Tuesday, August 2, 2016

பாரிய கடன் சுமைகள் இருந்தபோதும் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கும் உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது. ஜனாதிபதி உறுதி. i

Published by Madawala News on Tuesday, August 2, 2016  | மேடைகளில் கற்பனைக் கதைகளைக் கூறிக்கொண்டு வீதிவலம் வருகின்றபோதும் கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளை தற்போது மக்கள் அனுபவிக்கவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற இலங்கை பொருளாதார மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்; இதனைத் தெரிவித்தார். 'கவனம், செயற்படல், நிறைவேற்றல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை வர்த்தக சங்கத்தினால் 17ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பொருளாதார மாநாடு, நாளையும் கொழும்பில் நடைபெறும்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது, இலங்கை தற்போது 9,000 மில்லியன் ரூபாய் கடன் சுமையை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்தப் பொருளாதார நிலைமையை அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொது மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளிலிருந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் பங்களிப்பு 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலாகும் என்றும் அதனை 20 சதவீதமாக உயர்த்த முடியுமாயின் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேலும் பலமான நிலைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கடன் சுமைகள் இருந்தபோதும் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கும் உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உதவிகளுக்காக செலவிடப்படும் நிதியை ஈட்டிக்கொள்வதற்காக உற்பத்தித்துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

 பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் அரச நிதி முகாமைத்துவத்தையும் நிதி ஒழுங்குகளையும் பேணி வரவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு அரசாங்கத்துறையும் தனியார்துறையும் ஒன்றாகச் செல்லும் ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அண்மைக்காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் இருந்து அரசாங்க பொருளாதாரத்துக்குக் கிடைத்த பங்களிப்பு தொடர்பில் திருப்தியடையக்கூடியதாக இல்லை என்றும் இலங்கையைச் சுற்றி இருக்கும் கடல் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய வளங்களில் இருந்து நாம் சரியான பயனைப் பெற்றுக்கொள்கிறோமா என்பதில் பிரச்சினைகள் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள வளங்களைப் பயன்படுத்துவதில் ஆசிய வலயத்தில் உயர்ந்த மட்டத்திலுள்ள ஒரு நாடு என்ற இதுவரை அடைந்துகொள்ள முடியாதுபோன கனவை நனவாக்குகின்ற நோக்குடன், பிரச்சினைகளில் இருந்து வெளியேறி அவற்றுக்குத் தீர்வுகளைத் தேடுவதிலும் சொற்களுக்குள் வரையுண்டுபோகாது செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி மற்றும் இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் சமன்த ரணதுங்க உள்ளிட்ட உறுப்பினர்களும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக சமூகத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top