Kidny

Kidny

முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி..


அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார்? 

ஆச்சரியத்தக்க வகையில் யாரும் இல்லை என்பதே இந்தக் கேள்விக்கான பதில் 'அரசாங்கத்துக்குள் பல முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இருக்கையில் எவ்வாறு அப்படி கூறலாம்' என்று யாராவது கேள்வி எழுப்பலாம். ஆம் பல முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றார்கள் தான். 

ஆனால் அவர்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஏனெனில் இவர்களுள் பலர் பின்கதவு கொடுக்கல் வாங்கல்களால் அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்கள்.

உதாரணத்துக்கு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசன்னம் ஏமாற்றுத்தனமானது. அவர்கள் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் தமக்கிடையிலான ஓர் உடன்பாட்டின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி அரசுக்குள் இடம் பிடித்தவர்கள்.

ஸ்ரீல.மு.கா இன் ஸ்தாபகத் தலைவர் தனது அரசியல் பலத்தைக் காட்டி சிங்கள அரசியல் கட்சிகளுடன் அரசை அமைப்பதற்கு அவர்களுக்கு வழங்கும் ஆதரவுக்கு பதிலாக பேரம் பேசி பதவிகளையும் ஏனைய வசதிகளையும் பெற்றுக் கொண்டார். அதுதான் ஆரம்பம். இதன் மூலம் சிங்கள அரசியல் தலைமைகள் மறைமுகமாக அச்சுறுத்தப்பட்டு கடைசியில் அவை கைவிடப்பட்டும் உள்ளன. அஷ்ரபின் மறைவுக்குபின் கட்சிக்குள் தலைமைத்துவ நெருக்கடிகள் தோன்றி ஸ்ரீல.மு.கா பல கூறுகளாக பிளவு பட்டு ஒவ்வொரு பிரிவும் தமக்குத் தேவையானவர்களை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

தவிர்க்கமுடியாத வகையில் அந்தப் பிளவுகள் இன்னும் முடிவடையவில்லை. இன்றுவரை அது தொடாகின்றது. சமூகத்துக்கு அது கெட்ட பெயரையும் அழிவையுமே கொண்டு வருகின்றது. பெரும்பான்மை சமூகத்துடனான முஸ்லிம்களின் நல்லிணக்கத்துக்கும் அது பாதகமாகின்றது.

முஸ்லிம்கள் மு.கா. மீது தற்போது பெரும் விரக்தி அடைந்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களின் போது பதுளை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் இதை நிரூபிக்கின்றன. அங்கு வாழும் சுமார் 50000 முஸ்லிம்களில் ஐயாயிரம் பேர் அளவில் மட்டுமே மு.காவுக்கு வாக்களித்திருந்தனர்.

மு.கா. தோல்வியுற்ற மஹிந்த அணியின் ஒரு அங்கமாகவே இருந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்த தரப்பு இழைத்த அநீதிகள் எல்லாவற்றையும் மீறி இந்த நிலை நீடித்தது. 2015 ஜனவரி 8 தேர்தலின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அணி மைத்திரிபால சிறிசேன முகாமில் இணைந்து கொண்டது. இதன் பின்னணியிலும் சில பேரம் பேசல்கள் உள்ளதாகவே கூறப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்து விட்டது என்பதை தெரிந்துகொண்டே அவர்களும் இந்த முடிவுக்கு வந்தனர்.

கடந்த சில மாதங்களில் மு.காவின் உட்கட்சி மோதல்கள் உச்ச கட்டத்துக்கு வந்துள்ளன.

முடிவற்ற இந்த உட்கட்சி மோதல்களை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற போது ஊழல் மோசடிகள் பற்றி வெட்கக் கேடான குற்றச்சாட்டுக்கள் பதவி மோகம் அதிகார மோகம் பதவிகளுக்கான ஓட்டம் என பல விடயங்கள் வெளிவருகின்றன. இவற்றை கேள்விப்படுகின்ற போது மு.கா.வினர் தம்மை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகமே எழுகின்றது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் இஸ்லாம் ஒற்றுமை மற்றும் இன்னோரன்ன கோஷங்களை முன்வைத்து அரசியலக்கு வந்த மு.கா சமூகத்துக்கே ஒரு பெரும் சோகமாக மாறியுள்ளது.

அவர்கள் அரை டசனுக்கும் அதிகமாகப் பிரிந்து நின்று கொண்டு சமூகத்தின் ஒற்றுமை பற்றி பேசுவதுதான் வேடிக்கை.

இதனால் சமூகம் ஒரு சீர்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அங்கு தவிர்க்க முடியாத ஒரு தலைமைத்துவ நெருக்கடியும் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாகப் பல குழுக்களாகப் பிளவு பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் நிலையை ஒரு மோசமான கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது. யாரும் எளிதாக அவர்களை தமது தேவைக்கேற்ப கையாளலாம் என்ற அபாய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சினைகளைக் கையாள்வதாகக் கூறிக் கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தை யாரும் வளைத்துப் போடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவர்களும் சந்தர்ப்பவாதிகளும் இந்த நிலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுள் ஒரு பிரிவினர் தமது வடிவமைப்புக்களை அமுல் செய்வதற்காக உலமா சபையின் சர்ச்சைக்குரிய தலைவரை சமூகத் தலைவராகக் காட்ட முனைகின்றனர்.

ஆனால் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களின் கருத்துப்படி இது பேரழிவை ஏற்படுத்தக்கூடியது.

உதாரணத்துக்கு உலமா சபை தலைவரின் தலைமையின் கீழ் முஸ்லிம்களின் ஒரு தூதுக்குழு குறுகிய கால அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்தது. முஸ்லிம்களின் சமூக மட்டப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய ஒரு தூதுக்குழுவை குறுகிய கால அழைப்பில் ஏற்பாடு செய்திருக்கக் கூடாது. இத்தகைய ஒரு சந்திப்புக்கு முன்னாள் பல்வேறு மட்டங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த பிரிவினர் சந்தித்து நிலைமைகளை பல்வேறு மட்டத்தில் ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதன் விளைவாக இந்த சமூக மட்ட பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் இங்கு பேசிய பல விடயங்கள் ஏற்கனவே விரிவாக ஆராயப்படாத விடயங்களாக உள்ளன. உதாரணத்துக்கு முஸ்லிம் பாடசாலைகள் பற்றி இங்கு பேசப்பட்ட விடயங்கள முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களாகப் பிரதிபலிக்கவில்லை. அவை ஒருசில தனி நபர்களின் கருத்துக்களாகவே இருந்தன.

முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கல்வி அறிக்கை பற்றி மௌலவி றிஸ்வி உரையாற்றியுள்ளார். ஆனாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகள் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கவில்லை என்றே பலரும் நம்புகின்றனர். கல்வி விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கையாள்வது உலமா சபையின் வேலையா என்பதே இங்கு பலரும் எழுப்பும் கேள்வியாகும். முஸ்லிம் ஆசிரியர் வெற்றிடங்கள்இ வெறுப்பு பிரசாரம்இ சட்ட ஏற்பாடுகள்இ தென் மாகாணத்தில் கல்வி பிரச்சினைஇ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பாறையில் கட்டப்பட்ட 500 வீடுகள் கையளிக்கப்படாமை என இன்னும் பல விடயங்கள் பற்றியும் இங்கு பேசப்பட்டுள்ளன.

இதில் வெறுப்புணர்வுகளுக்கு எதிராக அமுல் செய்யக்கூடிய சட்டப்பிரமாணங்கள் பற்றிப் பேசிய நபரின் நம்பகத்தன்மையை பார்க்கின்றபோது ஜனாதிபதியை சந்தித்த இந்த ஒட்டுமொத்த பிரதிநிதிகள் குழுவினதும் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகின்றது. இவர்தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் மிகவும் விசுவாசத்துக்குரிய சட்டத்தரணி. அவர் கோத்தாபயவுடன் இருந்த காலத்தில் இந்த சட்ட ஏற்பாடுகள் பற்றி ஒரு முறையேனும் வாய் திறக்கவில்லை.

இவற்றின் நடுவே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கும் சில தனிநபர்கள் கூடி ஒரு வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர். 2015 ஆகஸ்ட்டில் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தின் பின் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில சுயநல விரும்பிகளின் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இதை பலரும் பார்க்கின்றனர். இங்கும் உலமா சபை தலைவர்தான் முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றுள்ளார்.

இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வங்குரோத்து நிலையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியலில் உலமா சபை தலைமைத்துவத்தின் ஈடுபாடு ஊழல் மோசடிகளுக்கு பெயர்போன அரசியல்வாதிகளுடனான ஈடுபாடு முறைகேடான அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் பேரம் பேசல்கள் என்பன முஸ்லிம் சமூகத்தின் சகல பிரிவினரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலைமையில் ஆழமான அக்கறை கொண்டுள்ளவர்கள் இந்த விடயங்கள் பற்றியே சிந்திக்கின்றனர்.

உலமா சபை ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட கம்பனி அல்ல. அது ஒரு சமய ரீதியான அமைப்பு. சமயம் சார்ந்த விடயங்களில் மக்களை வழி நடத்துவதே அதன் தலையாய கடமை. தன்னை மற்றவர்கள் தமது தேவைக்கு எற்ப கையாள உலமா சபை விரும்பியோ விரும்பாமலோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ இடமளிக்கின்றது. இதனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்லஇ முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் கூட தமது சொந்தத் தேவைகளை உலமா சபை மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலமா சபை ஊழல் வர்த்தகமயமாக்கல் இனவாதம் குற்றங்கள் நிறைந்த அரசியல் என்பனவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே பலரதும் வற்புறுத்தலாக உள்ளது.  இருப்பினும் உலமா சபை அதன் வரையறைகளையத் தாண்டி அரசியலுக்குள்ளும் ஏனைய விடயங்களிலும் பிரவேசித்துள்ளது.

புலிகளுடனான யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் பற்றிய இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள்  தொடர்பான மிகவும் உணர்வுபூர்வமான விடயத்தில் இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காக உலமா சபை ஜெனீவாவுக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் நாசகாரமான ஒரு அரசியல் ஈடுபாடு கொண்ட விஜயம் என்பதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். ஒரு மார்க்க ரீதியான அமைப்பு என்ற வகையில் உலமா சபை இந்த விடயத்தில் தலையிட்டிருக்க கூடாது. தமிழ் சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வையும் கசப்புணர்வையும் இது அதிகரித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதை உலமா சபை தலைவர் மட்டுமே நன்கு அறிவார்.

மறுபுறத்தில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பதை உலமா சபை எப்படி அறியும்? என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விடயங்கள் யுத்தக் குற்றங்கள் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? உலமா சபை பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது இதுதானா?

இந்த விஜயத்தின் பின்ர்தான் ராஜபக் ஷ அரசு முஸ்லிம்களை குறிவைக்கத் தொடங்கியது என்பதையும் யாரும் இங்கே மறந்துவிடக் கூடாது.

உலமா சபையால் உருவாக்கப்பட்ட மற்றொரு மாபெரும் குழப்பம் தான் ஹலால் சம்பந்தப்பட்ட விடயம். அது ஒரு சாதாரண விடயம். ஆனால் அதற்கு சரியான விளக்கமளிக்க உலமா சபை தவறிவிட்டது. இதனால் இனவாத சக்திகள் சமூகத்தை சீண்டிப்பார்க்க வழியமைக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தைப் பற்றி கூறப்பட்ட சில கருத்துக்கள் வருமாறு:

1. இஸ்லாத்தில் குருத்துவம் இல்லை. உலமாக்கள் காலம் கடந்த முறையிலான மத்ரஸாக்களில் இருந்து வெளியேறியவர்கள். 1920களின் நடுப்பகுதியில் இவர்கள் இணைந்துதான் உலமா சபையை உருவாக்கினர். முஸ்லிம் சமூகத்தில் கல்வி அறிவு மட்டம் மிகவும் குறைவாகவும் இஸ்லாம் பற்றி போதிய அறிமுகம் இல்லாத ஒரு காலமாகவும் அது இருந்தது. பல வருடங்களாக இந்த நிலை நீடித்தது. இவ்வாறான நிலையில் தான் முஸ்லிம்களுக்கான தனிப்பெரும் சமயம் சார்ந்த ஒரு அமைப்பாக உலமா சபை திகழ்ந்தது. முஸ்லிம் சமூகமும் அதன் மீது பெரும் கௌரவம் வைத்திருந்தது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. தற்போதைய தலைமுறை இஸ்லாம் பற்றி போதிய தெளிவுள்ள சமூகமாகக் காணப்படுகின்றது. எனவே உலமா சபை காலத்தின் தேவைக்கு ஏற்ப தன்னில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சமூகத்தை வழிநடத்துபவர்களாகக் காணப்பட்ட உலமாக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கௌரவத்தையும் அந்தஸ்தையும் மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகும். அவர்களின் மாதாந்த வருமானம் சுமார் 20 ஆயிரம் ரூபாவாகவே இன்னமும் உள்ளது. வாழ்க்கை நிலையோ மிகவும் பரிதாபகரமானது.

2. உலமாக்களின் நிலைகுறித்து வெள்ளிக்கிழமை தொழுகை பிரசாரத்தில் ஒரு இமாம் குறிப்பிடுகின்ற போது உலமா சபையினதும் சமூகத்தினதும் சிந்தனையைத் தூண்டும் வகையில் உணர்வுபூர்வமாக சில விடயங்களை முன்வைத்துள்ளார். மீள்பார்வை இதழில் அஷ்ஷேக் டி.எம்.முபாரிஷ் றஷாதி என்பவர் அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் உலமாக்களின் பரிதாப நிலை மேலும் விவரிக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த சமூகத்தை வழிநடத்தக் கூடிய தகுதியை வழங்குவதற்காக அரசியல் உட்பட இன்னும் பல விடயங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியுள்ளன. இலங்கையில் இப்போது ஊடுருவியுள்ள வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டு சக்திகளின் தீவிர சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அவசியமாகின்றன. ஆனால் இந்த விடயங்களில் உலமா சபை இன்னமும் இணக்கம் காணாதவர்களாகவே உள்ளனர் என்பதே பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்ட விடயங்களாக உள்ளன.

3. மிகத் தீவிரமான உணர்வு பூர்வமான விடயங்களில் சமூகம் இன்னமும் மார்க்க தீர்ப்புக்களை எதிர்பார்த்துள்ளது. கறுப்பு நிற அபாயா அணிதல்இ முகத்தை மூடுதல் என்பன இதில் சிலவாகும். பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி வெறுப்புணர்வுக்கு இவை காரணங்களாக அமைந்துள்ளன. அவர்களோடு இணக்கமாக வாழ்ந்து கொண்டுதான் நாம் எமது சமூகத்தையும் வழிநடத்த வேண்டியுள்ளது.

4. தேசிய சூறா சபை உலமா சபையின் தீர்ப்புக்காக பல விடயங்களை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இன்று வரை அவற்றுக்கு எந்தப் பதிலும் இல்லை.

5. தொழுகைக்கான அதானுக்காக கண்டபடி ஒலிபெருக்கிகளை பாவிப்பது இன்றும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. கடந்த காலங்களில் இது பற்றி சர்ச்சைகள் எழுந்த போதும் உலமா சபை இன்னமும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உறுதியான ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஒரு சமூகமாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் விடயத்தில் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகம் இன்னமும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவே உள்ளது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கை இஸ்ரேலியர்கள் ஒரு கொலைக்களமாக மாற்றிவிட்டனர். இப்போது அவர்கள இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தமது பூகோள ரீதியான வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையிலும் பிரவேசித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் முஸ்லிம் சமூகம் அரசியல்இ சமய ரீதியாக தலைமைத்துவ வெற்றிடமுள்ள ஒரு சமூகமாக தொடர்ந்து இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்து அவர்கள் ஏனைய சமூகங்களுடன் இணக்கபூர்வமாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்த எல்லா முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும். சிவில் சமூகம் இந்த விடயத்தில் முன்னணி வகிப்பதே வரவேற்கத்தக்கதாகும். 

முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி.. முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி.. Reviewed by Madawala News on 8/22/2016 05:24:00 PM Rating: 5