Ad Space Available here

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மழை விட்டும் தூவானம் ஓயவில்லை...


ஏ. எல். முஹம்மது அஸ்லம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் புதிய உபவேந்தர் பேராசிரியர். எம். எம். நாஜீம் அவர்களின் நியமனத்துடன் இருண்ட யுகத்தினை விட்டு புது யுகத்தினுள் பிரவேசிக்கத் தொடங்கி சுமார் ஒருவருடம் கழிந்தும் மீண்டும் அப்பல்கலைக்கழகத்தில் சில புல்லுருவிகளின் துளிர்விடும் தன்மைகள் மேலோங்கிக் கொண்டிருக்கின்றன.அப்படியான நிகழ்வொன்று நேற்று (2016.08.20) நடைபெற்றது.

அரசின் புதிய உளர்கல்விப் பாடவிதான மறுசீரமைப்புக்கிணங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய தொழிநுட்ப பீடம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. 

அப்பீடத்தின் திறப்பு விழா மற்றும் இப்பல்கலைக்கழம் மிக நீண்ட நாட்களாக எதிர்கொண்ட பிரச்சினையான பட்டமளிப்பு விழா மண்டபம் ஒன்று இல்லாமை அதற்கான அடிக்கல் நடும் விழா என்பனவற்றை ஒருங்கிணைப்பாகக் கொண்டு ஒரு நிகழ்வு இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தலைமையில் உயர் கல்வியமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரிகல்ல அவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடாயிருந்தது.

இந்நிகழ்வுக்கு நடைபெறும் என ஒழுங்கு செய்யப்பட்ட தினம் காலைவரையில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாத பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் திடீர் என கறுப்பு ஆடை அணிந்து அமைச்சரின் வருகைக்கு எதிர்புத் தெரிவிக்க முற்பட்டனர். இதனால் குறித்த நிகழ்வு அமைச்சரின் வருகையில்லாமல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவரின் பிரசன்னத்துடன் நடந்தேறியது.

இவ்வாறு பல்கலைக்கழ மாணவர்கள் மிக அநாகரிகமான முறையில் முற்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வை குழப்பியது யாருடைய பின்னணியில் இந்நிகழ்வைக் குழப்பிய மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செய்த குற்றம் என்ன?

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் பதினைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி எந்தப் பட்டதாரிகளும் தொழிற்சந்தையில் போட்டியிட்டு தமது தொழிலைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு கட்டியம் கூறி அவர்களை வழிநடாத்திக் கொண்டிருக்கின்றது. 

இப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகிய எந்தப்பட்டதாரியும் தொழிலின்றி இருக்கவில்லை.

இந்நிலையில் இங்கு கடமையாற்றும் மிக பிற்போக்கான அறிவு கொண்ட சிலர் தாம் சாதாரண காரியாலய உதவியாராகக் கூட பணிக்கமர்த்த தகுதியற்றவர்கள் என்பதனால் தொடர்ந்தும் இப்பல்கலைக்கழத்தின் சுமூக ஓட்டத்தினைக் குழப்பி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கே முயற்சிக்கின்றனர்.இதன் ஒரு வடிவமே நேற்றைய நிகழ்வு.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நாட்டின் தேசிய பல்கலைக்கழகங்கள்; எதிலும் இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்களது கற்றல் செய்றபாடுகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றது. அந்தவகையில் இப்பல்கலைக்கழகம் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள்ளேயே விடுதிகளை வழங்கி மாணவர்களின் பொருளாதாரத்தில் பங்காற்றுகின்றது. ஆணால் இம்மாணவர்கள் அவ்வாறு பல்கலைக்கழகம் இதனைச் செய்வது கடமை என நினைக்கின்றனர். சலுகைகள் உரிமையாகாது என்பதனை இவர்கள் மறந்துவிட்டனர்.

இப்பல்கலைக்கழகத்தினை பார்த்துப் பார்த்து உருவாக்கிய சிருஷடி கர்த்தா என்ற பெருமை முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம். எல். ஏ. காதர் அவர்களைச் சாரும் ஆனால் இப்பல்கலைக்கழத்தினை வியாபாரப் பொருளாக மாற்றிய பெருமை அதனைத் தொடர்ந்து வந்த இரு உபவேந்தர்களைச் சாரும் ஒருவர் 'அரூப்' திட்டம் திட்டம் என பல்கலைக்கழகத்தினை பருப்புக் கடைந்த சட்டிபோல் ஆக்கிவிட்டுச் செல்ல அவர் ஆக்கிய சட்டியை நான் பொற்குடமாக மாற்றுவேன் எனக் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மற்றவர் பணப்பரிமாற்றப் பொருளாக மாற்றி கட்டிடங்களில் கொமிசன், சாப்பாட்டில் கொமிசன் என கொமிசன் கலாச்சாரத்தை ஆரம்பித்து விட்டுச் சென்றார். இந்த கொமிசன் கலாச்சாரத்தினால் கட்டுண்ட இங்குள்ள சிலர் தாம் விரும்பிய புதிய உபவேந்தரின் வருகையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் எதிர்பார்த்திருந்தனர்;. இவர்களது எண்ணத்தில் நல்லாட்சி அரசு மண்ணை வாரிப்பேட்டது. அதுவே களனிப் கல்கலைக்கழகத்தில் சுற்றாடலியல் துறையில் பேராசிரியராகக் கடமையற்றிய பேராசிரியர். எம். எம். நாஜீம் அவர்களை அதிமேதகு சனாதிபதி இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமித்தது. இவரின் வருகையுடன் ஐரேப்பாவின் நோயாளி துருக்கிபோல் காட்சியளித்த பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றது. கொமிசன் கலாசாரம் அடியோடு அறுக்கப்பட்டது, பல்கலைக்கழகத்தில் பறிக்கப்படும் தேங்காய் அரச சொத்தாகப் பார்க்கப்பட்டது, மது மாது தூக்கிவீசப்பட்டது, போலிப் பட்டாதாரிகளின் உருவாக்கம் தடுக்கப்பட்டது, நிதிமோசடிகள் மறுக்கப்பட்டன, படவிதானம் மறுசீரமைக்கப்பட்டது, இன்னும் பல மறுமலர்ச்சிகள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனைப் பொறுக்காத மறையெண்ணம் கொண்ட சிலரே இப்பல்கலைக்கழகத்தினை குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக துண்டுப் பிரசூரங்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், மாணவர்களைச் தூண்டிவிடுதல் போன்ற பஞ்சமா பாதகங்களைச் செய்துவிட்டு சாதாரண அப்பாவிகள் மீது பழிசுமர்த்திவிடுவதில் வல்லவர்கள். இவை இவர்களின் வரலற்றுப் பதிவுகள். இவற்றில் சிலவற்றை புதிய உபவேந்தர்மீது செய்தனர். ஆனால் கற்றவனுக்கு கையவு என்பது போல் புதிய உவேந்தர் அதனை அலட்டிக் கொள்ளவில்லை வேறு வழியில்லாமல் மாணவாகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய முயல்கின்றனர் அத்தீயவர்கள். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் கொண்டுவரவேண்டும் பல்கலைக்கழகத்தினை சுமூகமாக வழிநடாத்த உபவேந்தருக்கு கைகொடுக்கவேண்டும். அதற்கு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்று திரண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் அபிவிருத்தியினை எண்ணம் கொண்டு முனைப்புடன் செயற்பட்டு பல்கலைக்கழகத்தினை புல்லுருவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவே.

இல்லையெனில் இவர்களின் அடாவடித்தனமும் அத்துமீறல்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கும் அப்போது காகித்தில்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற சொல் காணப்படும்.    
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மழை விட்டும் தூவானம் ஓயவில்லை... தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மழை விட்டும் தூவானம் ஓயவில்லை... Reviewed by Madawala News on 8/21/2016 04:41:00 PM Rating: 5