Saturday, August 20, 2016

இந்த நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என போலீசார் முன்னாலே கூறியவருக்கு கைது இல்லையா?

Published by Madawala News on Saturday, August 20, 2016  | இந்த நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்து விடுவோம் என பொலிசாரை வைத்துக்கொண்டே கூறியவரை அரசாங்கம் இன்னமும் கைது செய்யாமை நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகையை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற போது அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாகவும், அவ்வாறான செயல்களில் ஈடுபட்டோர் விடயத்தில் அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாகவுமே 98 வீதமான முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக வாக்களித்தார்கள்.

ஆனால் இனங்களுக்கிடையில் நீதியையும், சமத்துவத்தையும் உருவாக்கித்தருவோம் என ஆட்சிக்கு வந்த நல்லாட்சி தனது ஒருவருடமும் எட்டு மாதங்களுக்குள்ளும் முஸ்லிம்களுக்கெதிரான இனத்துவேச வார்த்தைகளை கொட்டித்தீர்ப்போர் விடயத்தில் அசமந்தமாக இருப்பதன் மூலம் மஹிந்த அரசும் இந்த அரசும் ஒன்றுதான் என்பதையே மக்களுக்கு புரிய வைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசில் தென்னிலங்கை முஸ்லிம்கள் ஓரளவு பாதிப்படைந்தாலும் அவர் பயங்கரவாதத்திலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியவர் என்ற வகையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய உதவி செய்தவர். அப்படியிருந்தும் அவரது ஆட்சியில் முஸ்லிம்கள் மிக மோசமான வார்த்தைப' பிரயோக அவமானப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டதால் யுத்த வெற்றியையும் மறந்து முஸ்லிம்கள் அவரை எதிர்த்து இந்த அரசுக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையிலும் இந்நாட்டு முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்தொழிப்போம் என கூறியவர் இன்னமும் கைது செய்யப்படாமை பாரிய கேள்விகளை உருவாக்கியுள்ளதுடன் மஹிந்த விடயத்தில் தவறிழைத்து விட்டோமோ என முஸ்லிம்களை சிந்திக்க வைத்துள்ளது.


இத்தகைய இனவாதிகள் பின்னால் மஹிந்த சார்பானவர்கள் இருப்பதாக சொல்லி அரசு தப்பிக்க முடியாது. அவ்வாறு இருந்தால் மிக இலகுவாக இவர்களை கைது செய்ய முடியும். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ போன்றோரையே கைது செய்ய முடிந்த அரசுக்கு முஸ்லிம்களை ஒழிப்போம் என பகிரங்கமாக சொல்லும் சாதாரண இனவாதியை கைது செய்ய முடியாதா?
ஒரு சமூகத்தை தண்டிப்பதாயின் அச்சமூகம் பற்றிய பொய்யையும், வெறுப்புணர்வையும் ஊடகங்கள் வாயிலாக முதலில் செய்து அழிப்புக்குரிய நியாயங்களை தமது தரப்பில முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சர்வாதிகார நாடுகளின் நடைமுறையாக இருக்கின்றது. இப்படித்தான் ஈராக்கில் சத்தாம் ஹுசைன் பற்றி மேலைத்தேய நாடுகளின் பொய்ப்பிரச்சாரங்களை உருவாக்கி பின்னர் அமெரிக்கரின் தாக்கதலுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.


அதே போன்று இலங்கை முஸ்லிம்களை தாக்கு முன் அவர்கள் பற்றிய மோசமான, இனத்துவேச வார்த்தைகளை பகிரங்கமாக விதைப்பதன் மூலம் தாக்குதலுக்கான நியாயத்துக்கான வழிகளை உருவாக்குகிறார்களா என்றும் அதற்குரிய வாய்ப்புக்களை மைத்திரி ரணில் அரசம் செய்கின்றதா என்ற கேள்வி பலமாக எமக்கு எழுகின்றது.


ஆகவே பல நாட்கள் கடந்தும் இன்னமும் மேற்படி நபர் கைது செய்யப்படாமல் இருப்பது நல்லாட்சிக்கு அழகல்ல என்றும் உடனடியாக இவரை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலமா கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

https://www.facebook.com/acmc.lk/videos/1153277261397999/


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top