Thursday, August 25, 2016

முஸ்லிம் அரசியல் குழுக்களின் முரண்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடுவது, முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும். i

Published by Madawala News on Thursday, August 25, 2016  | -இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் -

முஸ்லிம் தனியலகு, கரையோர மாவட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரங்கள் பரந்து பட்ட உள்ளக கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படல் களத்தின் கட்டாயமாகும், சிவில் தலைமைகளை கலந்தாலோசிக்காது முஸ்லிம் அரசியல் குழுக்கள் முரண்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடுவது பலவேறுபட்ட தரப்புக்களாலும் முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப் படுவதற்கே வழிவகுக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் பரந்துபட்டு வாழும் முஸ்லிம்கள், வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் புதிய அரசியல் கள நிலவரங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் என்பவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

முஸ்லிம் தனியலகு கோரிக்கைக்கான பின்புலம்!

1983 ஜூலைக் கலவரம் அதைத் தொடர்ந்து முடுக்கி விடப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் இந்தியாவின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடுகள் என்பவை அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் தலைமையிலான ஆட்சியை அரசியல் தீர்வு முயற்சிகளை நோக்கி நகரத்தின.
திம்புப் பேச்சுவார்த்தை, சர்வ கட்சி வட்டமேசை மாநாடுகள் போன்ற அரசியல் நகர்வுகள் இடம் பெற்ற பொழுது இணைந்த வடகிழக்கில் வடகிழக்கு தமிழ் மக்களிற்கு சமஷ்டித் தீர்வு கோரிக்கைகள் முனவைக்கப் பட்ட பொழுது இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் மக்களுக்கான தனியான அதிகார அலகு, நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை சிபாரிசு செய்த அ திகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அன்று வட கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைப்பதாகவும் பின்னர் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வடகிழக்கில் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டு 1988 இல் தேர்தல்களும் இடம் பெற்றன.
கிழக்கில் சுமார் 45% அரசியல் வலுவினைக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் இணைந்த வடகிழக்கில் 17% அரசியல் வலுவற்ற சிறுபான்மையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரத்தில் முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும் உபாயங்கள்!

அதேபோல் வடக்கையும் கிழக்கையும் தொடர்ந்தும் இணைத்து வைப்பதா அல்லது தனித்தனி அதிகார அலகுகளாக மாற்றுவதா என்ற வாக்கெடுப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக மாற்றுகின்ற உபாயமும் அபாயமும் உணரப்பட்டது.

அவ்வாறான ஒரு சூழ் நிலையில்தான் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற அதிகார அலகு ஒன்றுவேண்டும் என்று ஆரம்பத்திலும், பின்னர் தென்கிழக்கில் ஒரு அதிகார அலகு வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைகளை முன்வைத்தது.
இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள், இந்தியப்படைகள், தமிழ் தேசியபபடையணி, மாகாண அரசு வடகிழக்கு முஸ்லிம்களை கையாண்ட விதமும் இலங்கை அரசின், இராணுவத்தின் பாராமுகமும் யுத்தமாயினும் சமாதானமாயினும் முஸ்லிம்கள் செலுத்திய விலை வரலாறாகிவிட்டது.
என்றாலும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாதிக ஹெல உறுமய கட்சி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பின் மூலம் வக்கீல் இருந்து கிழக்கு மாகாணம் வேறாக பிரிக்கப்பட்டது. 2008 இல் மாகாணசபை தேர்தலும் கிழக்கில் இடம் பெற்றது.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்

இப்பொழுது மீண்டும் இணைந்த வடகிழக்கில் அரசியல் தீர்வொன்றை தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் புலம் பெயர்ந்தோர் வேண்டி நிற்கும் நிலையிலும் சரவதேச மற்றும் இந்திய அழுத்தங்களின் பின் புலத்திலும் இந்த விவகாரம் முஸ்லிம் அர்சியல் மற்றும் சிவில் தலைமைகளால் மிகவும் நன்றாக ஆய்விற்கு உற்படுத்தப்டுதல் வேண்டும்.
வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரத்தில் மீண்டும் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளால் மாற்றப்படும் அபாய உபாயங்கள் தென்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் பரந்துபட்டு வாழும்- முஸ்லிம்கள், வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் புதிய அரசியல் கள நிலவரங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் என்பவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

மாறாக கடந்த காலங்களில் நாம் மனனமிட்ட சுலோகங்களை கிளிப்பிள்ளைகள் போல் உச்சரிப்பது ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது. இது குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்களை ஆய்வுப் பணிகளை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டயமாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரம்

1987 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தது போல் தற்பொழுது வடக்கும் கிழக்கும் வெவ்வேறு மாகாணங்களாக இருக்கின்றன , போருக்குப் பின்னரான தேசிய, பிராந்திய மற்றும் போகல அரசியல் நகர்வுகளின் பின்புலத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தேர்வுகளின் அவசியம் இந்தியா மற்றும் சர்வதேச தரப்புக்களாலும் தமிழ்த் தலைமைகளாலும் வலியுறுத்தப் படுகின்றன.

முஸ்லிம் சிவில் தலைமைகள் தமது மூன்று தசாப்தகால கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணம் தனித்தே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர், அதற்கு வலுச் சேர்கின்ற அரசியல் நிலைப்பாடுகளும் சமூகத் தளத்தில் இருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த வடகிழக்கில் தான் தீர்வு எனில் முஸ்லிம் தனியலகு குறித்து வலியுறத்தி வருகின்றது ஆனால் தாம் கோருகின்ற தனியலகு அதன் எல்லைகள், பரப்பளவு விஸ்தீரணம் அதிகாரங்கள் குறித்த எந்தவொரு நிலைப்பாட்டையும் எந்தவொரு கால கட்டத்திலும் அவர்கள் சமூகத்தின் பரந்து பட்ட கலந்துரையாடல்களுக்காகவோ ஆய்வுகளிர்காகவோ இதுவரை காலமும் முன் வைக்க வில்லை.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 70% நிலப்பரப்பு அரசினதும் இராணுவத்தினதும் கட்டுப் பாட்டில் இருக்க 27% நிலப்பரப்பு தமிழ் சிங்கள மக்களின் கட்டுப் பாட்டிலும்  3%  நிலப்பரப்பு மாத்திரமே முஸ்லிகளின் கட்டுப் பாட்டில் இருக்கின்றது, அதேபோன்றே உள்ளூராட்சி, மற்றும்பிரதேச சபை போன்ற அதிகார கட்டமைப்புக்களும் அவர்களது மேலாண்மையில் இருக்கின்றன, இந்த நிலையில் நன்கு  ஆராயப் படாத முஸ்லிம் தனியலகு கோரிக்கை எதிர்காலத்தில் முஸ்லிம்களை சொந்த மண்ணில் கைதிகளாக அல்லது அகதிகளாக மாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
     
கல்முனை கரையோர மாவட்டம்

கல்முனை சம்மாந்துறை பொத்துவில் ஆகிய மூன்று தேர்தல் தொகுதியையும் மையப்படுத்திய கரையோர மாவட்டத்தை மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் கோரியிருந்தார்கள், அதனையே சிலர் பின்னர்  முஸ்லிம் அரசியலின் பிரதான கோரிக்கையாகவும் தூக்கிப் பிடித்தனர், உண்மையில் அது விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதி நிதித் துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கோரிக்கை மாத்திரமே.

அவ்வாறான ஒரு கரையோர மாவட்டம் அதன் பரப்பளவு விஸ்தீரணம், உள்ளூராட்சி மன்ற மற்றும் பிரதேச செயலக அதிகார நியாயாதிக்க எல்லைகள் குறித்த எந்தவொரு தெளிவான முன்மொழிவுகளையும் கோஷங்களை முனவைக்கும் தரப்புக்கள் இதுவரை காலமும் முன்வைக்கவில்லை.

தற்போதைய நிலையில் அம்பாறை மாவத்தில் சுமார் இருபது பிரதேச செயலகப் பிரிவுகள் இருக்கின்றன அவற்றில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளே உத்தேச கரையோர மாவட்ட பிரதேசத்திற்குள் இருக்கின்றன ஏனைய பதினேழு பிரதேச செயலகப் பிரிவுகளும் அவை கொண்டுள்ள நில பரப்பளவும் அப்பிரதேசத்தில் சுமார் 95% மேலாண்மையை கொண்டுள்ளன, இந்த நிலையில் கலமோனைக் கரையோர மாவட்டக் கோரிக்கை மற்றுமொரு “காஸா” வை தாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்ளும் நகர்வாகவே அமையும்.    

கிழக்கு தனி மாகாணமாக இருப்பதுவும் அதில் மேலே சொல்லப்பட்ட விவகாரங்கள் கவனத்தில் எடுக்கப்பட்ட கரையோர மாவட்டம் அமைவதும் முஸ்லிம்களது நிலைப்பாடாக இருக்க முடியும். வடக்கும்  கிழக்கும் இணைக்கப் படுகின்ற இணக்கப்பாடு எய்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ள நிலையில் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குகின்ற இரு தரப்பு நகர்வுகளிற்கும் நாம் முந்திக் கொண்டு கழுத்தை நீட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

அதுவரை காத்திராது முன்னுரிமைப்படுத்தப் பட வேண்டிய விவகாரங்கள்:
தலைவர்களுக்காக காத்திராது முஸ்லிம் பிரதேசங்களில் உடனடியாக தீர்க்கமுடியுமான பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை, ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய தருணமிது.


வட மாகாண முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் யுத்தம் நிகழ்ந்த காலப்பிரிவில் விடுதலைப்புலிகளால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை மற்றும் இராணுவத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்படுள்ளமையால் இதுவரை முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.


பழைய அகதிகள் என்பதனால் வடபுல முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கு நிதி ஒதுக்க வில்லையாம், 20 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்களது பூர்வீக இடங்களில் அடுத்தவர்கள் குடியிருப்பதால் அவற்றை மீட்டெடுக்க சட்டத்தில் இடமில்லையாம்.


கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐம்பது ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் தமிழ்ப் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று வரை திருப்பிக் கொடுக்கப்படவில்லை.


முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேய்ச்சல், விளைச்சல் பாய்ச்சல் காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அனுமதிப்பத்திர காணிகளுக்கான பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமல் அகழ்வாராய்வு, திட்டமிட்ட குடியேற்றங்கள்இராணுவ முகாம்கள், அபிவிருத்தி திட்டங்கள்,பாதுக்காப்பு காரணங்கள்,புராதன சின்னங்கள் பாதுக்காப்பு என பல்வேறு நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன.


புல்மூட்டை முதல் பொத்துவில்  வரை முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமது விவசாய நிலங்களுக்கு முஸ்லிம் மக்கள் செல்வதில் இருந்து இராணுவத்தால் தடுக்கபப்டுகின்றனர்.


நுரைச்சோழையில் முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட 500 சுனாமி வீடுகள் இதுவரை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை,மாற்று இடங்கள் வழங்கப்படவும் இல்லை. தீகவாபி அபிவிருத்திக்கென இறக்காமம் வரை முஸ்லிம்களது பூர்வீக இடங்கள் சுவீகரிக்கபபட்டும், அடையாளப்படுத்தப் பட்டும் இருக்கின்றன.

ஒலுவில் மற்றும் அண்டிய பிரதேசங்களை கடலைரிப்பிளிருந்து பாதுகப்பாதற்கான ஏற்பாடுகளும் துறைமுகத்தை பிரதேச மக்காளின் பொருளாதரத்திற்கு பங்களிப்புச் செய்யும்  மீன்பிடித் துறைமுகமாக துரித கெதியில் அபிவிருத்தி செய்தல்.


கரையோரப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் வாழ்விடங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் அடிக்கடி வெள்ளம் வீடுகளுக்குள் பாய்கின்றமையால் வாழ்விடங்களிலும் மக்கள் நிம்மதி இழந்திருக்கின்றனர்.

அங்குள்ள வாழ்விடங்களை பொறுத்தவரை எதிர்கால சந்ததியினருக்கு மாத்திரமன்றி தற்பொழுதுள்ள தலை முறையினருக்கும் வீடு வளவு என காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் வீடமைப்பு திட்டங்கள், புதிய நகராக்கங்கள், காணிப் பங்கீடுகள், குடியேற்றத் திட்டங்கள் என முஸ்லிம்களுக்காக எந்தக் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவதுமில்லை, முஸ்லிம்கள் அவற்றில் உள்வாங்கப்படுவதுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கிராமசேவகர் பிரிவுகள்,பிரதேச சபை பிரிவுகள், பிரதேச சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மீள் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுகின்றன.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top