உத்தியோகக் கடமைக்காக அரசின் எரிபொருளை பெற்றுக் கொண்டு மோசடி புரியும் கிழக்கு மாகாண வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிலர். i



(ஏ.எல்.எம்.அஸ்லம்)

உத்தியோகக் கடமைக்காக அரசாங்கத்தின் எரிபொருள் கொடுப்பனவு பெறும் கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் தமது சொந்த வாகனங்களை பயன்படுத்தாது அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட கிடப்பு வாகனங்களைப் பயன்படுத்தி மோசடியான முறையில் பயன்படுத்தி வருதனால் குறித்த கொடுப்பனவு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கோரிக்கையை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்களில் வலயக்கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றுவோருக்கு தத்தமது வலயங்களுக்குள்ளும், மாவட்டத்திற்குள்ளும் உத்தியோகக் கடமைகளை மேற்கொள்வதற்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக ரூபா. 50,000 ற்கு மேற்பட்ட கொடுப்பனவொன்று வழங்கப்பட்டு வருகிறது. இக்கொடுப்பனவை கொடுப்பதற்கான பிரதான நிபந்தனை அவர்களது சொந்த வாகனத்தை உத்தியோகப் பயணங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள மேற்படி வலயக்கல்விப் பணிப்பாளர்களில் சிலர் இக்கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டு தமது சொந்த வாகனங்களை உத்தியோக்க கடமைக்குப் பயன்படுத்தாமல் தமக்கு குறித்தொதுக்கப்படாத அலுவலகங்களுக்கு கிடப்பு வாகனங்களாக வழங்கப்பட்ட வாகனங்களை உத்தியோகக் கடமைக்கு பயன்படுத்தி வருவதுடன் இவ்வாகனங்களை ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வழங்காது தமது சொந்தப் பொறுப்பில் வைத்துள்ளனர்.

எனவே, இவ்வாறு எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டு அரச வாகனத்தையும் பயன்படுத்தும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கான கொடுப்பனவையும் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மூதூர், மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் மாத்திரம் இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகக் கடமைக்காக அரசின் எரிபொருளை பெற்றுக் கொண்டு மோசடி புரியும் கிழக்கு மாகாண வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிலர். i உத்தியோகக் கடமைக்காக அரசின் எரிபொருளை பெற்றுக் கொண்டு மோசடி புரியும் கிழக்கு மாகாண வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிலர். i Reviewed by Madawala News on 8/01/2016 08:03:00 AM Rating: 5