிக்கை அண்ணளவாக 35,000 என்கிறது ஒரு தரவு.

வழி தவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த வாய் பேசாத காது கேளாத இந்திய சிறுமி கீதாவை 20 வருடகாலம் பராமரித்து பத்திரப்படுத்தி அனுப்பியவர், அப்போதுகூட மோடி அரசாங்கம் அன்பளிப்பு என்ற பெயரில்1 கோடி பணத்தை கொட்டி அவரின் புனிதத்தை களங்கப்படுத்த நினைத்தது. துச்சமென தூக்கி எறிந்தார், மனிதாபிமானத்துக்கு விலையில்லை என்றார்.

தனது தன்னிகரற்ற சேவைகளுக்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை வென்றுகுவித்த இவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. ஒன்றில் பொருத்தமற்ற பல மனிதர்களுக்கு கிடைத்த நோபல் பரிசு எதி போன்ற உன்னதமான மனிதரொருவருக்கு கிடைக்காமைக்காக சந்தோசப்படலாம் அல்லது நோபல் பரிசுக்கு எதி போன்ற ஒருவரது கைகளில் தவழ கொடுத்து வைத்திருக்கவில்லை என சிலாகிப்பும் கொள்ளலாம்.


முஸ்லிம் உலகு தீவிரவாத சமூகமாக, மனிதாபிமானமற்ற சமூகமாக காட்ட முயற்சிக்கப்படும் இக்காலகட்டத்தில் எதி போன்றவர்களை நாம் எழுதவும், வாசிக்கவும், பரப்பவும் வேண்டியிருக்கிறது. அதைவிட மேலாக அந்த உன்னதமான மனிதரது மனிதர்கள் மீதான காதலை ஓரளவுக்காவது இன, மத, மொழி, இயக்கத்துக்கு அப்பால் நமக்குள்ளும் கொண்டுவர வேண்டியிருக்கிறது.
பாகிஸ்தான் தேசத்தையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு மரணம். pk பாகிஸ்தான் தேசத்தையே  சோகத்தில் ஆழ்த்திய ஒரு மரணம். pk Reviewed by Madawala News on 7/14/2016 09:58:00 PM Rating: 5