சபாநாயகருக்கு கூட்டு எதிர்கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை....


காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலத்திற்கு அனுமதி வழங்கினால் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவித்த போது, ''பிரதமரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவையின் அனுமதி பெறப்படாத சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட முறை காரணமாக அரசியல் சாசனம் மீறப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

எனவே, இந்த சட்ட மூலத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகருக்கு அதிகாரங்கள் இல்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அதனை அங்கீகரித்தால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு கூட்டு எதிர்கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை.... சபாநாயகருக்கு கூட்டு எதிர்கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை.... Reviewed by Madawala News on 8/19/2016 01:06:00 PM Rating: 5