Accaddemy

மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான நடமாடும் சேவையினை; யாழ் முஸ்லிம்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அல்ஹாஜ் அமீன் கோரிக்கை...



எதிர்வரும் 20ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீள்குடியேற்றப்பதிவுகளுக்கான நடமாடும் சேவையினை யாழ்ப்பாண முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அல்-ஹாஜ் அமீன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது. யாழ்ப்பாணத்தில் இருந்து 1990களில் 3500க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள், சுமார் 25 வருடங்களின் பின்னர் இயற்கையான சனத்தொகைப் பெருக்கத்தின் படி பார்த்தாலும் இப்போது 10,500 யாழ்ப்பாண முஸ்லிம் குடும்பங்கள் இருப்பார்கள் என நாம் கருதமுடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் எவருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்று உரிமையோடு கூறும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் பதிவுகள் கிடையாது. இது மிக மிக ஆபத்தான நிலைமையாகும். இதில் 50%மான குடும்பங்களாவது யாழ்ப்பாணத்தில் தம்முடைய பதிவுகளைக் கொண்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்ற சமூகம்த்தின் இருப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

அந்தவகையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற மீள்குடியேற்ற பதிவுகளுக்கான நடமாடும் சேவையில் 2250 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக தம்மைப் பதிவு செய்துகொண்டார்கள்; ஆனால் இதைவிடவும் அதிகமான யாழ்ப்பாண முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்கள், எனவே மீள்குடியேற்றத்திற்கான பதிவுகள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டியவைகளாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ றிஷாத் பதியுத்தீன் (பா.உ) அவர்களும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்கள் அதிக அக்கறை செலுத்திவருகின்றமை யாவரும் அறிந்த விடயமே, அந்தவகையில் மேற்படி நடமாடும் சேவையில் அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அனைவரையும் கௌரவ அமைச்சர் சார்பாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி நடமாடும் சேவை முழுமையான வெற்றியை அடைந்துகொள்வதற்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்புகளையும் நானும் எமது கட்சியும் செயற்படும், இன்ஷா அல்லாஹ். என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்.என்.எம்.அப்துல்லாஹ்

மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான நடமாடும் சேவையினை; யாழ் முஸ்லிம்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அல்ஹாஜ் அமீன் கோரிக்கை... மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான நடமாடும் சேவையினை; யாழ் முஸ்லிம்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அல்ஹாஜ் அமீன் கோரிக்கை... Reviewed by Madawala News on 8/13/2016 09:46:00 PM Rating: 5