Free Space

கிழக்கின் எல்லை வரை ரயில் வருமா?



கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணமாகும். இம்மாகாணத்தில் திருகோணமலை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களே அதிகளவு  சனத் தொகையைக் கொண்ட பிரதேசங்களாகவுள்ளன.

கடந்த காலங்களில் இம்மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் பல்வேறு வகையிலும் இம்மாகாண மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தனர். குறிப்பாக சுதந்திரமாக, அச்சமின்றி போக்குவரத்துச் செய்ய முடியாதொரு நிலை அன்று காணப்பட்டது.

அச்சூழ்நிலைகளிலிருந்து இம்மாகாண மக்கள் விடுபட்டு, சுதந்திரமாகவும் பயமின்றியும் பயணிக்கக் கூடியதொரு நிலை யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் காணப்படுகின்றபோதிலும் மக்கள் எதிர்பார்க்கும் போக்குவரத்து வசதிகள் அதிலும் ரயில் போக்குவரத்து இம்மாணத்தின் சகல பிரதேசங்களுக்கும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நாட்டை ஆண்ட மேற்கத்தியவாதிகள் தங்களின் சுரண்டல் பொருளாதாரத்தை மையப்படுத்தி அவற்றை விருத்தி செய்வதற்காக இந்நாட்டில் முன்னெடுத்த திட்டங்களில் பயனளிக்கத்தக்க திட்டமாக அமையப்பெற்றதுதான் ரயில் போக்குவரத்தாகும். இந்நாட்டல் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ரயில் போக்குவரத்தில் கிழக்கின் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்துக்கான திட்டமானது மட்டக்களப்பு நகருடன் மட்டுப்படுத்தப்பட்டது. அதற்கப்பால் ரயில் மார்க்கம் விரிவுபடுத்தப்படவில்லை. ரயில் பாதை விஸ்தரிப்பு நடவடிக்கையானது பொத்துவில் வரை மேற்கொள்ளப்படாது தவிர்க்கப்பட்டது குறித்த கவலையும் பொத்துவில் வரையான ரயில் பாதையைக் காணும்; தாகமும் இன்றும்  கிழக்கு கரையோரப் பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கையும் ரயில் போக்குவரத்தும்

இலங்கையில் பொரும்பாலும் தலைநகர் கொழும்பை மையப்படுத்தியே சகல பிரதான போக்குவரத்து மார்க்கங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக புகையிரத சேவையானது கொழும்பு புறக்கோட்டை புகையிரத மத்திய நிலையத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது.

1864ஆம் ஆண்டு இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ரயில் பாதை கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸைக்குமிடையே நிர்மானிக்கப்பட்டது. பொருளாதார தேவையை நோக்காகக் கொண்டு  தொடங்கப்பட்ட புகையிரத சேவையானது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய தேயிலை மற்றும் கோப்பி என்பவற்றை மலையகத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவருவதற்காக ஆரம்ப காலத்தில் உபயோகப்பட்டது.

பல வருடங்களாக உற்பத்திப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக விளங்கிய புகையிரதமானது, அதிகரித்த மக்கள் சனத்தொகை கருத்திற்கொள்ளப்பட்டு  பயணிகள் போக்குவரத்து சாதனமாக மாறியது.

1905ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு விஸ்தரிக்கபட்ட புகையிரத சேவையானது கிழக்கு மாகாணத்துக்கு 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓரே ஆண்டில் கிழக்கின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர சேவை மட்டக்களப்புக்கான புகையிரத சேவையாகும். கிழக்கு மாகாணத்தின்  3 மாவட்டங்களிலும் திருகோணமலைக்குரிய புகையிரத சேவைக்கான பாதை சீனக்குடா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான புகையிர சேவைக்கான பாதை மட்டக்களப்பு நகர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில,; இப்பாதை விஸ்தரிப்பை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வற்கான  வாய்ப்புக்கள் உள்ள போதிலும,; அது தொடர்பில் கடந்த காலங்களில்; கவனம் செலுத்தப்படவில்லை.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை ரயில் பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் போக்குவரத்தை விஸ்தரிப்பு செய்வதற்கு எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தேசிய போக்குவரத்து அதிகார சபையின் 2013ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம் நாடுபூராகவும் 147 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றினூடாக ஏறக்குறைய 124,000 பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் 10 பிரதான நிலையங்ளினூடாக 50 வீதமான பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு காலை, மாலையில் இரு மெல்ல நகரரும்  சேவையும் இரவில் ஒரு கடுகதி ரயில் சேவையுமாக மூன்று சேவைகள் தினமும் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய ஆயிரம் பயணிகள் தினமும் ரயில்;களினூடாக பயணிப்பதனால் புகையிரதத் திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு சராசரி 2 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெறுவதாக மட்டக்களப்பு ரயில் நிலையத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

ஆனால், இப்புகையிரத சேவையினால் மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாட்டங்களிலுள்ள தூரப் பிரதேச மக்களினால் பயன்பெற முடிவதில்லை. குறிப்பாக கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் அம்பாறை போன்ற தூரப் பிரதேச மக்களுக்கு இப்புகையிரத்தினூடாக கொழுப்புக்குச் செல்வதும் கொழும்பிலிலிருந்து தங்களது பிரதேசங்களுக்கு வருவதும் சிரமங்கள்மிக்கதாகவேவுள்ளது.. இதற்குக் காரணம் இப்புகையிரத சேவையானது மட்டுநகரிலிருந்து விஸ்தரிக்கப்படாமையாகும்.

'குறைந்த தொழிற்பாட்டுச் செலவுடன் தரைமார்க்கப் போக்குவரத்து முறைமையொன்றை அபிவிருத்தி செய்து, பொருளியல் ரீதியில் எமது போட்டி நிலைமையை மேம்படுத்துவதும் எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமான திறமையான சிக்கனமான போக்குவரத்து முறையொன்றை மீளக்கட்டியெழுப்புதல்;' என்ற நோக்கை இலக்காகக் கொண்டுள்ள இலங்கையின் புகையிரத மற்றும் போக்குவரத்து துறையானது கிழக்கின் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை, அதற்கான பாதையை பொத்துவில் வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் இம்மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

கரையோர ரயில் பாதையும் முன்னாள் அமைச்சர் மன்சூரின் முயற்சிகளும்

மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும். கிழக்கின் மடடக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும். அதற்காக மட்டக்களப்பு – பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் 1992 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் ஆட்சியில் வர்த்தக, வாணிப்பத்துறை அமைச்சராகவும் கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும்; இருந்த ஏ.ஆர்.எம். மன்சூர் முயற்சி மேற்கொண்டார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னால் அமைச்சர் மன்சூர்; மேற்கொண்டார். அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியில் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர். விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில,; 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் காரணமாக இத்திட்டம் முன்நோக்கி நகர்த்தப்படாது கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இப்பாதை விஸ்தரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் பின்னர் வந்த அதிகாரம் படைத்தவர்களினால் முன்னெடுக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, வரலாறுகள் என்றும் நினைவு கூறக் கூடிய பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும,; அமைச்சர் மன்சூரினால் முன்னெடுப்பட்ட இம்முக்கியத்துவமிக்க மட்டக்களப்பு - பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்பை உரிய காலத்துக்குள் முடித்துக்கொள்ள அக்கறைகாட்டாமல் போனது இப்பிரதேச மக்களுக்கு நிகழ்ந்த பெரும் துரஷ்டவசம் என்றே சொல்ல வேண்டும்.

1992ஆம் ஆண்டு முன்னால் அமைச்சர் மன்சூரினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி முற்றுப்பெறாமல் தொடரப்பட்டிருந்தால் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம் பெரும் நன்மையடைந்திருக்கும் என்பது யதார்த்தமாகும். மக்களின் வாழ்வு செழிப்புற பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஒரு நாட்டினதோ அல்லது ஒரு பிரதேசத்தினோ பொருளாதார வளர்ச்சிக்கு இலகுவான போக்குவரத்து வசதிகளே முக்கியமானதாகும் என்பது பொருளாதார நிபுணர்களின கருத்தாகும்.

மட்டகளப்பு முதல் பொத்துவில் வரையான தூரம் ஏறக்குறைய 100 கிலோமீற்றர்களாகும். 1993ஆம் ஆண்டு முதல் இற்றைவரை 21 வருடங்கள் கழிந்தோடியுள்ளன. அமைச்சர் மன்சூர்; முன்னெடுத்த திட்டமானது அவரின் அரசியல் அதிகாரத்தோடு நின்றுவிடாது, பின்னர் வந்த  அரசியல் அதிகாரங்களைக் பெற்றுக்கொண்டவர்களினால் ஒரு வருடத்துக்கு 5 கிலோமீற்றர் தூரம் வரை இப்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகயை மேற்கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்று பொத்துவில் வரை ஒரு புகையிரத சேவையை, பாதையைக்; கண்டிருக்க முடியும். மக்களின் தாகம் தீர்க்கப்பட்டிருக்கும்.

ஒருவர் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு நன்மையுள்ளதாக அமையுமாயின் அத்திட்டம் அவரால் நிறைவு செய்ய முடியாது போகும் நிலையில், பின்னர் வருபவர்களினால் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும். அதுதான் நாகரியமான அரசியல் சிந்தாந்தம் தெரிந்தவர்களின் நல்ல மனப்பாங்காகும.; அந்த மனப்பாங்கு இன்றுள்ள அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் உருவாக வேண்டுமென்பதே ஜனநாகவாதிகளினதும் நல்லுள்ளம் கொண்டோரினதும் அவாவாகும்.

இருப்பினும்,  இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் தொடர்பில் முன்னால் அமைச்சர் மன்சூரினால் கடந்த ஆட்சியாளர்களுக்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்  அதற்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்பதை பின்னர் கிடைக்கப்பெற்ற செய்திகள் முலம் அறியமுடிந்தது.

கிழக்குக் கரையோர ரயில் பாதை விஸ்தரிப்புக்கான அவசியம்

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசம் சமகாலத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பணிகளின் சொர்க்காபுரியாக மாறிவருகிறது. பொத்துவிலிருந்து அரும்பைக்குடா மற்றும் அதை அண்டிய பிரதேசங்கள் உல்லாசப் பயணிகளினாலும் உல்லாச விடுதிகளினாலும் நிறைந்து காணப்படுகிறது, இன்று உல்லாசத் துறையை அபிவிருத்தி செய்வதிலும் உல்லாசப் பயணிகளைக் கவர்வதிலும் அரசாங்கம் முழுக் கவனம் செலத்தி வருகிறது. உல்லாசப் பயணத்துறை வருமானத்தை அதிகளவு ஈட்டித்தரும் ஒரு துறையாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கிழக்கின் பொத்துவில் பிரதேசம் அத்துறையின் ஒரு கேந்திர நிலையமாகவுமுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற தலைப்பில் சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு மகாநாடு ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இம்மகாநாட்டடில் கலந்துகொண்ட பலர் கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் முதலீடு செய்வதற்;கு சிறந்த பிரதேசங்கள் என்ற கருத்துப்பட கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

'கிழக்கு மாகாணம் என்பது பல்வேறு வளங்கள் நிறைந்த மாகாணமாகவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியில் உயர்;ந்த நிலைக்கு செல்வதற்கு கிழக்கு மாகாணத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளதாக' இம்மகாநாட்டில் கலந்துகொண்ட பொருளாதார நிபுணர் சமந்த கெலேகம குறிப்பிட்டிருந்தார்;. 

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாட்டினதோ அல்லது ஒரு பிரசேத்தினதோ அபிவிருத்திக்கு சிறந்த போக்குவரத்து வசதிகள் அவசியமாகும். மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான கிழக்குப் பிரதேசங்களில் முதலீடு செய்து  தொழில்பேட்டைகள் ஆரம்பிக்கப்டுவதாயின் அவற்றுக்கு முதுகெழுப்பாக இருக்க வேண்டியது சிறந்த போக்குவரத்தாகும். அதிலும் ரயில் சேவை மிக முக்கியமானதாகும்.

கடந்த ஆட்சியல் பல்வேறு பிரதேசங்களில் ரயில் பாதை விஸ்தரிப்புக்கான நடவடிக்கைகள் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 1993ஆம் ஆண்டு ஈரான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவிருந்த 100 கிலோமீற்றர் தூரம் கொண்ட மட்டக்களப்பு நகர் முதல் பொத்துவில் வரையான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் கடந்த ஆட்சியில் பங்காளிகளாக இருந்த கிழக்கு மாகாணத்தைப்; பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு அதிகாரத்தரப்பும் அக்கறைகாட்டமலும் அதன் அவசியத்தை உணராமலும் இருந்தமை; வேதனைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில் பாதை இல்லாத நிலையில், கிழக்கில் உல்லாசப் பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இப்பொத்துவிலுக்கு இலகுவான வழியில் அசௌகரியமின்றி போக்குவரத்து செய்வதில்தான் பல்வேறு சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக உல்லாசப் பயணிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. குறிப்பாக நேர விரையங்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுவதைக் காணமுடிகிறது.

அதுமாத்திரமின்றி, இப்பிரதேசங்களைச் சார்ந்த பல அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களுக்குரித்தான இலவச புகையிரதச்சீட்டைப் பயன்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப சலுகைகளின் பயன்பாட்டைக் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளமை துரஷ்டவசமானதாகும்..

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான பாதை விஸ்தரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் காலம் காலமாக விடுக்கப்பட்டு வருக்கின்றன. கடந்த வருடம் நடைபெற்ற இரு தேர்தல் பிரச்சாரங்களின்போதும் தற்போதை அரசாங்கப் பிரதிநிதிகளினால் பல வாக்குறுதிகள் கிழக்கு மாகாண மக்களுக்கு அளிக்கப்பட்பது அதில் இப்பாதை விஸ்தரிப்பும் ஒன்றாகும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்

புதிய சிந்தனை, தூர நோக்கு என்பவற்றின் அடிப்படையில் இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் உணப்படும்போதுதான் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில் பாதையையும் ரயில் சேவையையும் காண முடியும். அதனூடக கிழக்கு மக்களின் நீண்ட கால தாகம் தீர்க்கப்படும். ஆனால் இத்தாகம் எப்போது தீர்க்கப்படும் என்பதே கிழக்கு கரையோர மக்களின் தற்போதைய கேள்வியாகவுள்ளது.

எம்.எம்.ஏ.ஸமட் - விடிவெள்ளி
கிழக்கின் எல்லை வரை ரயில் வருமா? கிழக்கின் எல்லை வரை ரயில் வருமா? Reviewed by Madawala News on 8/04/2016 10:31:00 PM Rating: 5