Yahya

கல்முனை அலியார் வீதி புனரமைப்புத் திட்டம் தொடர்பில் முதலமைச்சருக்கு அவசர மகஜர்!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண சபையின் 93 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை அலியார் வீதியை புனரமைப்பு செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை என அவ்வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் முறையிட்டு, அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர் ரீ.எல்.எம்.பாறூக் தெரிவிக்கையில்;

"கல்முனையிலுள்ள முக்கிய பாதைகளுள் ஒன்றான அலியார் வீதியில் பாடசாலை, பள்ளிவாசல் உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கி  வருகின்றன. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித புனரமைப்புமின்றி, பள்ளம், படுகுழிகளுடன் மிகவும் படுமோசமாக காட்சியளிக்கின்ற இவ்வீதி மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி விடுவதனால் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து விடுவதுடன் வீதியால் செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இந்நிலையில் 1050 மீட்டர் நீளமான இந்த பாதையை காபட் வீதியாக புனரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது வீதியை தோண்டி, ஆழமாக்காமல் புனரமைப்பு செய்வதற்கும் 200 மீட்டர் தூர அளவுக்கே வடிகான் அமைக்கப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வீதியை போதுமானளவு ஆழமாக்கி, புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் ஏற்கனவே அங்கும் இங்குமாக தொடர்ப்பற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டு, சீரற்ற நிலையில் காணப்படுகின்ற   வடிகான் துண்டுகள் யாவும் முழுமையாக தொடர்புபடுத்தப்பட்டு, சீராக மீள்நிர்மாணிக்கப்பட்ட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அடுத்த ஒரு சில தினங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரினால் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நடப்படவுள்ளதாக அறிகின்றோம்.

அதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு இவ்வீதியை காபட் பாதையாக புனரமைப்பதற்காக மத்திய அரசாங்கத்தினால் ஆறு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 2014-11-19 ஆம் திகதியன்று அடிக்கல் விழாவும் நடைபெற்றிருந்த போதிலும் சிலரின் தவறுகள் காரணமாக அந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படாமல், நிதி திரும்பிச் சென்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

அவ்வாறாயின் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த நிதியான 93 இலட்சம் ரூபாவைக் கொண்டு எவ்வாறு இவ்வீதியை முழுமையாக புனரமைப்பு செய்யப் போகிறார்கள்? துண்டு துண்டாக வீதியை நிர்மாணித்து பணம் சுருட்டும் வேலைத்திட்டமா இது என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது.

ஆகையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் இது விடயத்தில் உடனடியாக நேரடியாக தலையிட்டு, எமது கோரிக்கைகளை  உள்வாங்கி, வீதி புனரமைப்பின் தரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என 47 குடும்பத் தலைவர்கள் கையொப்பமிட்டு, அவசர மகஜர் மூலம் கோரியுள்ளோம். அத்துடன் மாகாண ஆளுநர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர், அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர், கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வீதி நிர்மாணம் என்பது பொது மக்களின் போக்குவரத்து தேவைக்காக உருப்படியாக நிர்மாணிக்கப்பட வேண்டுமே தவிர அதிகாரிகளினதும் கொந்தராத்துக்காரர்களினதும் பிழைப்புக்காக இருக்கக் கூடாது என்பதை அந்த மகஜர் மூலம் முதலமைச்சருக்கு வலியுறுத்திக் கூறியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

கல்முனை அலியார் வீதி புனரமைப்புத் திட்டம் தொடர்பில் முதலமைச்சருக்கு அவசர மகஜர்! கல்முனை அலியார் வீதி புனரமைப்புத் திட்டம் தொடர்பில் முதலமைச்சருக்கு அவசர மகஜர்! Reviewed by Madawala News on 8/18/2016 09:07:00 PM Rating: 5