tg

எமது சமூக ஆசிரியர்களும் ஹஸரத்மார்களும் சிந்திப்பார்களா ?


கடந்த சில நாட்களுக்கு முன்னர்....

சிறுவன் ஒருவனிடம் காதல் கதைகேட்டு அதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்த ஆசிரியரின்(?) துர்செயலை எண்ணி மனம் வெதும்பிய மாலைப்பொழுதொன்றில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது!

"........ எனது மகனை குர்ஆன் மத்ரசாவில் இருந்து விலக்க வேண்டி ஏற்பட்டது, அங்கே எனது மகனை வாடா, போடா என்று பேசுவது பிடிக்கவில்லை, மகன் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் கல்வி கற்பது சிங்கள பாடசாலையில் ஆனால் அப்பாடசாலை நாகரீகமானது, அங்கே எல்லோரும் மிக்க மரியாதையோடுதான் பேசுகிறார்கள்......"

என்றது அவரது உரையாடல். 

முடிவில் இதைப்பற்றி பொது தளமொன்றில் எழுத வேண்டுமெனவும் என்னிடம் வேண்டிக்கொண்டார்.

முஸ்லிம் சமூகத்திற்குள் சில பாடசாலைகளிலும், மத்ரசாக்களிலும் ஆசான்களால் உபயோகிக்கப்படும் வார்த்தைப்பிரயோகங்கள் மிக மட்டமானவை.

இதனால்...,

1. பிள்ளைகளும் அவ்வாறான கீழ்நிலை சொற்களை பாவிக்க பழகுகின்றார்கள்!

2. கெளரவத்தை, பண்பாட்டை அறிந்த பிள்ளைகளுக்கு அந்த குருமாரின் மீது வெறுப்பும், அவமரியாதையும் ஏற்படுகின்றன!

ஆசிரியத்தொழில் என்பது உன்னதமானது.

எவ்வாறு கற்பிக்கவேண்டுமென ஆசிரியப்பயிற்சி கலாசாலைகளில் ஆசிரியர்களுக்கு கற்பித்துக்கொடுக்கிறார்கள்!

அதில் மாணவர்களோடு எவ்வாறு பழக வேண்டும் என்பது மிக முக்கியமான பயிற்சியாகும்.

இவ்வாறு பயிற்சிகளை பெற்ற பின்னரும் சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள், மாணவர்களுடனான உரையாடல்கள் அடிமட்ட நிலையில் அமைந்துவிடுவது துரதிஷ்டமானது!

அதே போல குர்ஆன் மத்ரசாக்களில் பாடஞ்சொல்லிக்கொடுப்பவர்களும் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களை பேணுவது கட்டாயமாகும். 

ஏனெனில் அவர்கள் குர்ஆனை மாத்திரமல்ல இஸ்லாத்தின் அடிப்படைகளை, ஒழுக்கம், பண்பாடு பழக்க வழக்கங்களை மாணவர்களுக்கு போதிக்கவேண்டியவர்கள்.

பெளத்த பாடசாலைகளில் மாணவர்கள் குருமாரின் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள். 

ஆசிரியர்கள் மாணவர்களை "புதா, துவே" என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்த அன்புதான் மாணவர்களை சிரம் பணிய வைத்திருக்கிறது!

இஸ்லாம் மாணவர்களை குருமாரின் கால்களில் விழச்சொல்லவில்லை.

ஆனால் ஆசிரியர்களை மதிக்கச்சொல்கிறது.

"சிறியோர் மீது அன்பு காட்டாதவரும், பெரியோரை மதிக்காதவரும் என்னை சார்ந்தோர் அல்ல" என்று சொன்னார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

இங்கு சிறியோர் மீது அன்புகாட்டுதலை ஆசிரியர்கள் கவனங்கொள்ள வேண்டும்.

தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் எவ்வளவு மரியாதையோடும், அன்போடும் ஒரு ஆசிரியர் நடாத்துவாரோ அதே போல அல்லது அதை விட மேலான கவனத்தோடு பாடசாலைகளில் மாணவர்களோடு நடந்து கொள்ளவேண்டும்!

எனது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியப்பணி செய்தவர்கள் என்ற வகையில் அவர்களது அணுகு முறையால், அன்பினால் சம்பாதித்துக்கொண்ட மாணாக்கரின் மனசுகள் ஏராளம் என்பதை இன்றும் நாம் உணர்கிறோம்.

ஆகவே ஒரு சமூகத்தின் அச்சாணியான ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுடனான உறவாடலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முன்னுதாரணமிக்கதாக ஆக்கிக்கொள்தல் அவசியம்.

அது போலவே குர்ஆன் மத்ரசாக்களின் ஹசரத்மார்களும் தங்களது சொல், செயல், பண்பாட்டு விழுமியங்களில் முன்மாதிரிகளாக திகழவேண்டும்.

இதுவே இலங்கை முஸ்லிம் சமூகம் குருமாரிடம் வேண்டி நிற்கும் கற்றல் தொடர்பான இரண்டு பிரதான கோரிக்கைகளாகும்.

ஏகப்பட்ட நல்லாசான்களும், பண்பட்ட ஹஸ்ரத்மார்களும் சமூகத்தில் தங்கள் பணிகளை திறம்பட ஆற்றுகிற போதிலும் ஆங்காங்கே நிகழ்கிற பிறழ்வுகள் சமூகத்திற்குள் பாரிய அதிர்வலைகளை உண்டுபண்ணி விடுகின்றன.

எனவே கற்றல் சமூகத்தில் களங்கங்கள் நிகழ்ந்து விடாமல் கவனங்கொள்ள வேண்டியது குருமார்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவர் மீதும் கடமையாகும்.

கோபம் வருகிற போது நாம் பெற்றால்தான் பிள்ளையா? என்று ஒரு கணம் குருவானவர் யோசிக்க முனைந்தால், சேதாரம் குறையும்.

நல்லது நிகழும்.
எமது சமூக ஆசிரியர்களும் ஹஸரத்மார்களும் சிந்திப்பார்களா ? எமது சமூக ஆசிரியர்களும் ஹஸரத்மார்களும் சிந்திப்பார்களா ? Reviewed by Madawala News on 8/07/2016 05:11:00 PM Rating: 5