Ad Space Available here

ஒலுவில் கடலரிப்பினை உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வை(எம்.ஏ.றமீஸ்)

ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கடலரிப்பினைத் தடுக்கும் வகையில் அமைச்சர்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், துறைமுக அதிகார சபை உயரதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவினர்; நேற்று(07) அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவ்விடயம் சம்பந்தமாக சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயும் நிகழ்வு ஒலுவில் துறைமுக அதிகார சபை சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

கடலரிப்பிற்குள்ளான பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்ட இக்குழுவினர் அங்குள்ள மக்கள் கருத்தினைக் கேட்டறிந்ததுடன், ஒலுவில் துறைமுக அதிகாரிகள், கடற்படையினர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோரிடமும் இதுபற்றிய கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

துறைமுக அதிகார சபையின் உல்லாச விடுதியில் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் பிரபாத், ஒலுவில் அனைத்துப் பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள், அரசியற் பிரமுகர்கள் போன்றோர் மத்தியில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், கலப்படமற்ற வகையில் எமது கட்சியினை ஆதரித்து வரும் ஒலுவில் பிரதேச மக்களின் நலனுக்காய் நாம் துரித கதியில் செயற்பட்டு வருகின்றோம்.

இதற்கமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட துறைசார்ந்த தரப்பினருக்கு எமது மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தியுள்ளேன். அதன் வரிசையிலே இன்று(08) திங்கட்கிழமை பி.ப. 4 மணிக்கு ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து இவ்விடயத்தினை நன்கு தெளிவு படுத்தவுள்ளேன. ஜனாதிபதியின் நிருவாகத்தின் கீழ் கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சு உள்ளதால் ஒலுவில் மக்களின் நன்மைக்காய் முழு விடயங்களையும் இதன்போது தெரியப்படுத்தவுள்ளேன்.

ஒலுவில் கடலரிப்புச் சம்பந்தமாக ஏற்கனவே நான் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதால் அதன்மூலம் மக்களுக்கு நன்மை கிட்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்றேன். எமக்கு இவ்விடயத்தினை பாரிய நிதி மூலம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அமைச்சரவை அங்கீகாரம் கிடைப்பது எமக்குச் சாதகமாக அமையும் என பெரிதும் நம்புகின்றேன்.

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை முழுமையாக அணையிட்டு ஒலுவில் பிரதேசத்தினைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதுடன், தொழில் வாய்ப்புகளை இழந்தவர்களுக்கும் நிலத்தினை இழந்தவர்களுக்கும் நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியிடம் கருத்தினை முன்வைக்கவுள்ளேன். அதுமட்டுமல்லாமல் தற்போது இப்பிரதேச மக்களால் துறைமுகம் தேவையில்லை என முன்வைக்கப்பட்ட கருத்தினையும் நான் எடுத்துக் கூறவுள்ளேன்.

எமது மக்களைக் காப்பாற்றி மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளதால் தடுப்பு அணைகளை நிறுவும் வகையில் விஞ்ஞான ரீதியான சாத்தியப்பாட்டுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை எடுத்துக் கூற திட்டமிட்டுள்ளேன்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பொருளாதார விருத்தியினை நோக்கிய செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற் திட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தினையும் அதனோடு இணைந்த பிரதேசத்தினையும் உள்ளடக்கி தொழிற்பேட்டையினை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் அறிகின்றோம் அதன் மூலமும் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்; என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பள்ளிவாசல்களின் பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில், ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னணியில் இத்துறைமுகத்தின் மூலம் தேசிய வருமானம் ஈட்டப்பட்டாலும் துறைமுக நிர்மாணத்தினால் இப்பிரதேச மக்கள் முழுக்க முழுக்க நாத்தினையும் நஷ்டத்தினையும் எதிர்நோக்கி வருவதுதான் உண்மை நிலை.

ஒலுவில் துறைமுகத்தினால் எமக்கு நன்மைகள் ஏற்பட்டதனைத் தவிர பெரும்பாலான தீமைகளே இடம்பெற்று வருவதால் நிர்மாணிக்கப்பட்ட இத்துறைமுகத்தினை மூடி விட்டு மக்கள் அன்றாடம் நிம்மதியாக மேற்கொண்டு வந்த தொழிலை மீளவும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் அழிவுகளைச் சந்தித்து வரும் இவ்வேளையில் முழுக்க முழுக்க மு.காவிற்கு வாங்களித்த நீங்கள் அனுபவியுங்கள் என எல்லோரும் எம்மை ஏளனம் செய்கின்றனர். சுமார் 400 மீற்றர் நிலப்பரப்பு கடலுக்குள் செல்லக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக விஞ்ஞான பூர்வமான அறிக்கைகள் சொல்வதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அதற்கமைவாக நாம் பல மீற்றர் நிலப்பரப்பினையும் தொழில் வாய்ப்புகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளோம்.

கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஜனாதிபதி எமது ஒலுவில் பிரதேச மக்களை ஏமாற்றி வரலாறு எழுதப்படவேண்டியவையான விடயமாக உள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த ஜனாதிபதி காணிகளை இழந்த ஒலுவில் மக்களுக்கு நஷ்டஈடு தருவதாக பகிரங்கமாக மேடையில் வைத்து அவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டன. 

ஆனால் அக்காசோலையால் ஒரு ரூபாவையேனும் எடுக்க முடியாத காசோலைகளை அவர் தந்ததை பின்னர்தான் உணர்ந்து கொண்டோம். இது எமது மக்களுக்கு நிகழ்ந்த மிகப் பெரும் அநியாயமாகும். அவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.  

ஒலுவில் கடலரிப்பினை உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வை ஒலுவில் கடலரிப்பினை உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வை Reviewed by Madawala News on 8/08/2016 11:20:00 AM Rating: 5