Ad Space Available here

கொலை செய்­யப்­பட்ட தினம் நண்பனிடம் இருந்து தொலைபேசி... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணை விபரம். wஎம்.எப்.எம்.பஸீர்)

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு அண்­மித்த இரவு பொழுதில் அவ­ருடன் இருந்த இரு நண்­பர்­களில் ஒரு­வ­ருக்கு உள் வந்த, வெளிச் சென்ற இரு சந்­தே­கத்­துக்­கு­ரிய அழைப்­புக்கள் குறித்து
தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு அறி­வித்­துள் ­ளது.

வஸீம் தாஜு­தீ­னின் குறித்த இரு நண்­பர்­களும் மது அருந்­தி­யுள்­ள­தா­கவும் இதன்­போதே அதில் ஒரு நண்­ப­ருக்கு தொலை­பேசி
அழைப்­பொன்று வந்­துள்­ள­தா­கவும், அதனைத் தொடர்ந்து நண்­பர்கள் இரு­வ­ரையும் வஸீம் தாஜுதீன் தனது காரில் ஏற்­றிக்­கொண்டு அவ­ரவர் வீடு­க­ளுக்கு கொண்டு போய் விடச் சென்ற போது காருக்குள் வைத்து குறித்த நண்பர் தனது தொலை­பே­சியில் இருந்து ஒரு இலக்­கத்­துக்கு வெளிச் செல்லும் அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு தெரி­வித்­துள்­ளது..

இது கொலை தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­விக்கும் நிலையில் அது குறித்து தீவிர விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.டப்­ளியூ. விக்­ர­ம­சே­கர, கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் நேற்று தாக்கல் செய்த வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடா­கவே இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று பிற்­பகல் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது இந்த விவ­காரம் தொடர்பில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா, மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க ஆகியோர் தனித்­த­னி­யாக சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

முத­லா­வது சந்­தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ர­ணவும், 2 ஆவது சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அணில் சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சந்­திக பீரிஸும் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.டப்­ளியூ விக்­ர­ம­சே­கர, மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் சார்ஜன் ரத்­ன­பி­ரிய ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். அவர்­க­ளுடன் அரச சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் பெரே­ராவும் மன்றில் ஆஜ­ரானார்.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.டப்­ளியூ. விக்­ர­ம­சே­கர கடந்த 14 நாட்­க­ளாக செய்த விசா­ர­ணையின் மேல­திக அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பித்தார்.

குறித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது,

வஸீம் தாஜு­தீனின் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­திக்­கு­ரி­யது என நம்­பப்­படும் சில சி.சி.ரி.வி. காட்சிப் பதி­வுகள் பொலிஸ் கண்­கா­ணிப்பு பிரிவின் ஊடாக பெறப்­பட்டு அவை தற்­போது கன­டாவின் தொழில் நுட்ப ஆய்வு கூட­மொன்­றுக்கு அனுப்­பு­வ­தற்­கான இறுதிக் கட்­டத்தில் உள்­ளன.

குறித்த ஆய்வு நிலை­யத்­துக்கு அந்த சி.சி.ரி.வி. காட்­சி­களை அனுப்­பு­வ­தற்­கான வீஸா விண்­னப்பம் கோரப்­பட்­டுள்­ள­துடன் அதற்­கான அத்­தனை செல­வுக்­கு­மான நிதியும் கிடைத்­துள்­ளது. எனவே அதனை மிக விரை­வாக ஆய்­வுக்கு கன­டாவின் குறித்த நிறு­வ­னத்­துக்கு அனுப்­ப­வுள்ளோம்.

அத்­துடன் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்பில், விசா­ர­ணை­களை மூடு மறைத்­தாரா என்ற போர்­வையில் முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (சி.சி.டி) பணிப்­பாளர் அப்­போ­தைய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரும் தற்­போது பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்­ள­வ­ரு­மான டி.ஆர்.எல். ரண­வீ­ர­விடம் நாம் தீவிர விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்ளோம்.

அதில் ஒரு அங்­க­மாக அவரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்து விசா­ரணை செய்து வாக்கு மூலமும் பதிவு செய்­துள்ளோம். அவ­ரது வாக்கு மூலத்தில், தான் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த காலப்­ப­கு­தியில் கடந்த 2012.05.18 ஆம் திக­தி­யன்று வேறு ஒரு கட­மையின் நிமித்தம் அப்­போது மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த அனுர சேன­நா­யக்­கவை சந்­திக்க சென்­ற­தா­கவும் இதன்­போது பல முக்­கிய உயர் பொலிஸ் அதி­கா­ரி­களும் பெயர் தெரி­யாத சில பொலிஸ் அதி­கா­ரி­களும் அவ­ரது அலு­வ­ல­கத்தில் கூட்டம் ஒன்றில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­வித்தார்.

அந்த கூட்­ட­மா­னது வஸீம் தாஜு­தீனின் கொலை தொடர்­பி­லா­னது எனவும், தான் அவ்­வி­டத்­துக்கு சென்ற போது, அது குறித்த விசா­ர­ணையில் தன்னை குறுக்­கிட வேண்டாம் எனவும், சி.சி.டி. அவ்­வி­சா­ர­ணையில் மூக்கை நுழைக்க வேண்­டி­ய­தில்லை எனவும் அனுர சேன­நா­யக்க கூறி­ய­தாக அவரின் வாக்கு மூலத்தில் தெரி­விக்­கப்ப்ட்­டுள்­ளது. இந் நிலையில் அது குறித்த மேல­திக விசா­ர­ணை­களை தொடர்­கின்றோம்.

கடந்த 2012.05.16 அன்று இரவு, அதா­வது வஸீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட முன்­ன­ரான இரவு வேளையில் அவரும் அவ­ரது இரு நண்­பர்­களும் சேர்ந்து மது அருந்­தி­யுள்­ளனர். இதன்­போது அவர்­களில் இருந்த இரு­வரில் ஒரு நண்­ப­ருக்கு தொலை பேசி அழைப்­பொன்று வந்­துள்­ளது. இதனைத் தொடர்ந்து மது அருந்­திய பின்னர் அவர்­களின் வீடு நோக்கி செல்லும் போது குறித்த உள் வந்த அழைப்பை பெற்ற நண்பர் காருக்குள் வைத்து வெளிச் செல்லும் அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த இரு அழைப்­புக்கள் தொடர்­பிலும் பாரிய சந்­தேகம் உள்­ளது. இது குறித்து ஏற்­க­னவே விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. பலரின் வாக்கு மூலங்­களும் இதற்­காக பெறப்­பட்­டுள்­ளன. அது குறித்த தீவிர விசா­ர­ணை­களும் தொடர்­கின்­றன.

எனவே தண்­டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்­தி­யா­யத்­துடன் இணைத்து பேசப்­படும் குற்­ற­வியல் சட்­டத்தின் 296, 113 (ஆ) பிரி­வு­களின் கீழ் சந்­தேக நபர்கள் மீது குற்றச் சாட்டு உள்­ளதால் பிணை வழங்கக் கூடாது என கோரப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது மன்றில் வாதங்­களை முன் வைத்த அரச சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க,

இந்த விவ­காரம் குறித்து மிக சூட்­சும விசா­ரணை ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில், குற்றச் சாட்­டுக்­களின் பார­தூ­ரத்தை கருத்தில் கொண்டு பிணை சட்­டத்தை ஆராய்ந்து அதன் கீழ் சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வதை மன்று மறுக்க வேண்டும் என கோரினார்.

இத­னை­ய­டுத்து முத­லா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண,
தனது சேவை பெறுநர் சாதா­ர­ண­பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் என்ற ரீதியில் அவர் தனது உயர் அதி­கா­ரி­களின் கட்­ட­ளை­க­ளையே செயற்­ப­டுத்­தி­ய­தா­கவும் அதனால் அவ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் சட்­டத்தின் 296 இன் கீழ் குற்றம் சுமத்­து­வதா என சட்ட மா அதிபர் அறி­விக்க வேண்டும் எனவும் கோரினார்.
இரண்டாம் சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணியும் அனுர சேன­நா­யக்க தொடர்பில் கடந்த தவ­ணையில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களை கருத்தில் கொண்டு பிணை வழங்க கோரினார்.

இலங்கை வைத்­திய சபையின் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி முன்னாள் பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ராக இம்­மாதம் 23 ஆம் திக­தியும் அவரின் உத­வி­யா­ளர்­க­ளான அம­ர­ரத்ன, ராஜ­குரு ஆகி­யோ­ருக்கு எதி­ரான 9 ஆம் திக­தியும் விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து நீதிவான் நிஸாந்த பீரிஸ் தனது கட்­ட­ளை­களை திறந்த மன்றில் அறி­வித்தார்.

முத­லா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவின் பிணை கோரிக்­கையை பிணை சட்­டத்தின் 13 ஆவது அத்தியாயத்தின் கீழ் ஆராய்ந்ததாகவும் அதன்படி அவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் அறிவித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ் பிணை வழங்க முடியாது எனவும் மேல் நீதிமன்றை நாடுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் 2 ஆவது சந்தேக நபருக்கு நேற்றைய தினம் பிணை வழங்க மறுத்த நீதிவான் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் முதலில் கிடைக்கப் பெற்ற மருத்துவ அறிக்கை, அனுரவின் பிரத்தியேக மருத்துவரின் அறிக்கை ஆகியவற்றினை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
அதன்படி சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் நிஸாந்த பீரிஸ், வழக்கை மீளவும் இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

கொலை செய்­யப்­பட்ட தினம் நண்பனிடம் இருந்து தொலைபேசி... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணை விபரம். w கொலை செய்­யப்­பட்ட தினம் நண்பனிடம் இருந்து தொலைபேசி... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணை விபரம். w Reviewed by Madawala News on 7/08/2016 09:31:00 AM Rating: 5