tg travels

யாப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான எதிர்பார்ப்புகள். திட்டமிடல் அமர்வின் தீர்மானங்கள்


கடந்த 27-08-2016 அன்று யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விஷேட திட்டமிடல் அமர்வின்போது  யாப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் தொடர்பிலான அரச நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய மீள்குடியேற்ற நிலை குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன, அதன் பின்னர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றத்தின்போது கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் முன்மொழிவுகளாக முன்வைக்கப்பட்டன. இவை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பிரமுகர்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டன. 

வடக்கு மண்ணில் போர் ஓய்ந்திருக்கின்றது, அச்சம் குறைந்த சூழல் ஏற்பட்டிருக்கின்றது, ஜனநாயக சூழல் மெதுமெதுவாக ஏற்படுகின்றது; தமிழ் மக்கள் இதுநாள்வரை எதிர்நோக்கிய அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை அரசாங்கமும், சர்வதேச சமூகமும் நம்பிக்கைதருகின்ற நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றன; இவ்வாறான  சூழ்நிலையில்; நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் குறித்து அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சமகாலத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கவனம் செலுத்தப்படவேண்டிய மற்றொரு மக்கள் தரப்பொன்றின் அபிலாஷைகளை இங்கு பொதுவான கவனத்திற்கு முன்வைக்கின்றோம்.

1990களில் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஒரு சாதாரண நிகழ்வாக நோக்க முடியாது; அது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை, அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாடு, சிறுபான்மை சமூகமொன்றுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடு; இதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இத்தகைய ஒரு நிகழ்வு இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியுமாக இருந்தாலும்; இது நடந்தேறிவிட்டது. இதன்மூலம் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியொன்று ஏற்பட்டுள்ளது. இது பலவிதமான சமூகவியல் தாங்களை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இது தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கும் தீர்வு அவசியப்படுகின்றது. நீதி நிலைநாட்டப்படுதல் அவசியப்படுகின்றது, பரிகாரம் அவசியப்படுகின்றது.

முன்னோக்கிச் சிந்திக்கின்ற சமூகங்கள் என்ற ரீதியில் வடக்கின் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இதன் தாக்கங்களை துள்ளியமாக உய்த்தறிந்து, இத்தகைய மோசமான நிகழ்வின் அழிவுகளில் இருந்து மீள்வதற்கு தம்மை தயார் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இரண்டு சமூகங்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வும், நல்லிணக்கமும், சகவாழ்வும் மீண்டும் கட்டியெழுப்பப்படுதல் அவசியமாகும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

பொதுவாக இரண்டு இனத்துவங்களுக்கிடையில் முரண்பாடுகள் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அவர்கள் தமது முரண்பாடுகளுக்கான காரணிகளைக் கண்டறிந்து; முரண்பாட்டின் மூலம் ஏற்பட்ட இழப்புகளைக் கண்டறிந்து; தமது செயற்பாடுகளில் தவறுகள் இருக்கின்ற என்பதை பரஸ்பரம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு, இரண்டு சமூகங்களும் முன்னோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து, அவ்வாறான முன்னோக்கிய பாதையில் பயணிப்பதுவே மானுட மரபு; இதனையே வடக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமக்கிடையே மேற்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். அத்தகைய ஒரு செயற்திட்டத்தின் மிக ஆரம்பமான படிநிலையாக “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்” அமைந்திருக்கின்றது. 

·         அவர்கள் தமது பூர்வீக வாழிடங்களை நோக்கித் திரும்புதல் அவசியமாகும், அதற்கான ஏற்பாடுகள்; குறித்த பிரதேசத்தின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும், அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படவேண்டும். வெளியேற்றப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வை உறுதி செய்வதற்கு எதுவெல்லாம் அவசியபப்டுகின்றதோ அவற்றையெல்லாம் முன்னெடுப்பதுவே அவர்களுக்கான மீள்குடியேற்ற செயற்திட்டமாக இருக்க முடியும். மீள்குடியேற்றம் என்பது பின்வரும் மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியமாகும், மீள் உரிமை கோருதல்; மீளத்திரும்புதல்; மீளக்கட்டியமைத்தல்.

·         அடுத்து அந்த மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு,  சிறுபான்மை சமூகம் என்ற நிலையில் அரசியல் ரீதியான பங்கேற்பு, சமூக கலாசார விவகாரங்கள் போன்ற விடயங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

·         இரண்டு சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லிணக்கம்; மற்றும் சகவாழ்வு குறித்து சிந்திப்பதும், பொறுத்தமான செயன்முறைகளை முன்னெடுப்பதும் அவசியமாகின்றது.

·         “மீள்நிகழாமை” என்பதை வலியுறுத்தும் சமூக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.

இத்தகைய ஒரு நீண்ட செயற்திட்டத்தில் முதன்மை அம்சமாக விளங்குகின்ற “முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம்” சார்ந்து குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து சிவில் சமூகத்தவர்களின் எதிர்பார்ப்புகளை முன்மொழிவுகளாக இங்கே முன்வைக்கின்றோம்.

பொதுவாக வடக்கு முஸ்லிம்களின் விவகராமனது பின்வரும் படிமுறைகளில் முன்னெடுக்கப்படுதல் சிறப்பானதாக இருக்கும் என்பது சிவில் சமூகத்தவரது நிலைப்பாடாக இருக்கின்றது.

·         வடக்கு முஸ்லிம்களினதும் பூர்வீகமே, அதன் அடிப்படையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம் மக்களும், அவர்களது சந்ததியினரும் அவர்களுடைய பூர்வீக வாழிடங்களில் முழுமையான மீள்குடியேற்றம் செய்யப்படல் வேண்டும் அத்தோடு, சகல உரிமைகளையும் கொண்ட சமத்துவமானதும், சுதந்திரமானதுமான வாழ்வுநிலை அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்படுதல் வேண்டும்.

·         வடக்கில் பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ் மக்களோடு, வடக்கின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம் மக்கள் எப்போதுமே நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகின்றார்கள், இதற்கு ஏற்றவிதத்தில் இரு சமூகங்களினதும் பரஸ்பர ஐயங்கள் களையப்பட்டு, தவறுகளை மன்னித்து சகஜமான வாழ்வை உறுதி செய்தல் வேண்டும்.

·         அரசியலமைப்பு ரீதியாக வடக்கு முஸ்லிம் மக்களுக்கு ஜனநாயக ரீதியான அவர்களுடைய பிரதிநிதித்துவம், சட்டத்தின் முன்னர் சமமான நிலைமை, பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய மத கலாசார விடயங்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகளும் உத்தரவாதங்களும் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

ஆகிய மூன்று விடயங்களே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும், இவற்றை மேற்குறித்த ஒழுங்கில் நிறைவேற்றுவதே வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்திற்கான பரிகாரமாக அமையும் என நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். என்றும் குறித்த முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விரிவான யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கோரிக்கைகள் பின்வருமாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

27ம் நாள் ஆக்ஸ்ட் 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.30 வரை யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் வைத்திய கலாநிதி எம்.எஸ்.எம்.ஹிஜாஸ் மற்றும் அஷ்-ஷெய்க் நஜா முஹம்மத் தலைமையில் ஒன்று கூடிய யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மேற்சொன்ன பரிந்துரைகளை முன்மொழிந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நல்லிணக்கம், அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்கள் என்னும் விடயதானங்கள் உள்ளடங்கிய முன்மொழிவுகளை, இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சகள்,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலளர்கள், தமிழ் மக்களின் சிவில் சமூகத் தலைவர்கள்,  உதவி வழங்கும் நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் முன்னிலைப்படுத்துகின்றோம். அத்தோடு எமது முன்மொழிவுகளை ஐ.நா மன்றம், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள், வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் முன்னிலைப்படுத்துகின்றோம். 

மேற்படி ஆவணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின்; யாழ் முஸ்லிம் வட்டாரம், புதிய சோனகர் தெரு, மண்கும்பான், நெய்னாதீவு, சாவகச்சேரி, பருத்தித்துறை, யாழ் நகர், ஆகிய பகுதிகளையும் கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா, வட்டக்கச்சி, கிளிநொச்சி நகர் ஆகிய முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களையும், புத்தளம், கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 47 சிவில் சமூகப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். 

மேற்படி ஆவணம் எதிர்வரும் நாட்களில் உரிய தரப்பினர் அனைவருக்கும் கையளிக்கப்படவிருக்கின்றது. மேற்படி சிவில் சமூக ஒன்றுகூடல் மற்றும் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியும் வடக்கு மாகாணசபை உறுப்பினரும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளருமாகிய கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்; என்.எம்.அப்துல்லாஹ். 


யாப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான எதிர்பார்ப்புகள். திட்டமிடல் அமர்வின் தீர்மானங்கள் யாப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான எதிர்பார்ப்புகள். திட்டமிடல் அமர்வின் தீர்மானங்கள் Reviewed by Madawala News on 8/31/2016 03:17:00 PM Rating: 5