Kidny

Kidny

முஸ்லிம் அரசியலின் கையாலாகாத்தனம்...


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எந்த அளவுக்கு கையாலாகாத்தனம் நிறைந்ததாகவும் உனமுற்ற அரசியல்வாதிகளை கொண்டதாகவும் மாறியிருக்கின்றது என்பதற்கு அம்பாறை மாவட்டம் நுரைச்சோலையில் பாழடைந்துள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் நல்லதொரு சான்றாகும். சாணக்கியம் என்றும் தூரசிந்தனை என்றும் மேடைக்கு மேடை  பேசுகின்ற, பேரம் பேசும் ஆற்றல் என்றும் மக்கள் சேவை என்றும் பம்மாத்துக்காட்டுகின்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமான முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் சமூக சிந்தனை அற்ற, அரசியல் வியாபாரிகள் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இதைவிட ஒரு சான்று தேவையில்லை என்றே தோன்றுகின்றது.
 
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் வரைச் சென்ற இவ்வீடுகளை, உரிய பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு அவர்களிடமே பதில்கள் இல்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம் போன்றோர் சில முயற்சிகளை செய்தாலும் அல்லது 'அதோ செய்கின்றோம் இதோ செய்கின்றோம்' என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாலும்? பல வருடங்களாக இவ்விவகாரத்திற்கு தீர்;க்கமான முடிவு எதையும் காணவில்லை.
 
சுரணை கெட்டவர்கள்
இதுவே தமிழ் மக்களுக்கு நடந்திருந்தால் இரா சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா உட்பட எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் பேதங்களை மறந்து வீதிக்கு இறங்கியிருப்பார்கள்.சத்தியாக்கிரகம் நடாத்தியிருப்பார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? அவர்களது இயலாமையையும் சுரணையற்ற தன்மையையும் வெளிப்படுத்தி விட்டு, ஒரு நமட்டுச் சிரிப்போடு, சில ரெடிமேட் பதில்களோடு, ஒருவர் மற்றவரை குற்றம் சொல்லிவிட்டு காலத்தை கடத்தியிருக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தினை தளமாகக் கொண்டு அரசியலில் பிழைப்பு நடாத்துகின்ற எந்தவொரு முஸ்லிம் தலைவரோ, அமைச்சரோ, பிரதியமைச்சரோ, எம்.பி.யோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ பயன் கிடைக்கும் வரை முழு மூச்சாக இவ்விடயத்தில் ஈடுபட்டதாக தெரியவில்லை.
 
அதேபோல் இந்த வீடுகளை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுக்க தமது பதவிகள், அதிகாரங்கள் உதவவில்லை என்றால், அதனை இராஜினாமாச் செய்யப் போவதாக இவர்களுள் யாரும் அறிவித்திருக்கின்றார்களா?. இல்லை அப்படிச் செய்யவே மாட்;டார்கள். ஆனால், இந்த வீடுகளை பகிர்ந்தளிப்பதில் தமக்கு ஏதாவது இலாபம் கிடைக்குமென்றால், கொஞ்சம்; சலுகைகள் கிடைக்குமென்றால் இந்நேரம் மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் நின்றிருப்பார்கள். யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் யதார்த்தம்.
 
அரசாங்கத்திற்குப் புறம்பாக, இவ்விடயத்தில் இரண்டு முஸ்லிம் கட்சிகள் மிகப் பெரிய தவறை செய்திருக்கின்றன. மூன்றாவது முஸ்லிம் கட்சியும் உதிரி அரசியல்வாதிகளும் தவறிழைத்துக் கொண்டிருக்கின்றனர். காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமன் என்ற அடிப்படையில் நோக்கினால், சுனாமியால் பாதிக்கப்பட்டு தமக்கு நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் தமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இதுவரையும் அவ்வீடுகளை பெற்றுக் கொடுக்காமை ஒரு வகையில் பார்த்தால் மேலே சொன்ன உவமானத்திற்கு ஒப்பானதாகும்.
 
பேரியலின் முயற்சி
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சில மாதங்களின் பிறகு அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷரப் சவூதி அரேபியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தாhh. ஆப்போது அங்கு வழங்கப்பட்ட விருந்துபசாரத்தின் பின்னர் சவூதி இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவ்;வேளையில், தன்வசமிருந்த சுனாமின் இழப்புக்கள் பற்றிய சிறியதொரு வீடியோ காட்சி அவர் அவர்களுக்கு காண்பித்தார். அதனைப் பார்த்த இளவரசர் கண்கலங்கிப் போனதை பேரியலுடன் இருந்தவர்களும் அவதானித்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தை இன்னும் பயன்படுத்த வேண்டுமெனறு நினைத்த அமைச்சர் பேரியல் அஷ்ரஃப், 'வீடியோவில் நீங்கள் பார்த்து கண்கலங்கி இம்மக்கள் முஸ்லிம்கள். அவர்கள் சுனாமி அனர்த்தத்தால் வீடுகளற்று இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்களுக்கு வீடுகளை அமைத்துத்தர நீங்கள் முன்வந்தால், இலங்கை முஸ்லிம்கள் சவூதிக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவான்;' என்ற அர்த்தத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். வீடியோவைப் பார்த்து மனமுருகிய நிலையிலிருந்த இளவரசர், இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்தார். அப்போது, சவூதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் (சவூதி ட்ரஸ்ட் பண்ட்) நிதியுதவின் கீழ் இந்தோனேசியாவில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்த வீடமைப்புத் திட்டத்தை இலங்கைக்கு வழங்க அவர் முன்வந்தார்.
ஆனால், சில நிபந்தனைகளை சவூதி அரசாங்கம் முன்வைத்தது. அதாவது, இவ்வாறு அமையும் வீடுகளின் தொகுதிக்கு 'மன்னர் அப்துல்லா மாதிரிக் கிராமம்' எனப் பெயர் சூட்டப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்களால் குறிப்பிட்ட வகையான ஏழைகளுக்கு வழங்கப்படும் ஸகாத் நிதி இதில் பிரதான இடம் வகிப்பதால் இதன் பயனாளிகளாக முஸ்லிம்களே இருக்க வேண்டும் என்பது போன்ற பல முன்நிபந்தனைகளை சவூதி அரசாங்கம் முன்வைத்தது. மிக முக்கியமாக, 500 வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதால் சுமார் 100 ஏக்கர் காணி ஒரு இடத்தில் இருந்தால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதே பிரதான நிபந்தனையாக காணப்பட்டது. அதன் காரணமாகவே முஸ்லிம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கு சற்றுத் தொலைவில்;, தீகவாபி புனித பூமியின் எல்லைப் புறத்தில் உள்ள காணி தேர்ந்தெடுக்க நேரிட்டது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
இத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆசீர்வாதம் அளித்தது. அரசாங்க அதிபராக கடமைபுரிந்த சுனில் கன்னங்கரவும் ஒத்துழைப்பை வழங்கினார். அதன்படி அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலிம்நகர் கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நுரைச்சோலையில் ஒரு காணி இனங்காணப்பட்டது. ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் தயாரத்ன அமைச்சராகவிருந்த போது முஸ்லிம்களின் கரும்புக்காணியில் ஒரு பகுதி அரசாங்கத்தினால் சுவீகரம் செய்யப்பட்டது. அதில் ஒரு பகுதியில் கரும்பு சேகரிப்பு மத்திய நிலையமும் தங்குவிடுதிகளும் இயங்கிவந்தன. பகீரத பிரயத்தனங்களுக்கு பிறகு அதில் மீதமிருந்த 50 ஏக்கர் காணியை மேற்படி வீட்டுத் திட்டத்திற்காக பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கமைய. நுரைச்சோலைக் காணியில் 500 வீடுகள் உள்ளடங்கலாக அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
ஆனால், இதற்கு அடிக்கல் நாட்டுவதற்கு சவூதி அதிகாரிகளும் அமைச்சர் பேரியலும் வந்தபோதே இனவாதம் தூண்டிவிடப்பட்டுவிட்டது. தீகவாபி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு குழுவினர் விழா இடம்பெற்ற வளாகத்திற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர். அம்பாறையில் உள்ள சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் மற்றும் சக்திகள் மட்டுமே இதற்கு காரணமாகி இருக்கவில்லை. எது எப்படியோ, மிகவும் சிரமப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, நிர்மாணப்பணிகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. நுரைச்சோலை நிலப்பரப்பில் ஐநூறு வீடுகள், பாடசாலை, பள்ளிவாசல், மருத்துவ மனை போன்றவற்றை கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இறுதியில் 500 வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்ட ஒரு அழகிய மாதிரிக் கிராமமாக இது உருவானது. இதற்கென 550 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை சவூதி அரசாங்கம் செலவிட்டிருந்தது. அதன்படி தலா ஒரு வீடு சுமார் 34 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்டது.  
வழக்குத்தாக்கல்
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சவூதி அரசின் பிரதிநிதி குறிப்பிட்டது போன்று, சவூதி அரேபியாவானது சிங்கள, தமிழ் மக்களுக்காகவும் அம்பலாங்கொடை மற்றும் கிளிநொச்சியில் குடியிருப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தது. முஸ்லிம்களுக்காக வீடுகளை வழங்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமே நுரைச்சோலை இதுவாகும். ஆப்படியிருந்தும் இனவாதம் உச்சாணிக் கொம்பில் நின்று நர்த்தனம் ஆடியது. முஸ்லிம் மக்கள் அங்கு வந்து குடிமரக் கூடாது என்ற விடயத்தில் உறுதியாக இருந்தனர். 'உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு உத்தேச வரைபுத் திட்டத்தை கொண்டு வந்து தாருங்கள். சவூதி அரசு வேறு இடத்தில் வீடுகளை அமைத்துத் தரும் இதை விட்டுவிடுங்கள்' என்று சவூதி அரேபிய அதிகாரிகள் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டனர்;. ஆனால், கல்நெஞ்சக் காரர்களின் காதுகள் அதை வாங்கிக் கொள்ளவில்லை. கடைசியில், இதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது.
நுரைச்சோலைக்கு அடிக்கடி வந்து தடங்கல் செய்த பௌத்த பிக்குகள், இனவாதிகளை சமாளிப்பதற்கு அமைச்சர் பேரியல் கொடுத்த நன்கொடைகளும், செய்த உதவிகளும் வீணாகிப் போக, நன்றி மறந்த இனவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்து நின்றது. இவ்வீட்டுத் திட்டம் தீPகவாபி புனித பூமிக்குள் வருவதாக அவர்கள் கூறியது மட்டுமன்றி அதை நிரூபிக்கவும் முயன்றனர். முழு தீகவாபி பிரதேசமே இன்று வரைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குள்ளேயே இருக்கத்தக்கதாக, தீகவாபி எல்லைக்கு அருகில் ஒரு நல்ல செயற்றிட்டம் அமைவதை அவர்கள் எதிர்த்தார்கள் என்றால் அம்பாறை இனவாதிகளும் கொழும்பில் இருந்து ஊக்கமருந்து வழங்குவோரின் கேடுகெட்ட புத்தியுமே அதற்குக் காரணமாகும். இருப்பினும், இந் நிலப்பரப்பு அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்திற்குள்ளேயே அமைந்திருக்கின்றமை நிரூபிக்கப்பட்டதால், 'புனித பூமிக்குள் அமைகின்றது' என்ற வாதத்தை அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனது.
எனவே, அதற்குப் பிறகு இன்னுமொரு வாதத்தை கையிலெடுத்தனர். அதாவது, முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதை அவர்கள் முற்றாக எதிர்த்தனர். இனவிகிதாசாரப்படி பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர். வழக்கு விசாரணையில் இருந்தமையால் வேறு அதிகாரங்களை பயன்படுத்தி வீடுகளைப் பகிர்ந்தளிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. நன்கொடையாகக் கிடைத்த வீடுகளைப் பகிர்ந்தளிப்பதற்காகக் கூட வழக்காட வேண்டியிருந்தது.
ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடற்ற நிலையில் இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒருமுறை கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது; இம்மக்களில் பெருமளவானோர் வீடமைப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியைப் பெற்றுவிட்டனர் என்பதற்கான ஆதாரங்களை எதிர்த்தரப்பினர் முன்வைத்தனர். அத்துடன் அழைத்து வரப்பட்டவர்களில் ஒருசிலர் அக்கரைப்பற்று கடற்கரை பகுதியில் வசிக்காதவர்கள் (ஆனால் வீடற்ற ஏழைகள்) என்பதும் ஒரு சிக்கலாக அமைந்தது. சுருக்கமாக கூறினால் தர்மத்தை தவிர மற்ற எல்லா விடயங்களும் இதற்கெதிராக இருந்தன. மறுபக்கம், மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிரிவீட்டு மரணத்தில் மகிழ்;ச்சி கொண்டனர்.
இந்தப் பின்னணியில், அப்போது பிரதம நீதியரசராக சரத் என் சில்வா ஓய்வுபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இதற்கான தீர்ப்பை வழங்கினார். இனவிகிதாசாரப்படி இவ்வீடுகளை எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அவர் தீர்ப்பெழுதி இருந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை தொடரும் இழுபறிநிலைமையால் அவ்வீடுகள் உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு அழகிய கற்பனையோடும் எல்லா வசதிகளோடும் கட்டப்பட்ட இக்கிராமம் வருடக்கணக்காக காடாகிக் கிடக்கின்றது. ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளில் ஊர்வனவும், விலங்குகளுமே குடிகொண்டிருக்கின்றன. இவ்வீடுகளை இப்போது வழங்கினால் கூட, அதை வசிப்பதற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க பல இலட்சங்களை செலவளிக்க வேண்டியிருக்கும். ஆனால் இதைப் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரிதாக கரிசனை எடுத்தமாதிரி தெரியவில்லை. அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்களது முயற்சிகள் பயனளிக்காத நிலையில் சோர்வடைந்து விட்டனர்.
தார்மீகத்தின் தீர்ப்பு
நீதிக்கு நாம் தலைவழங்குகின்றோம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றோம். ஆனால் சில விடயங்களை இங்கு புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. அது என்னவென்றால், தீகவாபி என்பது அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட சிற்றூராகும். இந்நிலையில் இவ்வீடமைப்பு திட்டத்திற்காக வழங்கப்பட்ட 'சவூதி சரிட்டபள் பண்ட்' எனப்படும் நிதியானது அந்நாட்டு முஸ்லிம்கள் வழங்குகின்ற ஸகாத் என்றை இறைகட்டளைப்படியான கொடுப்பனவின் மூலமே பெற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, ஸகாத் என்று பார்க்கின்ற போது அது முஸ்லிம்களையே சென்றடைய வேண்டியிருக்கின்றது. அத்துடன் இவை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளே. அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் இருந்து குறைந்தது 5 – 6 கிலோமீற்றர் தூரம் சென்றாலே ஒரு சிங்கள கிராமத்தை அடையமுடியும். சுனாமிப் பேரலைகள் இவ்வளவு தூரம் ஊர்கடந்து போய் சேதம் விளைவிக்கவுமில்லை. எனவே இதன் நோக்கத்தின் படி முஸ்லிம்களுக்கும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிறிதளவு தமிழர்களுக்கும் வழங்கப்படலாம். சிங்களவர்கள் உரிமைகோர இதில் எந்த தார்மீகமும் இல்லை.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த தகவல்களின் படி இதைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு அரசியல்கட்சி தலைவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது. வழக்குத்தீர்ப்பின் படி இலங்கையின் விகிதாசாரப்படி வீடுகளை பிரிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்தால் அதிக வீடுகள் சிங்களவர்களுக்கே சென்று விடும் என்பதை கருத்திற் கொண்டு, மேன்முறையீட்டின் மூலம் அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் வியாக்கியானம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் இன்னும் நல்லசெய்தி வரவில்லை. இதுபோலவே, மு.கா. தலைவர் ஹக்கீம் போன்றோர் சொன்ன கதைகளும் மற்றைய அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் பயனற்று, காற்றில் பறந்து போய்விட்டன.
இவ்விடயத்தில் சவூதி தூதரகமும், சவூதி அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக பெருந்தொகை செலவழித்து நிர்மாணித்த வீடுகள் இன்னும் எந்த சமூகத்தவருக்கும் கொடுக்கப்படாது, பாழடைந்து கிடக்கின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும்; இதைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.
அந்த அடிப்படையில், அம்பாறை மாவட்டத்திலேயே பிறந்து அங்கேயே பல வருடங்கள் அமைச்சராக இருந்தது மட்டுமன்றி, தேசிய காங்கிரஸ் என்ற கட்சிக்கும்  தலைவராக இருக்கின்ற ஏ.எல்.எம். அதாவுல்லா இதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ் வீட்டுத்திட்டத்தை திறக்க விடாமல் இனவாதிகள் தடுத்ததன் பின்னணியில் அவரும் இருக்கின்றார் என்று பின்னர் ஒரு கதை இப்பிரதேசத்தில் உலா வந்தது. ஆனால் இதை அப்போதைய அமைச்சர் அதாவுல்லாவும் அவரது தரப்பும் மிக உறுதியாக மறுத்தது. இந்தக் களங்கத்தை தீர்ப்பதற்காகவாவது அவர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதேவேளை மக்கள் காங்கிரஸ் தலைவருக்கும் பொறுப்பிருக்கின்றது. ஒரு மாதத்திற்குள் வீடுகளை பெற்றுத்தருவதாக கூறிய காலம் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. எனவே முயற்சிகளை துரிதப்படுத்துவதன் மூலம், புத்தம்புதிய கட்சிக்கு 33ஆயிரம் வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களிற்கு கைமாறு செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக, பசப்பு வார்த்தைகளாலும் வெற்றுக் கோஷங்களாலும் மக்களின் வாழ்க்கையை நிரப்பிவிடலாம் என்று நினைக்கின்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. அம்பாறையை மு.கா.வின் கோட்டை என்று சொல்வதால் மட்டும் ராஜ்ஜியம் உயிர்ப்போடு இருக்காது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எதற்காகவெல்லாமோ கட்சி தாவுகின்ற, அறிக்கை விடுகின்ற மு.கா. ஒரு மாநாட்டு தீர்மானமாக இதை எடுத்துவிட்டால் மட்டும், பிரச்சினை தீர்ந்து விடாது.
பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் சாபத்தில் இருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 06.08.2016)
முஸ்லிம் அரசியலின் கையாலாகாத்தனம்... முஸ்லிம் அரசியலின் கையாலாகாத்தனம்... Reviewed by Madawala News on 8/06/2016 11:53:00 AM Rating: 5