Ad Space Available here

இஸ்லாத்துக்கும் உர்கியுர் முஸ்லிம்களுக்கும் எதிரான சீனாவின் கொடிய யுத்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். c-லத்தீப் பாரூக்-

பலஸ்தீனத்துக்கும் காஷ்மீருக்கும் நடப்பது போலவே உலகம் சீனாவின் சின்ஜியான் மாநிலத்தில் உர்கியுர் இனத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்து வரும் கொடுமைகளையும் உலகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

1949ல் இந்தப் பிரதேசத்தை சீனாவின் செம்படை ஆக்கிரமித்தது முதல் தமது அரசியல் பொருளாதார கலாசார உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக இந்த மக்கள் போராடி வருகின்றனர்.

சீனாவின் மேற்குப் பகுதியில் மூலோபாய முக்கியத்தவம் மிக்க பிராந்தியமே சின்ஜியான் மாநிலமாகும். இது ஒரு காலத்தில் கிழக்கு துர்கிஸ்தான் என அழைக்கப்பட்டது. உர்கியுர் இன முஸ்லிம்களே இங்கு பெரும்பாலும் வசித்து வந்தனர்.

இவர்கள் ஒரு காலத்தில் பண்டைய பட்டுப்பாதையை கட்டி ஆண்டவர்கள். இனரீதியாக துர்கிய வம்சா வழியினர். இவர்கள் பேசும் மொழி கூட துருக்கி மொழியின் சாயல் கொண்டது. இவர்கள் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியில் இங்கு வாழ்ந்து வந்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் கலாசார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தில் இவர்கள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளனர்.
சீனாவின் இயற்கை எல்லைகளுக்கு அப்பால் பண்டைய வாகனத் தொடரணி பாதையில் அமைந்துள்ள உர்கியுர் மத்திய ஆசியாவின் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அமைந்துள்ளது.

சின்ஜியான் உர்கியுர் சுயாட்சி பிரதேசம் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி சீன அரசின் கிழக்கு துர்கிஸ்தானிடம் இருந்து இந்தப் பெயரைப் பெற்றது. இது ஆரம்பம் முதலே பல்வேறு மனக்கசப்புகளுக்கு ஆளான ஒரு பிராந்தியம். 1759ல் இந்த பிராந்தியத்தை ஆக்கிரமித்த மான்சூ ஆட்சியாளர்கள் இதை சீனாவுடன் இணைத்தனர்.

சீனாவின் கனிமங்கள் அல்லது உலோகங்கள் வளத்தில் பெரும் பகுதி இந்தப் பகுதியிலேயே  உள்ளது. நிலக்கரி வளத்தில் 38 வீதமும், பெற்றோலிய வளத்தில் 25 சதவீதமும். மற்றும் இயற்கை வாயுவில் கணிசமான பகுதியும் இங்கு தான் காணப்படுகின்றது. சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 16 வீதத்தைக் கொண்ட மிகப் பெரிய மாநிலமும் இதுவே.

ஆனால் சீன சனத் தொகையில் 1.6 வீதம் மட்டுமே இங்கு உள்ளனர். சீனாவுடன் மிக முக்கிய மூலோபாய தொடர்பினை இது கொண்டுள்ளது.

இங்கு தான் சீனா அதன் அணு பரிசோதனைகளை நடத்துகின்றது. (சீனாவும்
ரஷ்யாவும் என்னதான் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இரு நாடுகளுமே அவர்களின் அணு சோதனைகளை நடத்துவது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளிலேயே. இதனால் ஏற்படும் நீர் மற்றும் நிலம் மாசடைதல், பக்க விளைவுகளால் ஏற்படும் புற்று நோய் பிரசவ கோளாறுகள் என எல்லா தாக்கங்களும் முஸ்லிம்களைப் பாதிக்கட்டும் என்பதுதான் இவர்களின் கொள்கை)

சின்ஜியானில் உள்ள உலோக வள செல்வத்துக்கும் அப்பால் இங்குள்ள முஸ்லிம்களுள் 90 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வாடுகின்றனர். முன்னாள் சீன தலைவர் மாஓ சேதுங் வடிவமைத்த தீவிர சனத்தொகை மாற்ற கொள்கையின் விளைவாக சின்ஜியானின் ஹான் சமூகம் துரித வளர்ச்சி காணத் தொடங்கியது. 1949ல் இந்த சமூகத்தின் சனத்தொகை வெறும் ஆறு வீதமாக இருந்து 1978ல் 40 வீதமாக அதிகரித்தது. இதன் மூலம் தமது பாரம்பரிய இடத்தில் உர்கியுர் இன முஸ்லிம்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நுட்பமாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டனர்.
இன்று இந்த உர்கியுர் மற்றும் ஹான் இனங்களின் விகிதாசாரம் 9:1 மற்றும் 1:9 ஆக காணப்படுகின்றது. வந்தேறு குடிகளான ஹான் சமூகத்தவர்களுக்கு தான் சீனா தொழில் வாய்ப்புக்களிலும் ஏனைய விடயங்களிலும் முன்னுரிமை அளிக்கின்றது. இந்தப் பிராந்தியத்தில் முதலீட்டுக்காக சீனா குவித்து வரும் பணத்தின் மூலம் ஆகக் கூடுதலான நன்மைகளை ஹான் சமூகத்தவர்களே அனுபவித்து வருகின்றனர்.


இதனால் தவிர்க்க முடியாத வகையில் இரு சமூகங்களுக்கும் இடையில் வெறுப்புணாவும் வளர்ச்சி கண்டுள்ளது.

சீன அரசுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்த விரிசல் சோவியத் ரஷ்;யாவின் வீழ்ச்சியோடு இதன் எல்லைகளில் புதிய மத்திய ஆசிய குடியரசுகள் தோற்றம் பெற்றதை அடுத்து மேலும் விரிவடைந்தது. உர்கியுர் முஸ்லிம்களும் தமது அரசியல் கலாசார மற்றும் சமய ரீதியான அடையாளங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தை தொடங்கினர். சாகும் வரை இந்தப் பேராட்டத்தை தொடரவும் அவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

பதிலுக்கு சீனாவும் இந்த மக்கள் மீது நம்ப முடியாத அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் பிரயோகித்து வருகின்றது. முஸ்லிம் போராட்டத்தோடு தொடர்புடைய பலர் இதுவரை கொல்லப்பட்டும் உள்ளனர்.

அடிக்கடி துப்பாக்கிப் பிரயோகங்களுக்கும் குண்டு வீச்சுக்கும் இங்கு பஞ்சமே இல்லை. அதேபோல் கைதுகள், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், படுகொலைகள் என்பனவும் இங்கு அன்றாடக் காட்சிகளாகிவிட்டன.
சின்ஜியானில் ஏற்பட்ட பிரிவினை போராட்டத்தை அடக்க சீனா பல மத்திய ஆசிய நாடுகளுடன் அவர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளும் வகையிலான உடன்படிக்கைகளையும்  செய்துள்ளது.

சீனாவின் உர்கியுர் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பாரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன என்பதே சகல சர்வதேச மனித உரிமை குறிகாட்டிகளும் சுட்டி நிற்கின்ற விடயமாகும்.
நியு யோhக்கில் இடம்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா பிரகடனம் செய்த உலகளாவிய யுத்தத்தை பயன்படுத்தி சீனாவும் உர்கியுர் முஸ்லிம்களை பெருமளவில் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு சில தினங்களில் முடிவுற்றன.

பெரும்பாலும் அந்த விசாரணைகளின் முடிவில் மரண தண்டனைகளே வழங்கப்பட்டன. தண்டனை வழங்கப்பட்ட அதே தினத்தில் அவை நிறைவேற்றவும் பட்டன. இப்போது இந்த மக்கள் வெளிநாட்டவர்களுடன் மட்டும் அன்றி தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவே அச்சம் அடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

சமய ரீதியான கட்டுப்பாடுகள்

இஸ்லாம்தான் இந்த மக்களின் கலாசாரத்தோடும் தனித்துவத்தோடும் தொடர்பு பட்ட ஒரு மார்க்கம். கி.பி. 934ல்இஸ்லாம் இங்கு பரவத் தெடங்கியது. மத்திய ஆசிய பகுதியில் கேந்திர முக்கியத்தவம் வாயந்த நிலையமான கஷ்கர் தான் இந்தப் பகுதியின் பிரதான இஸ்லாமிய நிலையமாக இருந்தது. புள்ளிவிவரங்களின் படி இந்தப் பிராந்தியத்தில் 23700 பள்ளிவாசல்கள் காணப்பட்டன. ஆனால் இந்த சிறப்பான தனித்துவத்தை அழிக்க வேண்டும் என்று பேஜிங் திடசங்கற்பம் பூண்டது. இஸ்லாத்தை பின்பற்றுவதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் விதிக்கத் தொடங்கியது.


மாஓ சேதுங்கின் கலாசார புரட்சியின் போது கடைப்பிடிக்கத் தொடங்கிய அடக்குமுறை கொள்கை இன்று வரை தொடருகின்றது. உர்கியுர் முஸ்லிம்கள் எவ்வாறு பன்றிகளை வளர்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், பள்ளிவாசல்கள் எவ்வாறு இழுத்து மூடப்பட்டன, அவ்வாறு இழுத்து மூடப்பட்ட பள்ளிவாசல்கள் எவ்வாறு பன்றி இறைச்சி விற்பனை காட்சி கூடங்களாக மாற்றப்பட்டன என்பதற்கெல்லாம் மனித உரிமை கண்கானிப்பகத்தின் அறிக்கைகள் சான்றுகளாக அமைந்துள்ளன.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மீது அளவுக்கதிகமான கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8000 இமாம்களுக்கு பலவந்தமாக கம்யுனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் திணிக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் இனவாத மற்றும் சமய கொள்கைகள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டது. குர்ஆனை போதித்தமைக்காக சில இமாம்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்த பிரசாரத்தின் கீழ் சமய பாடசாலைகள் தடை செய்யப்பட்டன. பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டதோடு புதிய பள்ளிவாசல்கள் கட்டப்படுவதும் தடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் இமாம்களுக்கு கம்யூனிஸம் பலவந்தமாகப் புகுத்தப்பட்டு அதன் படி பிரசாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் அனுமதியின்றி யாரும் தனிப்பட்ட முறையில் சமய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது தடை செய்யப்பட்டது.

அமைதியான முறையில் நடத்தப்பட்ட சமய நிகழ்வுகளுக்குள் பொலிஸ் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். அந்த சமய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கியவர்கள் கைது செய்யப்பட்டு பலர் நீண்டகாலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அரச ஊழியர்கள் பள்ளிகளுக்கு சென்றால் தொழிலை இழக்கும் ஆபத்து உருவாக்கப்பட்டது.


லண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை கண்கானிப்பு மையம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவற்றின் தகவல் படி புனித நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கு கூட கண்டிப்பான தடை விதிக்கப்பட்டது.

இந்த காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகள் பல இடங்களில் தொடர்ந்தன. இரவு நேரங்களில் மாணவர்கள் தங்கு விடுதிகள் உட்பட பல விடுதிகளும் சுற்றி வளைத்து சோதிக்கப்பட்டன. காரணம் இரவு நேரங்களில் தொழுகைகள் அங்கு இடம்பெறக் கூடாது என்பதுதான். குர்ஆனை கற்றுக் கொள்ளும் கூட்டங்களுக்கும் சமயப் பாடசாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. வரலாற்றுப் புத்தகங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டது.


அரசாங்க கட்டுப்பாடின்றி இஸ்லாத்தைப் பற்றி பேசுவதோ அல்லதோ பிரசாரம் செய்வதோ தேசத் துரோகத்துக்கு நிகரான குற்றமாகக் கருதப்பட்டது. இந்த விதிமுறையை மீறிய நூற்றுக்கணக்கான உர்கியுர் முஸ்லிம்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கலாசாரத்தின் மீதான சிலுவை யுத்தம்

முஸ்லிம்களின்; சமயத்தின் மீதும் அவர்களது பாரம்பரிய நாட்டுப் புற கலாசாரத்தின் மீதும் சீன அதிகாரிகள் அத்துமீறினர். திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள் என்பனவற்றில் தலையிட்ட அவர்கள் விருத்தசேதனத்தை கூட விட்டு வைக்கவில்லை. இவ்வாறான நிகழ்வுகளை நடத்தவோ அல்லது அவற்றில் பங்குபற்றவோ அரசின் அனுமதி கோர வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. அல்லது அவ்வாறான நிகழ்வுகள் முடிவுற்றால் அவை பற்றிய விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

தமது நிலை பற்றி கருத்து வெளியட்டுள்ள உர்கியுர் முஸ்லிம் தலைவர் ஒருவர் 'சீனாவில் விரைவாக அழிந்து வரும் உயிரினமான பண்டாக்களைப் போல் தான் எங்களையும் சீனர்கள் கருதுகின்றனர்' என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதை

சட்விரோதமான முறையில் நூற்றுக்கணக்கான உர்கியுர் இனத்தவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக சர்வதேச மன்னிப்பச் சபை பல பதிவுகளைக் கொண்டுள்ளது. தங்களது சுதந்திரத்துக்காக அந்த மக்கள் குரல் கொடுப்பதை தடுக்க சீனா சகலவிதமான அடக்கு முறைகளையும் சித்திரவதை முறைகளையும் பிரயோகித்து வருகின்றது. இதுவரை வேறு நாடுகளில் பயன்படுத்தப்படாத கொடூரமான, நோவினை மிக்க வினோதமானசித்திரவதை முறைகள் பலவற்றை சீனா பிரயோகித்து வருகின்றது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மேரி
ரொபின்ஸன் ஒரு தடவை சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் சின்ஜியாங்கில் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வெளிப்படையாக எச்சரித்திருந்தார்.

அண்மையில் சீன அரசாங்கத்தின் நமவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் அந்நாட்டின் குற்றவியல் சட்டக் கோவையில் செய்யப்பட்ட மாற்றங்களையும் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.

ஆனால் முஸ்லிம்களுடனான இந்த மோதலை சீனா அதன் மக்களிடம் இருந்தும் வெளி உலகிடமிருந்தும், கடல்கடந்த முதலீட்டாளர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளிடம் இருந்தும் மறைத்து வருகின்றது. அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார நன்மைகளுக்காக சீனாவிலும் தங்கியுள்ள முஸ்லிம் நாடுகளையும் அது சாதுர்யமாக ஏமாற்றி வருகின்றது. இதனால் முஸ்லிம் நாடுகளும் சின்ஜியான் பற்றி வாய் திறப்பதில்லை.

ராஜதந்திரிகளை சீனா மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றது. உதவியாளர்கள் இன்றி உல்லாச பயணிகள் கூட இங்கு செல்ல முடியாது.
இவ்வாறான சூழ்நிலைகளின் கீழ் சீனா மிகவும் திட்டமிட்ட முறையில் சனத்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. சின்ஜியானில் கட்டாய கருக்கலைப்பு உட்பட இன்னும் பல சட்விரோத நடவடிக்கைகளும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. உலகில் முஸ்லிம்கள் வாழ முடியாத மிக மோசமான இடம் சின்ஜியான் தான் எனக் கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இஸ்லாத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம், இஸ்ரேலுடன் முன்னொருபோதும் இல்லாத அளவு நெருக்கம் என்பனவற்றின் பின்னணியில் தான் இவை இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்கா தலைமையில் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற நிலையில் காஷ்மீர் மற்றும் பலஸ்தீனம் போலவே சீனாவின் சின்ஜியான் மாநிலமும் அங்கு வாழும் முஸ்லிம்களும் மறக்கப்பட்ட மனிதர்களாகிவிட்டனர்.


இஸ்லாத்துக்கும் உர்கியுர் முஸ்லிம்களுக்கும் எதிரான சீனாவின் கொடிய யுத்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். c இஸ்லாத்துக்கும் உர்கியுர் முஸ்லிம்களுக்கும் எதிரான சீனாவின் கொடிய யுத்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். c Reviewed by Madawala News on 8/28/2016 08:21:00 PM Rating: 5