Kidny

Kidny

யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான நிலைமாற்றுக்காலத்தில் மக்களுக்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை அரசு நடைமுறைப்படுத்தி வருவதானது நிலையான சமாதானம் தொடர்பில் தற்போதைய நல்லாட்சி அரசின் உண்மையான அக்கரையை வெளிக்காட்டி நிற்பதாக தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(21-08-2016)பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிலைமாற்றுக்கான நீதி தொடர்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

கடந்த 2015 செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர நிலைமாற்றுக்கான  நீதி நல்லிணக்கத்தின் ஓர் இன்றியமையாத அங்கமாக அமைவதால் இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கான நீதிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதன் ஒர் அங்கமாக பிரதம அமைச்சரின் அலுவலகத்தினால் நல்லிணக்கப் பொறிமுறையமைப்பு பற்றி நாடு பூராவிலும் மக்கள் அபிப்பிராயங்களை விசாரித்து அறிவதற்கு பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட சிவில் சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை செயலாளராக கொண்ட விசேட செயலணிக்குழு உருவாக்கப்பட்டது. இந்த விசேட செயலணி நாடு பூராகவும் பயணங்களை மேற்கொண்டு மக்கள் கருத்தறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இருந்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் உட்பட எந்தவொரு அரச அதிகாரியும் அரசாங்கத்தினால் போதிய அறிவூட்டப்படாமல் இருப்பது தொடர்பிலும், மக்களுக்கு விழிப்பணர்வூட்டும் செயற்பாட்டு நடவடிக்கையில் அரச இயந்திரங்கள் முடக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் எமது கட்சி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

கிராம மட்டத்தில் கிராம சேவகர்களுடாக இந்த திட்டம் பொது மக்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் துறை ஊடகங்கள் இந்த விடயத்தை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதே நேரம் தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பை நாம் பாராட்டுகின்றோம்.

மேலும் இழப்பீடு மற்றும் நட்டஈடு செலுத்துவதற்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றினை ஏற்படுத்துவதற்காக அரசு முனைப்புடன் செயற்படுவதானது பாராட்டத்தக்கதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போனோரின் உறவுகளுக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு செயற்றிட்டமுமாகும்.

அதேநேரம், யுத்தத்தின் மிக கடுமையான ஒரு அம்சமாக காணாமல் போதல் மற்றும் காணிகளை இழத்தல் என்பன காணப்படுகின்றன. நிலைமாற்றுக்கான நீதியின் அமுலாக்கப் பொறிமுறையில் அரசு நேர்மையுடன் செயற்படுகின்றது. அதே நேரம் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான ஒரு விசேட அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக மட்டுமே காணிகளை இழந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்ட முடியும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.

இந்த காரியாலயம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறுபாண்மை தமிழ் முஸ்லிம் கட்சிகள் அரசுக்கு எத்திவைக்க வேண்டும் எனவும் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மனித எழுச்சி நிறுவன தலைவர் நிஹால் அஹமட், மனித உரிமை செயற்பாட்டாளர் பசீர், சட்டத்தரணி பஹீஜ் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். Reviewed by Madawala News on 8/28/2016 07:16:00 AM Rating: 5