Accaddemy

யாழ் முஸ்லிம் ஆரம்ப மீள்குடியேற்றப் பதிவுகளுக்கு இப்போதிருக்கும் பிரதேசங்களில் இருந்து பதிவு நீக்கம் அவசியமற்றது


யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான நடமாடும் சேவையின் ஏற்பாடுகள் தொடர்பில் விஷேட கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நடமாடும் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இங்கு கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர் அவர்கள்


யாழ் மாவட்டத்தின் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை ஒழுங்கமைக்கவேண்டிய தேவை பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அம்சமாக பதிவுகளை ஒழுங்கமைக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும், யாழ்ப்பாணத்தில் எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேறுவார்கள் (அன்னளவாக) என்ற தரவு எவரிடத்திலும் ஒழுங்காக கிடையாது. இப்போது உதவித் திட்டங்களை கோரும் பொழுது எமக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன, எனவே மிக அடிப்படையாக முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றப்பதிவை நாம் நோக்குகின்றோம்.


எனவே மீள்குடியேற்றத்திற்கான விருப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பப்பதிவினை கொண்டிருத்தல் அவசியமாகும். இதற்கு அவர்கள் தமது அடிப்படையான ஆவணங்களை மாத்திரம் சமர்ப்பித்தால் போதுமானதாகும். அடையாள அட்டைகள் அல்லது அடையாள அட்டைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தால் போதுமானது. எனவே அடிப்படையான பதிவுகளை மேற்கொள்ளவிருக்கின்ற எல்லோரும் தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்; முதற்கட்ட பதிவுகளுக்கு பதிவு நீக்கம் அவசியமற்றது. இதனை எல்லோரும் கருத்தில் கொள்ளவும்.


மீள்குடியேற்ற ஆரம்பப்பதிவுகள் மேற்கொள்ளும் அனைவரும் காணிக்காக விண்ணப்பிக்க முடியும். காணி உள்ளவர்கள் வீட்டுத்திட்டங்களுக்காக பதிவு செய்துகொள்ளமுடியும், வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவோர் அத்திட்டங்களுக்காக பதிவு செய்ய முடியும். யாழ் மாநகரசபையின் வரிப்பணம் செலுத்துதல், சோலவரிக்கான பதிவுகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தனியார் காணிகளில் உறுதி தொடர்பான பிணக்குகள் இருப்பின் அது குறித்த முறைப்பாடுகளையும் இங்கு பதிவு செய்ய முடியும். இவை அனைத்தும் அதிகாரிகளினால் இம்மாதம் ஆகஸ்ட் 20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் மக்களுக்கு வழங்கப்படும்.


இதற்காக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் உட்பட 200 அரச அதிகாரிகள் கடமைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். மக்களுக்கு துரிதமாக சேவைகளை வழங்குவதே எமது நோக்கமாகும். வருகின்ற எல்லோருக்கும் பதிவுகள் மேற்கொள்ளப்படக்கூடிய விதத்தில் நாம் எம்மைத் தயார்படுத்தியிருக்கின்றோம். சமூக ரீதியாக நீங்கள் அதிகமான மக்கள் இந்நடமாடும் சேவையில் பயன்பெறுவதற்கும், மக்களை ஒழுங்கமைப்பதற்கு உங்களால் முடியுமான ஒத்துழைப்புகளை நல்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்க முடியும் என்றும் நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்தார்.


தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்

யாழ் முஸ்லிம் ஆரம்ப மீள்குடியேற்றப் பதிவுகளுக்கு இப்போதிருக்கும் பிரதேசங்களில் இருந்து பதிவு நீக்கம் அவசியமற்றது யாழ் முஸ்லிம் ஆரம்ப மீள்குடியேற்றப் பதிவுகளுக்கு இப்போதிருக்கும் பிரதேசங்களில் இருந்து பதிவு நீக்கம் அவசியமற்றது Reviewed by Madawala News on 8/18/2016 07:33:00 PM Rating: 5