Free Space

துருக்கி நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டம் தீட்டியவருக்கு 1900 ஆண்டுகள் சிறை தண்டனை ???

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு, மத குரு ஃபதுல்லா குலெனுக்கு 1,900 ஆண்டு சிறை தண்டனை கோரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
.

துருக்கியில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்து வரும் மத குருவான ஃபதுல்லா குலென் ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதித் திட்டத்தை தீட்டினார் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டியுள்ளது. குலெனை பயங்கரவாதி என்று கூறி அவரைக் கைது செய்வதற்கான பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
.

இந்த நிலையில், 2,527 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை மேற்கு துருக்கியில் உள்ள உசாக் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
.

அரசியல் சாசனத்தின் கீழ் அமைந்த அரசைக் கவிழ்க்க முயற்சி செய்தது, பயங்கரவாதக் குழுவை உருவாக்கி அதற்கு ஆயுதங்கள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அதில் குறிப்பிட்டுள்ளன.
.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு ஆயுள் சிறை தண்டனை, கூடுதலாக 1,900 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க கோரும் குற்றப்பத்திரிகையை அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ளது.
.

அவர் உள்பட 111 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
.

ஃபதுல்லா பயங்கரவாத அமைப்பை உருவாக்கி துருக்கியில் பல்வேறு தரப்பினரிடமிருந்து பணம் வசூலித்து, போலி நிறுவனங்கள் மூலம் பல நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகள் வழியாக அமெரிக்காவில் வசித்து வரும் ஃபதுல்லா குலெனுக்கு வழங்கப்பட்டது என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.

துருக்கியில் 44 நிறுவனங்களில் தேடுதல் வேட்டை: துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக நாடு முழுவதும் 44 நிறுவனங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அந்த நிறுவனங்கள் நிதி உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், அங்கு பணியாற்றும் 120-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்வதற்கான உத்தரவுடன் போலீஸார் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர்.
.

ஏற்கெனவே, முப்படைகளைச் சேர்ந்த மூத்த தளபதிகள், வீரர்கள், நீதி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், மூத்த நிர்வாகிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதிலிருந்து அந்நாட்டில் 35,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுமார் 11,600 பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

துருக்கி நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டம் தீட்டியவருக்கு 1900 ஆண்டுகள் சிறை தண்டனை ??? துருக்கி நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டம் தீட்டியவருக்கு 1900 ஆண்டுகள் சிறை தண்டனை ???
Reviewed by Madawala News on 8/17/2016 04:37:00 PM Rating: 5