Tuesday, August 2, 2016

"வலது கையால் கொடுப்பதை இடது கை அறியக்கூடாது" என்ற கோட்பாட்டில் தான் இவ்வளவு காலம் மெளனமாக இருந்தேன்.. ஆனால் இன்று கூற வேண்டி ஏற்பட்டு விட்டது. i

Published by Madawala News on Tuesday, August 2, 2016  | மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தை 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்திலிருந்து நானும், மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசியும் நீக்க நடவடிக்கை எடுப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறித்து இந்த விளக்கத்தை மக்கள் முன் வைப்பது சிறந்ததென கருதுகின்றேன்.

இப்பாடசாலையை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஏற்று, எனது சொந்த நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை கொண்டு ஆரம்பித்து, செரண்டிப் நிறுவனம், ஹமீதியா நிறுவனத் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோரின் அனுசரணையுடன் 140 இலட்சம் ரூபா செலவிட்டு முதலாவது கட்டட நிர்மாணப் பணியை முடித்தோம்.

இரண்டாவது கட்டமாக அவர்களின் உதவியுடன் 350 இலட்சம் ரூபா செலவில் புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அத்திவாரக்கல் வைக்கப்பட்டது.

இப்பாடசாலையை கட்டம் கட்டமாக செய்வதை விட பாரிய திட்டமொன்றை வரைந்து, சகல வசதிகளையும் கொண்ட ஒரு பூரண முதல்தர பாடசாலையாக உயர்த்த வேண்டும் என்ற எனது கருத்துக்கு இப்பாடசாலைக்கு உதவி செய்ய வந்த சகல தனவந்தர்களும் இணங்கி 2500 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாரிய திட்டத்தில் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள், கேட்போர் கூடம், விளையாட்டரங்கம்  நீச்சல் தடாகம் போன்றவை உள்ளடங்குகிறது.


இந்த பாரிய திட்டம் பூத்தியடையுமாக இருந்தால் அதன் பிறகு இந்தப் பாடசாலைக்கு இன்னும் 25 வருடங்களுக்கு அபிவிருத்திப் பணிகள் தேவைப்படாது. கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு கட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள், விளையாட்டத்துறைகளில் பெரும் முன்னேற்றத்தைக் காண முடிந்தது.
எனவே இப்பாடசாலையை கொழும்பில் முதல் தர பாடசாலையாக கட்டியெழுப்பின், மாளிகாவத்தை உட்பட கொழும்பு மாணவர்கள் சிறந்த கல்வியை பெற வசதியாக அமையும்.

மூன்று வருடங்களுக்கு முன் சகல தேவைகளையும் உள்ளடக்கிய 256 மில்லியன் ரூபா செலவிலான பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று இப்பாடசாலைக்காக ஆரம்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் போது கொழும்பிலுள்ள இதனை விட பல்வேறு குறைபாடுகளையுடைய எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றுக்கு இந்த திட்டத்தை உள்வாங்குவதன் மூலம் 65 மில்லியன் ரூபா செலவில் முஸ்லிம் சமூகத்தின் குறைபாட்டை ஏன் தீர்க்கக் கூடாதென பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

அரசாங்கம் 60 மில்லியனை கொழும்பிலுள்ள இன்னோர் பாடசாலையை அபிவிருத்தி செய்வதன் மூலம் இன்னுமோர் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு சாதகமாகும். இந்த யோசனையை மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பவுசி மாகாண சபையில் சமர்ப்பித்துள்ளார்.

நான் கொழும்பு கல்வி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என சில சக்திகள் செய்யும் பிரச்சாரம் அர்த்தமற்றது. பாத்திமா மகளிர் கல்லூரிக்கு 600 இலட்சம் ரூபாவும், கைரியா மகளிர் பாடசாலைக்கு 800 இலட்சமும், நானும் நவ்சர் பவுசியும் சேம் ஜெம் நிறுவனத்தின் தலைவர் ரிபாய் ஹாஜியாரிடமிருந்து பெற்றுக் கொடுத்து அப்பாடசாலைக்கு கட்டட, தளபாட உபகரணங்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த ஆசிரியர்களையும் பெற்றுக் கொடுத்தோம்.

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு சொந்த நிதியில் நான்கு மாடிக் கட்டடம் அமைத்தும், அதுபோல பல பாடசாலைகளுக்கு பாரிய கட்டடங்களை அமைத்தும் கொடுத்தோம். அல்-ஹிதாயா பாடசாலையில் தொழுகை வசதிக்கான பள்ளிக் கட்டடத்தை சொந்த செலவில் நிர்மாணித்தேன். இவையெல்லாம் எனக்கு அல்லாஹ்; தந்த அருட்கொடைக்கு நன்றியுள்ளவனாக செய்ததேயன்றி பேருக்கும், புகழுக்கும் அல்ல.

'வலது கையால் கொடுப்பதை இடது கை அறியக்கூடாது' என்ற இஸ்லாமிய கோட்பாட்டை ஏற்று நான் மௌனமாக இருந்தேன். நான் இதனை கூற நிர்ப்பந்திக்கப்பட்டதையிட்டு வருந்துகின்றேன்.

எமது திட்டத்தில் தாருஸ்ஸலாம் கொழும்பில் முதல் தர ஆண்கள் பாடசாலையாக உருவாகும் போது, அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் 60 மில்லியன் பணம் அல்-ஹிதாயா பாடசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டால் இன்னோர் சிறந்த மகளிர் கல்லூரி ஒன்று உருவாகும்.

பாத்திமா மகளிர், ஹைரியா மகளிர் பாடசாலைகளில் இட நெருக்கடியால் மாணவிகளை சேர்க்க முடியாத நிலையில், சர்வதேச பாடசாலைகளுக்கோ, முஸ்லிம் அல்லாத பாடசாலைகளுக்கோ மாணவிகள் செல்லாது தடுக்க அல்-ஹிதாயா மகளிர் பாடசாலை உதவும். ரிபாய் ஹாஜியார் ஹமீத் அல்-ஹூஸைனியா பாடசாலைக்கு எனது வேண்டுகோளை ஏற்று சொந்தமாக காணி வாங்கி கட்டடம் அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பொய்ப் பிரச்சாரங்களை இந்த நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள்.
இந்தப் பாரிய திட்டம் வெற்றி பெற “serandib”  நிறுவனம், ஹமீதியா தலைவர் பவுசுல் ஹமீத், செம் ஜெம் ரிபாய் ஹாஜியார் போன்ற பல தனவந்தர்கள் எம்முடன் கூட்டாக ஒத்துழைக்கின்றார்கள்.

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தில் தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தை நீக்கி இத்திட்டத்தை வேறு ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு உள்வாங்கி எமது பாரிய திட்டத்தின் மூலம் பூரண முதல்தர பாடசாலையாக உருவாக 'இன்ஷா அல்லாஹ்' எனது முயற்சிகள் பயனளிக்க அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எல்லோரின் ஆதரவை வேண்டுகிறேன்.

ஏ.எச்.எம்.பௌசி
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர். இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top