Kidny

Kidny

ஒரு "கோழிக்கூடு" நிமிர்ந்து நிற்கும் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? இது பதுளையில்.பதுளை ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்காக புதிய தொழுகை அறை மற்றும் பல்தேவை கட்டிடத்தொகுதி திறப்பு, பாடசாலை சாதனையாளர் பாராட்டுவிழா, மற்றும் A/L ஆரம்ப நிகழ்வு ஆகியவை முப்பெரு விழாவாக அண்மையில் நடைபெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி M.A. ஹைருன் நிஷா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் திரு. சாமர சம்பத் தசநாயக அவர்களும் கௌரவ அதிதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளரான மௌலவி தௌவபிக் அவர்களும், ஊவா மாகாண சபை உறுப்பினர் திரு ருத்ரதீபன் வேலாயுதம் அவர்களும் பங்கேற்றனர்.

கல்லூரி அதிபர் உரையாற்றுகையில்...

கல்வி அதிகாரிகளால் “கோழிக்கூடு” என எள்ளி நகையடப்பட்ட எமது பதுளை ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, மிகக் குறுகிய காலத்தில் பல சாதனைகளை நிலைநாட்டி ஏனைய கல்லூரிகளுக்கு சமானமாக நிமிர்ந்து நிற்கின்றது.

பதுளை வலய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிப் போட்டியில் எமது கல்லூரியூடாக 30 பேர் பங்கேற்று அதில் 22 பேர் முதலாம் இடத்தினை பெற்று மொத்தம் 28 பேர் வெற்றியடைந்தனர். இது எமது கல்லூரியில் ஈரூடக (bilingual) மொழி மூலம் கற்பித்தல் ஆரம்பித்ததன் பிரதிபலனாக இதைக் கருதுகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,  இந்த நிகழ்வை மாற்றத்தின் ஒரு அடையாளமாக இவ்விடத்தில் பெருமையாக சுட்டிக்காட்டும் நான், பல இன்னல்களுக்கு மத்தியில் 5 வருட குறுகிய வரலாற்றில் எமது கல்லூரியின் சில சாதனைகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

* கடந்த இரண்டு வருடங்களாக பயின்ற எமது கல்லூரியின் அனைத்து (9) மாணவிகளும் A/Lக்கு தகுதி பெற்று சிறந்த பெறுபேறாக 8 A ,1B யை பெற்றமை.

* இவ்வருடம்(2016) புதிதாக தொடங்கவுள்ள A/Lக்கு சுமார் 25 மாணவிகள் பிரபல்யமான பாடசாலைகளில் இருந்து எம்மை நம்பி வந்துள்ளமை.
* 57 பேருடன் ஆரம்பித்த எமது கல்லூரி இன்று 300 பேருக்கு மேல் கொண்டுள்ளமை.

* கடந்த 2014, 2015 ஆண்டுகளுக்கான தேசிய மட்ட போட்டிகளில் சுமார் 27 மாணவிகளுக்கு 1ம், 2ம், 3ம் இடங்களை பெற்றமை.

* 2015ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் 5ம் இடத்தை பெற்றமை.

* எமது "பாத்திமா அஹதியா" பாடசாலை கடந்த இரண்டு வருடங்களாக தலா 25 பேர் பரீட்சைக்கு தோன்றி அனைத்து மாணவிகளும் சித்தி பெற்று அதில் 6 மாணவிகள் மூன்று பாடத்திலும் A பெற்று ஊவா மாகாணத்தின் முதல் நிலை அஹதியா பாடசாலையாக தெரிவாகியமை.
         
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இந்த சாதனைகளை அடைய நாம் கடந்து வந்த பாதை இலகுவானதல்ல. அதில் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சோக நிகழ்வாக எமது பாடசாலையில் இருந்த சுமார் 90 மாணவிகளை மீண்டும் அல் அதான் ம.வி.யில் கொண்டுபோய் சேர்த்தார்கள். அப்போது 147 பேரைக் கொண்டிருந்த இக்கல்லூரி வெறும் 57 பேரை மட்டும் கொண்டு மீண்டும் முதலிலிருந்து பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டோம் .

இப்பாடசாலையை அக்காலத்தில் பதுளையில் இயங்கிய ஒரு சமூக தொண்டு நிறுவனமான “உமேடா” அமைப்பின் (30 X 60) ஒரு சிறிய கட்டடத்தினுள் தான் ஆரம்பித்தோம். ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின் ஒரு  கல்வி அதிகாரி (AO - நிர்வாக உத்தியோகத்தர்) இங்கு உத்தியோக பூர்வமாக வருகைதந்து, "இங்கு ஒரு ஒழுக்காற்றுக் குழு இல்லையா?“ என்று என்னிடத்தில் கேட்டுவிட்டு, "கோழிக்கூடு போன்றதொரு கொட்டகைக்கு ஒழுக்காற்றுக் குழு ஒரு தேவையா?" என அவரே கிண்டலும் செய்தார். அந்த “கோழிகூடு” தான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

நாம் எமது பெண் பிள்ளைகளின் மார்க்க கலாசார தனித்துவங்களை பேணி கல்வி கற்கக் கூடியதொரு சூழலை உருவாக்கும்  ஒரு இலட்சியப் பயணமாகவே இதை ஆரம்பித்தோம்.

ஆனால் தரம் 5 வரை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு "ஆரம்ப பாடசாலையாகவே" இதை அதிகாரிகள் நிர்வகிக்க முயன்றனர்.  
   
தரம் 6 முதல் மீண்டும் எமது மாணவிகளை ப/ சரஸ்வதி தேசிய பாடசாலையில் சேர்க்குமாறு எமக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தனர். உண்மையாகவே ஒரு மகளிர் கல்லூரியின் தேவை தரம் 6 தொடக்கமே ஆரம்பிக்கும் நிலையில் தரம் 6 - 11 வரைக்குமான பாடசாலையாக மாற்ற உத்தியோகப்பூர்வ அனுமதியை பெற மீண்டுமொரு போராட்டத்தை நடத்த வேண்டியதாயிற்று. குறித்த அனுமதியை தர பிரதான தடையாக இடப்பற்றாக்குறையே அதிகாரிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.


அந்த நிலையில் மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் பெற்றார்களின் முயற்சியால் நாம் இன்று ஒன்று கூடி பேசிக்கொண்டு இருக்கும் இக்கேட்போர் கூடம் கட்டப்பட்டது. அதன் பிறகே எமக்கு தரம் 6 - 11 வரையான வகுப்புகளை நடத்த அனுமதி கிடைத்தது.

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே இந்த பாடசாலை ஆரம்பித்து கடந்த 5 வருடத்திற்குள் எமக்கு தேவையான எந்தவொரு தளபாடங்களும் கல்வி அமைச்சினூடாக இதுவரை  கிடைக்கவில்லை. இன்று எமது பிள்ளைகளின் வகுப்பறைகளை நீங்கள் சென்று பார்வையிட்டால் அவர்கள் எமது பெற்றார்கள், நலன்விரும்பிகள் வாங்கிக் கொடுத்த கதிரைகளிலும், மேசைகளிலும் அமர்ந்தே கல்வி கற்கின்றார்கள் என்ற உண்மையை கண்டுகொள்வீர்கள். கட்டிளமை பருவ மாணவியொருவர் பாலர் கதிரையில் அமர்ந்து பல மணி நேரம் கற்பதில் உள்ள கஷ்டத்தை நீங்கள் அறிவீர்கள்.
   
கௌரவ முதலமைச்சர் அவர்களே , நாங்கள் கூடியிருக்கும் இக்கட்டிடத்திற்கு எதிரில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் கடந்த 2012ல் கட்டுவதற்காக வருடாந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப் பட்டிருந்தது. ஆனால் இதுவரை அது கட்டிமுடிக்கப் படவில்லை. கடந்த நான்கு வருடங்களாக இதுபற்றி உரிய அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுதல் விடுத்து கடித மூலம் அறிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எமது வேண்டுதலை எந்த அதிகாரியும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

கௌரவ அமைச்சர் அவர்களே , நாங்கள் இன்று முதல் ஆரம்பிக்கும் இந்த  கலை வர்த்தக பிரிவுகளுக்கான உயர்தர பிரிவும் பல கட்ட போராட்டங்களை கடந்து இறுதியில் உங்களின் நேரடி பணிபுரையின் பின்பு தான் எமக்கு அனுமதி கிடைத்தது. கடந்த 2014ம் ஆண்டு முதல் நாம் இதற்காக சீரழிக்கப் பட்டுள்ளோம்.

எமது பாடசாலையின் போக்கை  பொதுவாக “வேகம் கூட”  என்று நிர்வாகிகள் கூறுவதுண்டு. சிலவேளை அவர்கள் பார்வையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்று எமது பிரதேச ஏனைய பெரும்பான்மை பாடசாலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது போதுமான வேகத்தை நாம் இன்னும் அடையவில்லை என்றே கூற வேண்டும்,

விஷாகா மகளிர் தேசிய கல்லூரி, விகாரமஹதேவி கல்லூரி, மத்திய கல்லூரி போன்ற பெரும்பான்மை பாடசாலைகளில் ஒருபோதும் பெறுபேறுகள் வீழ்ச்சியடைவதில்லை. ஏனென்றால் அப்பாடசாளைகளின் பெறுபேறுகளை வீழ்ச்சியடைய எமது கல்வித் திணைக்கள உயரதிகாரிகள் விடுவதில்லை. உதாரணமாக அப்பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து ஒரு திறமையான அதிபரை அங்கு நியமித்து விடுவார்கள்.

அப்பாடசாலைகளுக்கு அதிபராக நியமிக்கப் படுபவர்கள் அநேகமாக கோட்டக் கல்வி காரியாலயங்களிலோ வலய கல்வி காரியாலயங்ளிலோ பணிப்பாளர்களாக அல்லது உதவிக் கல்வி பணிப்பாளர்களாக கடமையாற்றி கொண்டிருப்பவராகவே இருந்திருப்பார்.

ஆனால் எமது தாய் பாடசாலையான பதுளை ப/ அல் அதான் ம.வி.க்கு கடந்த பத்து வருட காலத்தில் எத்தனை அதிபர்கள் மாற்றப் பட்டுள்ளார்கள். அதாவது எமது முஸ்லிம் பாடசாலைகளுக்கு நீங்கள் தருவதை மாத்திரமே நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையில் எமது சமூகம் உள்ளது.
நான் இங்கு சொன்ன கருத்துக்கள் வெறும் கற்பனைகள் அல்ல. அதிபர் கூட்டங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் நேரடியாக நான் பெற்ற  எனது அனுபவங்களையே உங்கள் முன் எடுத்துரைத்தேன். ஆகவே தான் நான் கூறுகின்றேன்....

இன்றைய பெரும்பான்மை பாடசாலைகளின் தரத்தை அடைய வேண்டும் என்றால் நாங்கள் இன்னும் வேகமாக ஒடவேண்டியுள்ளது. அப்படி ஓடினால் தான் இன்னும் ஐம்பது வருடங்களின் பின்பாவது அவற்றின் தரத்தை நாம் எட்டமுடியும் .

கௌரவ முதலமைச்சர் அவர்களே எமது பாடசாலையின் ஐந்து வருட வரலாற்றில் இன்று தான் முதன் முதலாக  நாம் கல்வி சம்பந்தமான இவ்வாறானதொரு விழாவை நடத்துகின்றோம். நாம் அரசியல்வாதிகளை அழைத்து வந்து பொய்யாக முகஸ்துதிக்காக அவர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்தி வழியனுப்ப விரும்பவில்லை. ஆனால் உங்கள் போக்கை அவதானித்த போது நீங்கள் மாகாண முதலமைச்சராக பதவி ஏற்ற நாள் தொடக்கம் இன மத பேதமின்றி சமூகங்களுக்கு மத்தியில் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றீர்கள்.

குறிப்பாக கல்வி ரீதியாக இம்மாகாணத்தை முன்னேற்ற பலதிட்டங்களை செயற்படுத்தும் நீங்கள் குறுகிய காலத்திற்குள் கூடுதலான முஸ்லிம் பாடசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து பல அபிவிருத்தி திட்டங்களை வழங்கியுள்ளீர்கள். ஆகவே தான் மலையக முஸ்லிம் கவுன்சிலின்  வேண்டுதலில், அல் - புர்கான் கல்வி, மற்றும் மனிதநேய சேவைகளுக்கான இலங்கை அமைப்பின் மூலம் கட்டிதரப்பட்ட இவ்விரண்டு மாடிக் கட்டிடத்தை உங்கள் கரங்களால் திறந்து வைத்து நாங்கள் பெருமையடைகின்றோம்”.  என்றும் கூறி முடித்தார்.

 இக்கூட்டத்தில் சிறப்பு அதிதிகளாக...

பதுளை முன்னாள் பிரதி மேயரும் பதுளை பஹ்மியா  அரபிக் கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் எ எச் எம் ஜாவ்பிர் அவர்கள்,

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அல் ஹாஜ் எஸ்எச் எம் மன்சூர் அவர்கள்,
அல் புர்கான் - கல்வி,மற்றும் மனித நேய சேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஜே எம் நவ்பர் அவர்கள்,

கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் பதுளை மாவட்ட இணைப்புச் செயலாளரும் அ இ ம கா அரசியல் அதிகார சபையின் உறுப்பினருமான, மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள்,

பண்டாரவளை டோர் நேஷன் அமைப்பின் அல் ஹாஜ் ஹில்மி அசீஸ் உற்பட நிர்வாக உத்தியோகத்தர்கள்,

பதுளை ஜும்மா பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், பதுளை பைதுஸ் சகாத் , மற்றும் பதுளை, பண்டாரவளை, பசறை, வை எம் எம் ஏ  உட்பட பள்ளிவாயல் நிர்வாக சபையினர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றார்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

தகவல் மூலம்:- மலையக முஸ்லிம் கவுன்சில்.

தொகுப்பு:- வாஹிட் அப்துல் குத்தூஸ்

மீள் தொகுப்பு:- இன்ஸாப் - மடவளை பஸார்

அந்த கோழிக்கூடு என்ற கட்டிடத்தை கட்டுவதற்கு கொண்டுவரப்பட்ட இரும்பு பார்கள் அனைத்தையும் வீதியிலிருந்து தன் தோளில் வைத்து சுமந்து வந்த அந்த அதிபர் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்  

ஒரு "கோழிக்கூடு" நிமிர்ந்து நிற்கும் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? இது பதுளையில். ஒரு "கோழிக்கூடு" நிமிர்ந்து நிற்கும் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? இது பதுளையில். Reviewed by Madawala News on 8/28/2016 11:43:00 AM Rating: 5