Yahya

அநீதியிழைக்கப்பட்ட காத்தான்குடி 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க அனைரும் ஒன்று திரள்வோம்.புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் jP (All Island)
(பிரதம ஆசிரியர் - 'வார உரைகல்' ஊடக நிறுவனம்)


அநீதியிழைக்கப்பட்ட 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க அனைத்து ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்குக!

'வார உரைகல்' ஊடக நிறுவனம் பகிரங்க வேண்டுகோள்

காத்தான்குடி ரெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 17ம் திகதி புதன்கிழமை இரவு 15 வயதுடைய பாடசாலை மாணவன் எம்.ஆர். றிஜான் என்பவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக 18ம் திகதி வியாழக்கிழமை இணையதளங்களில் செய்தியொன்றை வாசிக்கக் கிடைத்தது.

எனினும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு இணையதளம் இச்சிறுவன் மின்சாரத்தினால் தாக்கப்படவில்லை. இவர்மீது அசிட் வீச்சுத் தாக்குதலே இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியிட்டதை வாசித்ததும் நாம் உஷாரடைந்தோம்.

எனது உதவி ஆசிரியரான ஏ.எல். முகம்மது நியாஸ் என்பவரையும் இவ்விடயத்தில் ஆய்வு செய்து அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டேன்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக மேற்கொண்ட தேடல்கள் மூலம் பின்வரும் விபரங்களை ஆதாரபூர்வமாக நாம் கண்டறிந்ததுடன், இன்றைய தினம் இச்சம்பவத்தின்போது குறித்த சிறுவன் அணிந்திருந்த காற்சட்டையையும் ஒரு தடயப் பொருளாக நான் கையேற்றுப் பத்திரப்படுத்தியுள்ளேன்.

குறித்த சிறுவனின் வயது 15 ஆகும். இவர் மட்கா/த்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். இவரது குடும்பம் மிகவுமே வறுமையானது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இச்சிறுவனின் தந்தை 20 நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டில் வேலை வாய்ப்பொன்றைப் பெற்றுச் சென்றுள்ளார். 16 வயதுடைய ஒரு சகோதரியுடனும், தாயுடனும் புதிய காத்தான்குடி அல்அமீன் வீதியில் வசித்து வருபவராவார்.

இவரது குடும்ப வறுமை நிலை காரணமாக பாடசாலை விடுமுறையைப் பயன்படுத்தி இந்த வர்த்தக நிலையத்தில் வாரத்திற்கு 2500 ரூபா சம்பளம் எனும் அடிப்படையில் ஒரு பணியாளராக வேலை செய்து வந்தார்.

காலை உணவுக்காக புறம்பாக 50 ரூபாவையும் இவருக்கு வழங்குமாறு கடை உரிமையாளர் கணக்காளரைப் பணித்திருந்தார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதலில் இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்ட போது இம்மாணவனின் வயது 15 என்றே குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் சில இணையதளங்களில் அவரது வயதை 18 என மாற்றி இருந்ததும் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாற்றம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றவியல் சட்டத்தின் பிடியில் இருந்து செல்வந்தரான குறித்த கடை உரிமையாளரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் நம்புகின்றோம்.

18ம் திகதி வெளியான 'மின்சாரம்' தாக்கியதென்ற செய்திக்கு மாற்றமாக, 19ம் திகதி வெளியான 'அசிட் வீச்சு' என்ற செய்தி உள்ளுர் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது.

இதனால், முதலில் மின்சாரம் தாக்கியதாக செய்தி வெளியிட்ட இணையதளங்களில் ஒன்று சம்பவம் நிகழ்ந்த வர்த்தக நிலையத்தின் CCTV கெமராவில் பதிவாகியிருந்த இத்தாக்குதல் சம்பவம் பற்றிய காணொளியை பின்னர் வெளியிட்டது.

அது 'முழுமையான காணொளி' என்று ஒளிநாடாவின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சரியாக 17 நிமிடக் காட்சிகள் மிக நுணுக்கமாக அவர்களால் தணிக்கை செய்யப்பட்டிருந்ததும் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டது.

 இக்காணொளியின் மூலமும் 'மின்சாரத்தினால்தான் இச்சிறுவன் தாக்கப்பட்டான்' என்பதையே அந்த இணையதளம் நிறுவ முற்பட்டிருந்தது.

குறித்த காணொளியின் காட்சிகளையே ஆர்வத்துடன் பார்வையிட்ட உள்ளுர் மக்கள், குறித்த சிறுவன் மின்சாரத்தினால் தாக்கப்பட்டான் என்பதையே ஆரம்பித்தில் நம்பிய போதிலும், நாம் சமூக வலைத்தளம் மூலம் அதில் தணிக்கைகள் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய பின்னர் மீண்டும் தளம்பல் நிலைக்கு வந்தனர்.

இதில் ஏதோ ஒரு மர்மம் உள்ளதாகக் கருதினர். 17 நிமிடக் காட்சி மறைப்பில் அச்சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவல் கொண்டு எமது ஆய்வுப் பணிகளுக்கு ஆதரவும் வழங்கினர்.

இந்நிலையில், இச்சிறுவனின் குடும்பத்தினர் இத்தாக்குதல் சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்கு 3 நாட்களாகத் தொடர்ந்து சென்று தமது முறைப்பாட்டைப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் அவர்களின் முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியாது என மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு இன்று (22.08.2016) நாம் அக்குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினோம். அதன்படி சம்பவம் நிகழ்ந்து 6 நாட்களின் பின் இன்றைய தினமே மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் இவர்களின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமது ஆய்வுகளின்படி, இச்சிறுவன் மின்சாரத்தினால் தாக்கப்படவுமில்லை. அசிட் வீச்சினால் தாக்கப்படவுமில்லை என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். அதற்கான தடயங்களையும், ஆதாரங்களையும் நாம் சேகரித்துள்ளோம்.

எனினும், காத்தான்குடிப் பொலீசாரின் புலன் விசாரணைகளில் துரிதமும், அக்கறையும் காட்டப்படாத காரணத்தால் சம்பவம் நிகழ்ந்த கடையிலிருந்த தடயங்கள் அழிக்கப்பட்டு, இத்தாக்குதலை நடாத்திய குற்றவாளிகள் இலகுவாக தப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதனை இப்பிரதேசத்தின் சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நம் வெகுவாக ஆட்சேபிக்கின்றோம்.

கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவனை இன்று வரை எங்கள் இருவரைத் தவிர வேறெந்த ஊடகவியலாளர்களும் சென்று பார்வையிடவில்லை. குறைந்த பட்சம் குறித்த வர்த்தக நிலையத்திற்கேனும் இவர்கள் சென்று சம்பவம் நிகழ்ந்த சூழலையேனும் அவதானிக்கவில்லை.

குறித்த கடையின் உரிமையாளரும், கணக்காளரும் ஒரு முறை மாத்திரமே வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் இப்பிரதேச அரசியல்வாதிகளோ, இப்பிரதேசத்தில் நால்லாட்சி மாற்றத்திற்காகப் பாடுபட்டவர்களோ, சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளோ, பிரதேச செயலக சிறுவர் நலன்பேணும் பராமரிப்பு அதிகாரிகளோ இவ்விடயத்தில் இன்றளவும் அக்கறை கொண்டு வைத்தியசாலைக்குச் சென்று இச்சிறுவனின் நிலைமையையும், அவனது வாக்கு மூலத்தையும் கேட்டறியாமல் பாராமுகமாக இருப்பதும் எமக்கு கவலையளிப்பதாக உள்ளது.

இன்று நாள் வரைக்கும் இச்சிறுவன் தான் பொல்லொன்றினால் தலையிலும், தோற்புயங்களிலும் தாக்கப்பட்டதாகவும், அதன் பின் ஏற்பட்ட மயக்கத்தினால் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் மிகவும் தெளிவாகக் கூறி வருகின்றார்.

ஆனால் காத்தான்குடியை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் இணையதள ஊடகங்களோ இச்சிறுவனை மின்சாரம் தாக்கியதாகவே இப்பாரதூரமான சம்பவத்தை திரிபுபடுத்தியும், திசை திருப்பியும் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்யும் முயற்சியில் நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.

சம்பவம் நிகழ்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இச்சிறுவனுக்கும், குறித்த கடையில் பணியாற்றும் கணக்காளருக்கும் இடையில் காலை உணவுக்காக வழங்கப்படும் 50 ரூபா விடயமாக சச்சரவொன்று நிகழ்ந்துள்ளது. அதன்போது இருவருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தபோது கடையின் கீழ்த்தளத்தில் கணக்காளர் மாத்திரமே இருந்துள்ளார். தாக்கப்பட்ட சிறுவன் மூன்றாம் மாடியிலிருந்து தானாக தட்டுத்தடுமாறி கீழே இறங்கி வந்த பின்னரே கணக்காளர் அயலவர்களை அழைத்து வந்து சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் குறித்த கணக்காளரின் மீதே எமது சந்தேகம் வலுவடைந்துள்ளது. இவரை புலனாய்வுப் பிரிவினர் தீர விசாரிப்பதன் மூலம் மறைக்கப்பட்ட பல தகவல்கள் வெளிவருமென்றும், குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த முடியும் என்றும் நாம் பலமாக நம்புகின்றோம்.

எனவேதான் நாம் இவ்விடயத்தினை தேசிய ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி, பாதிப்புக்கும் அநீதிக்கும் உள்ளாகியுள்ள இச்சிறுவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தீர்மானித்தோம்.

அனைத்து ஊடக / இணையதள நிறுவனங்களின் நிர்வாகிகளையும், ஊடகவியலாளர்களையும் இவ்விடயத்தில் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி இவ்றிக்கையை உரிய முக்கியத்துவத்துடன் பிரசுரித்து உதவி, இவ்விடயத்தினை உரிய உயர்மட்டத்தினரின் கவன ஈர்ப்புக்கும், துரித நடவடிக்கைகக்கும் உட்படுத்த உதவுமாறு அநீதிக்குட்பட்ட மாணவனின் சார்பில் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

மிக்க நன்றியுடன்,

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர் - 'வார உரைகல்' ஊடக நிறுவனம்)

ஏ.எல். முஹம்மது நியாஸ்
(உதவி ஆசிரியர் - 'வார உரைகல்' ஊடக நிறுவனம்)

அநீதியிழைக்கப்பட்ட காத்தான்குடி 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க அனைரும் ஒன்று திரள்வோம். அநீதியிழைக்கப்பட்ட காத்தான்குடி 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க அனைரும் ஒன்று திரள்வோம். Reviewed by Madawala News on 8/23/2016 01:35:00 AM Rating: 5