Ad Space Available here

வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது முஸ்லீம் அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள்..


வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் 
(21-10-2006) நீதிமன்ற தீர்ப்பு  குறித்து முஸ்லிம் அரசியல் வாதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பின் ஒரு பகுதியை முஸ்லிம் தகவல் நிலையம் வழங்கிருந்தது. 

இவர்கள் ஒவ்வொருவரின் நிலை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதனை தொகுத்துத் தருகின்றேன். 

 சபூர் ஆதம். 

01-அதாவுல்லா
கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்படாமல் எனது உயிரை ஆண்டவன் எடுக்கக் கூடாது என பல கூட்டங்களில் கூறி வந்திருக்கின்றேன்.அதேபோன்று பிரார்த்தித்துமிருக்கின்றேன். அதற்கு நல்ல முடிவு தற்போது கிடைத்திருக்கின்றது. அதற்காக நீதித்துறையையும் பிரதம நீதியரசர்  மற்றும் நீதியரசர்களை நன்றியுடன் பாராட்டுகின்றேன்.
இன்று எனக்கு முக்கியமாக நாள். இனிமேல் எனக்கு கவலையில்லை. மரணத்தைக் கூட நிம்மதியாக ஏற்றுக்கொள்வேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகள் கறுப்புப் பட்டிகளை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது நான் அங்கு மணித்தியாலக் கணக்கில் பேசினேன். வடக்கு, கிழக்கை தந்தை செல்வா இணைக்கவில்லை நீங்களே கபடத்தனமாக இணைத்தீர்கள், கபளீகரம் செய்தீர்கள். கிழக்கு மக்களின் விருப்புக்கு மாறாக செயற்பட்டீர்கள். எனவே வடக்கு, கிழக்கு தொடர்ந்து இணைந்திருக்காது எனவும் குறிப்பிட்டேன். அன்று புனித நோன்போடு பேசிய வார்த்தைக்கு 5 நாட்களின் பின்பு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

இரத்தம் சிந்தாமல், மரணங்களின்றி சர்வஜன வாக்கெடுப்பின்றி தற்போது விடுதலை கிடைத்திருக்கின்றது. 1987இல் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கலில் கிழக்கு இணைக்கப்பட்டது. அன்று எமக்கு பிடித்த உடல் நடுக்கம், துடிப்பு இன்று தான் நீங்கியிருக்கின்றது என்றார்

02-ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் எமது முன்னாள் தலைவர்  எம்.எச்.எம்.அஷ்ரபின் காலம் தொட்டு நிபந்தனையுடனான வடக்கு – கிழக்கு இணைப்பை நாங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தோம்.

அன்றைய அரசு 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களிடம் எதையும் கேட்கவில்லை. அதேபோன்று இன்று வடக்கு – கிழக்கைப் பிரிப்பதிலும் முஸ்லிம்களுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை. வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் பிரதான அரசியல் அபிலாசை,  அங்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இனத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை அலகு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

வடக்கு முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்வரையில் அச்சமூகத்திற்கு 1990இல் பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வடக்கு முஸ்லிம் சமூகத்தினர் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி மோசமான சூழ்நிலைகளில் அகதி முகாம்களில் துயர வாழ்வை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதியுடன் பதினேழு வருடங்கள் பூர்த்தியாகிறது. 

சர்வதேச அபிப்பிராயப்படி இச்செயலானது இனச்சுத்திகர்ப்பாக கருதப்படுவதோடு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில மனித உரிமை மீறல்கள் முஸ்லிம் சமூகத்தின் சமூக படுகொலையாகவே கண்டிக்கப்பட்டு நோக்கப்படுகிறது.

03-சேகு இஸ்ஸதீன் 
வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பு தொடர்பான வழக்கில் அதியுச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வட-கிழக்கு முஸ்லிம்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளில் ஒரு தனித்தரப்பாக ஏற்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. என்றார்;.

மேலும் கூறுகையில்: மாகாண சபைச் சட்டத்தின் பிரிவு 31(1) (ஆ) வுக்கமைய ஆயுதக் கையளிப்பும், மோதல் தவிர்ப்புகளும் நிறைவேற்றப்படுவது வடக்கு, கிழக்கு இணைப்புக்கான நிபந்தனைகளாகும். கடந்த 18 வருடங்களாக இது நிறைவேற்றப்படாத நிலையில் மனுதராரின் கோரிக்கைக்கு நீதிமன்றம் மதிப்பளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தத் தீர்ப்பு உள், வெளிநாடுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். எனினும் இந்தத் தீர்ப்பு பயங்கரவாதத்தைப் பணிய வைக்குமென்றோ தமிழீழக் கோரிக்கையை தவிடுபொடியாக்குமென்றோ என்னத்தேவையில்லை.
வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவது முஸ்லிம்கள் எடுக்கப்போகும் தீர்மானத்திலேயே தங்கியிருக்கும். கிழக்கில் அப்போது நடைபெறச்சாத்தியமான மக்களபிப்பிராய வாக்கெடுப்பில், முஸ்லிம் இணைவுக்கு ஆதரவளித்தால் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட்டு ஒரு தமிழ்மொழி அலகாகும். இதனாலேயே இந்த நீதிமன்றத் தீர்ப்பு முஸ்லிம்களின் முக்கியத்துவத்தையும் அந்தஸ்தையும் அதிகரிக்கும் விளைவைக்கொண்டுள்ளது.

மாறிமாறி வந்த அரசாங்கங்களும், விடுதலைப் புலிகளும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாகவும், கறிவேப்பிலையாயும் பயன்படுத்தி வந்துள்ளது. கசப்பான வரலாறு ஆகும். ஆனால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு முஸ்லிம்களை செல்லப்பிள்ளைகளாகும் தகைமையைக் கொண்டுள்ளது.

முஸ்லிம்களை ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள இணங்குபவரையும், மறுப்பரையும் அடையாளம் காணவும், தமது அபிலாஷைகளை யாருடன் சேர்த்து வென்றெடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கவும் வேண்டும்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுகூடி ஒரு மாநாட்டைக் கூட்டி தீர்மானம் எடுத்து ஒற்றுமையாய் செயற்படுவது அவசியமாகும்.
வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது முஸ்லீம் அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள்.. வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது முஸ்லீம் அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள்.. Reviewed by Madawala News on 8/19/2016 07:54:00 PM Rating: 5