Ad Space Available here

அரசியல் பிரவேசத்திற்காக சமூகத்தின் கல்வியை மூலதனமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது..( ஆதம்) 

தனிநபர் ஒருவரின் அரசியல் பிரவேசத்திற்காக எமது சமூகத்தின் கல்வியை மூலதனமாகப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணி, வம்மியடி வீதி அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நேற்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் நல்லாட்சியை வலுப்படுத்தும் வகையில் கிராமங்களை அபிவிருத்தி செய்து அம்மக்களின் அடிப்படை மற்றும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இவ்வாறான பணிகளைச் செய்கிறது. விசேடமாக கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை; மேற்கொள்கின்ற போது பொது மக்களாகிய நீங்களும் பங்காளிகளாக இணைந்துகொண்டு இத்திட்டங்களை திறன்பட செய்வதற்கு முன்வரவேண்டும்.

கடந்த காலங்களில் எமது பிரதேசம் கல்வித்துறையில் பாரிய முன்னேற்றமடைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது இப்பிரதேசத்தின் கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் பலவீனமான செயற்பாடாகும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பலவழிகளிலும் எமது மக்கள் தங்களது பொருளாதாரங்களை இழந்து மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். இழக்கப்பட்ட எமது மக்களின் பொருளாதாரத்தை கல்வியின் ஊடாகவே கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திப் பணிக்காக என்னால் முடியுமான உதவிகளைச் செய்துள்ளேன்.

அதிலும் குறிப்பாக எங்களுக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தினூடாக எமது சமூகத்தினுடைய கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்காக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தை இப்பிரதேசத்திலே அமைத்து இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்காற்றியுள்ளோம். எமது அயராத முயற்சியின் காரணமாக  இக்கல்வி வலயமானது 2011,2012,2013 ஆகிய வருடங்களில் கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சாதனைபடைத்து தேசிய ரீதியில் சிறந்து விளங்கியது.

இவ்வாறு கல்வித்துறையில் பிரகாசித்த இவ்வலயம்; இன்று அரசியல் நோக்கத்தின் பேரில் சீரழிக்கப்படுவதனை யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
குறிப்பாக இவ்வலயத்தினுடைய வலயக்கல்லிப் பணிப்பாளர் எதிர்காலத்தில் அரசியலில் நுழைவதற்காக இக்கல்வி வலயத்தை ஒரு மூலதனமாகப் பயன்படுத்துகின்ற ஒரு போக்கை காணக்கூடியதாகவுள்ளது. அதற்காக அவர் அதிபர்களையோ, ஆசிரியர்களையோ, பாடசாலை சமூகத்தையோ நொந்துகொள்ளாமல் எல்லோருடனும் நல்ல பிள்ளையைப் போன்று செயற்பட முற்படுகிறார்.

இவ்வாறான நிலை தொடர்வதற்கு இப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. யாருடைய அரசியல் தேவைக்காகவும் எமது சமூகத்தின் கல்வியை மூலதனமாகப் பயன்படுத்துவதற்கும், சீரழிப்பதற்கும் யாருக்கும் அனுமதியளிக்கவும் முடியாது. ஆனால் குறித்த வலயக்கல்லிப் பணிப்பாளர் தேர்தல் வரும்வரைக்கும் தனது ஓய்வை நீடித்துக்கொள்வதற்கும், அதேபோன்று பாடசாலைகளை மேற்பார்வை செய்யாமலும் வலயத்தினுடைய பின்னடைவுகளை பாடசாலை சமூகத்தோடு பேசி சீர்செய்யாமலும் வலயப்பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகள், ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாமலும் ஒரு மெத்தனப் போக்குடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

ஆகவே இந்தவிடயத்தில் எமது பிரதேச அரசியல் தலைவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் இச்சமூகத்தினுடைய கல்வி மேலும் பின்னடைவையே சந்திக்கும், என்பதுடன் கல்விக்குள் அரசியலை உட்புகுத்தி ஏழை மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் கல்வி அதிகாரியின் செயற்பாடு கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அரசியல் பிரவேசத்திற்காக சமூகத்தின் கல்வியை மூலதனமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது..  அரசியல் பிரவேசத்திற்காக சமூகத்தின் கல்வியை மூலதனமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.. Reviewed by Madawala News on 8/30/2016 06:10:00 PM Rating: 5