Ad Space Available here

“புர்கா” எனும் முகத்திரையும் எமது சமூகமும் , ஒரு பார்வை.- ஷஹாட் -

“புர்கா” எனும் முகத்திரை இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயமில்லாத ஒரு விடயம் என்றாலும் இது இன்று சமூகத்தில் ஒரு பாரிய தாக்கத்தை உருவாக்கி வருவதை இன்று காணக்கூடியதாக அமைந்துள்ளது.

மேற்கத்திய சமூகம் இஸ்லாத்தின் அடிப்படை உடையையே “பெண் அடக்குமுறை” என்று சித்தரிக்கும் இந்த கால கட்டத்தில் புர்கா வை தடை செய்ய கோருவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.

“இது அந்நிய நாட்டு கலாசாரம், இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை”, “புர்கா அணிந்தவர்கள் எல்லாம் நல்லவர்களாக நடந்து கொள்வதில்லை”,     “இது இன வாதத்தை தூண்டும் விதமாக உள்ளது” என்ற பல கருத்துக்கள் சுற்றித்திரிந்தாலும்,

உற்று நோக்குகையில் இது ஒரு பெண்ணின் ஆடை சுதந்திரமாகவே அமைகிறது. 

எப்படி ஒரு ஆண் தனது அவ்ரத்தை மறைத்து மேலதிகமாக எப்படி வேண்டுமானாலும் உடை அணிய முடியுமோ அதே உரிமை பெண்ணுக்கும் உள்ளது என்பதில் வேற்று கருத்தில்லை.

 ஒரு பெண் தனது உடலை மறைத்து ஆடை அணிவதையே “பெண் அடக்குமுறை” என மேற்கத்திய சமுதாயம் மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தை விதைத்துள்ளது. இதன் ஒரு விளைவே அண்மையில் நாம் பிரான்ஸ் நாட்டில் பார்த்த “burkini” எனப்படும் நீச்சல் உடைக்கு எதிரான சட்டம். ஆனாலும் முஸ்லிம் பெண்கள் சுய விருபத்துடன் இஸ்லாம் விதித்தவாறு தான் இவ்வாறான உடைகளை அணிகிறார்கள் என்ற உண்மையை அந்நிய சமூகம் முற்றுமாக மறைத்து விடுகிறது.

எமது நாட்டில் முகத்தை மூடுவது சில பெண்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒரு வழமையாக இருக்கிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. சில பெண்களை பொறுத்தவரை “புர்கா” குடும்ப வழமையாக இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள் தன் முக அழகையும் அந்நிய ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே முகத்திரை அணிகிறார்கள். அத்துடன் வேறு பல காரணங்களும் அமையலாம்.

உதாரணமாக ஒரு பெண் சிறு வயதிலிருந்தே தனது தாயின் சகோதரி வழியிலான மஹ்ரமில்லாத அண்ணன், தம்பி மார்களுடன் நெருக்கமாக பழகிவிட்டு தான் ஒரு பருவத்தை அடைந்த பின் அண்ணன், தம்பி என்றாலும் அவர்களுடனும் நெருக்கமாக பழகுவது தவறு என்று உணரும் பட்சத்தில் ஒரேயடியாக அவர்களுடன் பேசுவதையும் நிறுத்த முடியாமல்  “புர்கா” வை கவசமாக  பயன்படுத்துகிறாள்.

இது அவளை அந்நிய ஆண்கள் அவளை நாடுவதிலிருந்து பாதுகாக்கிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமே.

இதே போல் பெண்கள் பல காரணங்களால் சுய விருப்புடன் “புர்கா” வை தெரிவு செய்வதால் அவர்களின் தெரிவை பிழையாக மதிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. “புர்கா” வை அணிந்து கொண்டும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கும் அவர்களது ஈமானிற்கும் இடைப்பட்டது.
நாட்டு சட்டதிட்டங்கள்?

ஆனாலும் நாட்டு சட்ட திட்டங்களை பொறுத்தவரை பொது இடங்களில் “புர்கா” வால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்க முடியாத ஒரு விடயம். அண்மையில் பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளருக்கு முகத்தை காட்ட மறுத்த மாணவிகளின் சம்பவம் இனவாதத்திற்கு தீனி போடும் விடயமாகவே அமைந்தது. பரீட்சை மேற்பார்வையாளருக்கு முகத்தை காட்ட மறுக்கும் பெண்கள், விமான நிலையங்களில் முகத்தை காட்ட மறுக்கும் பெண்கள் என பார்த்தால் “புர்கா” எமது போன்ற ஒரு நாட்டில் இனவாதத்திற்கே வழி வகுக்கும் ஒரு விடையமாகவே அமைகிறது.

பொது இடங்களை பொறுத்தவரை ஒரு சாதாரண பெண்ணை விட நிகாப் அல்லது புர்கா அணியும் ஒரு பெண்ணை சீண்டிப்பார்ப்பது குறுகிய மனப்பான்மையுள்ள சில அந்நிய விஷமிகளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே உள்ளது.

இதற்கு தீர்வு? 

இதற்கு தீர்வு அடிப்படையிலிருந்து வரவேண்டும். முகம் மூடும் பழக்கம் உடையவர் என்றாலும் கட்டாயம் இல்லாத விடயங்களில் சட்டம் கூறும் வரையறைக்கு உட்பட்டவர்களாக நடத்து கொள்வது கட்டாயமாக அமைந்துள்ளது.

 சட்டத்தை மதிப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

சமூகத்தின் வளர்ச்சி என்பது வீடு கட்டி கொடுத்தல், பாதை புனர் நிர்மாணம் செய்தல் போன்ற விடையங்கள் மாத்திரம் தான் என்ற மாயையை உருவாக்கி மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் சமூக வளர்ச்சிக்காக இது போன்ற சிறு விடயங்களுக்காக போராடாதவரை எமது முஸ்லிம் சமூகம் அடிப்படை விடையங்களுக்கு கூட பயப்பட வேண்டிய நிலை மாறாது. தனி மனித வளர்ச்சியின் விளைவே சமூக வளர்ச்சி.


தம்மை நவீன முஸ்லிம்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலர் “புர்கா” வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்துடன் போராடுகின்றனர். தனது ஆடையை அவ்ரத்தை மறைத்து தெரிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை.

இதை தடுப்பது இனவாத பிரச்சினைகளுக்கு தீர்வாக எப்பொழுதும் அமையாது. வெள்ளைக்காரன் குளிருக்கு அணிந்த உடைகளை வைபவங்களுக்கு அணியும் நாம் பெண்களின் முகத்திரை அரபு நாடுகளில் புழுதி மண்ணிலிருந்து பாதுகாப்புக்காக அணியப்பட்டது ஒன்றே என்ற கருத்தை பகிருவதை கூட பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இஸ்லாம் விதித்த உடை முறை பெண் அடக்கு முறை அல்ல என்று பிற சமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய நாமே எமது பெண்களின் உடை சுதந்திரத்தை தடுப்பது சிந்திக்கப்பட வேண்டியது.


“தடை” என்பது தீர்வு அல்ல “அடக்குமுறையே”, சிந்திப்பவர்களுக்கு !
 

“புர்கா” எனும் முகத்திரையும் எமது சமூகமும் , ஒரு பார்வை. “புர்கா” எனும் முகத்திரையும் எமது சமூகமும் , ஒரு பார்வை. Reviewed by Madawala News on 8/30/2016 01:42:00 PM Rating: 5