Kidny

Kidny

தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்...


சிங்கள மக்கள் தமக்கு உரிமை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் . அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் தெரிவிப்பு.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுவூட்டுதல், மனித உரிமைகளைப் பேணுதல், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்கின்ற பொறிமுறைக்குள் வடக்கு முஸ்லிம்கள் போதுமான அளவு உள்ளீர்க்கப்படவேண்டும். இதுவே இன்று எமக்கு முன்னாலுள்ள பாரிய பணியாகும் என   வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இன்று அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தனர், அவர்கள் மேலும் அங்கு கருத்து வெளியிடுகையில்; 

1990களில் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாழ்வு கடந்த 25 ஆண்டுகளாக சொல்லமுடியாத தனிமனித, சமூக, கலாசார, கல்வி, பொருளாதார, அரசியல் ரீதியான பின்னடைவுகளை அந்த மக்களிடத்திலே ஏற்படுத்தியிருக்கின்றது; என்பதை பலரும் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக அந்த மக்களின் யதார்த்தமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை; இது இந்த நாட்டிலே ஏற்படப்போகும் அரசியல் ரீதியான மாற்றத்தில் பங்கேற்காத ஒதுக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாக அவர்களை மாற்றக்கூடிய அபாயத்தை தோற்றுவித்திருக்கின்றது.

1990களிலே வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் 25,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமற்ற குறிப்பொன்று தெரிவிக்கின்றது. ஆனால் இப்போது வடக்கைச் சேர்ந்த 70,000ற்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் இலங்கை முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்கின்றார்கள். இவர்களை வடக்கின் மாவட்ட செயலகங்களில் பதிவு செய்வதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டாலும் அவை இதுவரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை; மாறாக மீள்குடியேற்றத்திற்காக வருகின்றவர்களை மாத்திரமே பதிவு செய்வதற்கான நடைமுறைகள் காணப்படுகின்றன. இது எமது அடிப்படை உரிமையினை மறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

மீள்குடியேறுகின்ற முஸ்லிம் மக்களுக்கான காணி, வீடமைப்பு, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதில் மத்திய அரசாங்கமும், வடக்கு மாகாண அரசாங்கமும் இதுவரை கொள்கை ரீதியான எவ்வித நிலைப்பாடுகளையோ அல்லது விஷேட செயற்திட்டங்களையோ முன்மொழியவோ அல்லது முன்னெடுக்கவோ இல்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுட் சொல்லவேண்டும். மாற்றமாக அரச அதிகாரிகளும், அரசியல் தலைவர்கள், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில சிவில் அமைப்புகளும், தமிழ் ஊடகங்களும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கொச்சைப்படுத்துவதும், இடையூறுகளை ஏற்படுத்துவதும், போலியான இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமான பிரச்சாரங்களை மேற்கொள்வதும் வடக்கில் சர்வசாதரண விடயமாகப் போய்விட்டது.

·         முல்லைத்தீவிலே 1980களில் அரசாங்கத்தினால் முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கக்கூடாது என ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால், குறித்த காணிகளை முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் வழங்க முடியாது என கறைத்துறைப் பற்று பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

·         யாழ்ப்பாணம் சாபிநகர், பொம்மை வெளி போன்ற பிரதேசங்களிலே முஸ்லிம்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளிலே குடியேறியுள்ள தமிழ் மக்கள் அவ்விடத்தை விட்டும் வெளியேற முடியாது என்று தெரிவித்து வருகின்றார்கள்.

·         மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலே முஸ்லிம்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

·         யாழ்ப்பாணம் பறச்சேரிவெளியிலே 60 ஆண்டுகளாக செய்கை பண்ணாமல் இருந்த வயல் நிலங்களை நிரவி வீடுகளை அமைத்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஒரு சில குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றிலே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

·         அரச தொழில்களை வழங்குவதிலே 2013ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் கணிசமான புறக்கணிப்புகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

இவை ஒரு சில உதாரணங்கள் மாத்திரமே.

இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் மேம்படுத்தப்படவேண்டும் என்றும், நிலைமாறுகால நீதி குறித்தும், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஏற்படுத்துவது குறித்தும், அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துதல் குறித்தும் நாம் இந்த மக்களின் இயல்பான பங்களிப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது; இது ஒரு சிக்கலான நிலைமையை எமக்கிடையே ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

இவ்விடயத்தில் உரிய கவனம் உடனடியாகச் செலுத்தப்பட்டு; இது தீர்த்துவைக்கப்படவேண்டும்

·         வடக்கு முஸ்லிம் மக்களின் பரந்தளவிலான பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய ஒரு சிவில் சமூக அமைப்பினூடாக அம்மக்களின் பிரச்சினைகளை கண்டறியப்பட்டு; அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுதல் சிறப்பானதாக இருக்கும். இதற்கு ஏதுவான ஒரு பொறிமுறைக்கான உதவிகள் மேற்கொள்ளப்படுதல் சிறப்பானது.

·         அறிமுகப்படுத்தப்படவிருக்கின்ற புதிய அரசியலமைப்பில் மாகாணங்களின் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்குபற்றுதல் என்பவற்றோரு அவர்களின் உரிமைகளும் உரிய அமைப்பில் பேணப்படுவதற்கு ஆவண செய்யப்படுதல் அவசியமாகும்.

 

·         இந்த நாட்டின் அரசாங்கம், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு தமிழ் மக்களின் சிவில் சமூக அமைப்புகளுக்கு; வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் கவனிக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்

·         சர்வதேச சமூக மட்டத்திலும், ஐ.நா உட்பட மற்றுமுண்டான சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் வடக்கு முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துதல்.

போன்ற மிக முக்கியமான மூன்று பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். என்றும் இதனூடாகவே இலங்கையில் ஜனநாயகத்தை வலுவூட்டுதல், மனித உரிமைகளைப் பேணுதல், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்கின்ற பொறிமுறைக்குள் வடக்கு முஸ்லிம்கள் போதுமான அளவு உள்ளீர்க்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உருவாக்கப்படும் என்பது எமது ஆழமான நம்பிக்கையாகும். என்றும் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள்;  வெளியேற்றம் சடுதியானது; அதேபோன்று வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்பும் சடுதியானது, மீள்குடியேற்றத்திற்கான எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே அவ்வாறான வாய்ப்பு ஏற்பட்டது; இப்போது நாம் எம்மை ஒழுங்கமைக்கவேண்டிய கடப்பாட்டுடன் இருக்கின்றோம், 2013களுக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு விஷேட நம்பிக்கை ஏற்பட்டது, மாகாணசபை மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை சீரமைக்கலாம் என எதிர்பார்த்தோம், ஆனால் இன்னும் திருப்திகரமாக அவை கையாளப்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் முஸ்லிம்களுடைஅ விடயங்கள் எவ்வித பாகுபாடுகளுமின்றி முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. ஆனால் இன்னும் மாற்றங்கள் அவசியப்படுகின்றன என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர் அடோல் கேஷாப் அவர்கள்; உங்களுடைய கருத்துக்களை வரவேற்கின்றேன், இவை எனக்குப் புதிய விடயங்கள் அல்ல, சிங்கள மக்களிடம் தமிழ் மக்கள் உரிமை கேட்டுப் போராடுகின்றபோது தமிழ் மக்கள் தமக்குக் கீழ்வருகின்ற சிறுபான்மை மக்கள் விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்தல் வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்; இலங்கையில் எல்லா மக்களும் அமைதியாக சமாதானமாக வாழவேண்டுமாக இருந்தால் ஒருவர் ஒருவரை மதிக்கின்ற நிலை உருவாக வேண்டும், இன ரீதியாக வர்க்க ரீதியாக பிளவுகள் ஆரோக்கியமானதல்ல; இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் அது மிகவும் பலமானது, நீங்கள் சிறுபான்மைகள் என்ற காரணத்திற்காக ஒதுக்கப்பட முடியாது, அதற்கு நாம் இடம்தரவும் கூடாது, இலங்கை முஸ்லிம்கள் என்று நோக்கினால் நீங்கள் ஒரு பலமான சமூகத்தின் அங்கம், அந்த ஒருமைப்பாட்டை நீங்கள் அவசியம் பேணிக்கொள்தல் வேண்டும். அமெரிக்க உதவி வழங்கும் நிறுவனத்திற்கும் வடக்கு முஸ்லிம்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்றினை நான் விரைவில் ஏற்பாடு செய்வேன், இலங்கை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான சந்திப்புகளின்போது வடக்கு முஸ்லிம்கள் விடயம் தொடர்பில் நான் அவர்களோடு கலந்துரையாடுவேன் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் அவர்களுக்கும் வடக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று (16-8-2016)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது, இச்சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களும் பங்கேற்றிருந்தார்; வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக, ஜனாப் ஆரிப், ஜனாப் எம்.றஹீம், ஜனாப்.மஹ்ரூப், ஜனாபா ஜன்சிலா மஜீத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்

தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்... தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்... Reviewed by Madawala News on 8/16/2016 09:23:00 PM Rating: 5